வெள்ளி, 28 அக்டோபர், 2022

இலக்கியநயம் பாராட்டல்



இலக்கிய நயம் பாராட்டுக.

முச்சங்கங் கூட்டி முதுபுலவர் தமைக் கூட்டி

அச்சங்கத் துள்ளே அளப்பரிய பொருள்கூட்டி

சொற்சங்க மாகச் சுவைமிகுந்த கவிகூட்டி

அற்புதங்க ளெல்லாம் அமைத்த பெருமாட்டி!

                                               - கண்ணதாசன் 

திரண்ட கருத்து 

கல்வியில் சிறந்த புலவர்களால் முச்சங்கத்தை அமைத்து, அச்சங்கத்தில் சொற்சுவை,பொருட்சுவை மிகுந்த கவிதைகளை உருவாக்கி, அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்தியவள் தமிழ்த்தாய். 

மோனைநயம்

முதலெழுத்து ஒன்றிவருவது மோனை.

முச்சங்கம்-முதுபுலவர் 

அச்சங்கம் -அளப்பரிய 

சொற்சங்கம் - சுவைமிகுந்த 

அற்புதங்கள் - அமைத்த 

எதுகைநயம் 

இரண்டாம் எழுத்து ஒன்றிவருவது எதுகை.

முச்சங்கம் - அச்சங்கம்

சொற்சங்கம் - அற்புதங்கள்

இயைபுநயம்

இறுதி எழுத்து,சீர் ஒன்றி வருவது.

கூட்டி,பெருமாட்டி 

சந்தநயம்

எதுகை, மோனைகளால் பாடலானது இசை நயம் , சந்தநயம் மிகுந்து வந்துள்ளது. 



பதினோராம் வகுப்பு பாடக்குறிப்பு

 நாள்: 31.10.22 - 4.11.22 

வகுப்பு: பதினோராம் வகுப்பு

பாடம் : தமிழ் 

தலைப்பு:இயல்7(நாடு, சமூகம்,அரசு, நிருவாகம்) 

•பதிற்றுப்பத்து

•ஆக்கப்பெயர்கள் 

கற்பித்தல் நோக்கங்கள்

சங்க இலக்கியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நாட்டுச் சிறப்பினை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுக்கற்றல். 

ஆக்கப் பெயர்களின் இன்றியமையாமை, நடைமுறைத்தேவை ஆகியவற்றை அறிந்து பயன்படுத்துதல். 

கற்பித்தல் உபகரணங்கள்

மடிக்கணினி

இணையம் 

வலையொளி 

கரும்பலகை 

ஆர்வமூட்டல்

எட்டுத்தொகை நூல்களின் பெயர்கள் கேட்டல் . 

முந்தைய வகுப்பில் கற்ற எட்டுத்தொகைப் பாடல்களை நினைவூட்டல். 

இடுகுறிப்பெயர்,காரணப்பெயர் குறித்து முந்தைய வகுப்பில் கற்ற செய்திகளை நினைவூட்டல். 

ஆசிரியர் செயல்பாடு 

பதிற்றுப்பத்து 

பதிற்றுப்பத்து நூலமைப்பு கூறுதல். சேரர்களில் புகழ்பெற்ற மன்னர்களை அறிமுகம் செய்தல். 

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,குமட்டூர்க்கண்ணனார் பற்றிக் கூறுதல். 

' நிரையவெள்ளம்' பாடல்தலைப்பின் பொருளை விளக்குதல்.

இரண்டாம் பத்து பாடியமைக்கு புலவர் பெற்ற பரிசிலைக்கூறுதல். 

பதிற்றுப்பத்து பாடலின்கருத்து குறளின் கருத்தோடு பொருந்திவருவதை விளக்குதல் . 

பதவுரை கூறி,பாடற்பொருளை விளக்குதல். 

இலக்கணக்குறிப்பு, உறுப்பிலக்கணம், புணர்ச்சி விதிகள் பற்றி விளக்குதல். 

விழாக்கள் நிறைந்த நாட்டை காணொளிகள் காட்டி விளக்குதல். 

ஆக்கப்பெயர்கள் 

இடுகுறிப்பெயர், காரணப்பெயர் குறித்து விளக்குதல். 

தமிழின் ஆக்கப்பெயர் பற்றியும், அதன் விகுதிகள் பற்றியும் விளக்குதல். 

ஆக்கப்பெயர்கள் எழுதப்பட்ட அட்டைகளைக்காட்டி விகுதிகளைச்சுட்டிக்காட்டச்செய்தல். 

பெயர்+விகுதி, தொழிற்பெயர்+விகுதி,வினை+விகுதி, எச்சம்+விகுதி அடிப்படையில் ஆக்கப்பெயர்களை விளக்குதல். 

மாணவர் செயல்பாடு

பாடலை பதம்பிரித்துப் படித்தல். 

அருஞ்சொற்பொருள் கூறுதல்

பதிற்றுப்பத்து நூலில் இடம்பெற்றுள்ள நாட்டுவளத்தைத்தொகுத்துக்கூறுதல். 

பதிற்றுப்பத்து நூலில் இடம்பெற்றுள்ள மன்னர்களையும் புலவர்களையும் வரிசைப்படி பட்டியலிடல்.

தமிழில் வழங்கும் ஆக்கப்பெயர்களைக் கூறுதல் . 

ஆளி,ஆளர் விகுதிகள் பெறும் ஆக்கப்பெயர்களை உருவாக்குதல். 

பெயர்களைப் பிரித்து அதில் இடம்பெற்ற ஆக்கப்பெயர்விகுதிகளை இனம்காணல். 

மதிப்பீடு

இரண்டாம் பத்தின் பாட்டுடைத்தலைவன் யார்? 

பதிற்றுப்பத்து நூலின் கருத்தோடு பொருந்தும் குறளைக்குறிப்பிடுக. 

ஆக்கப்பெயரை உருவாக்குக. 

வந்தால் மகிழ்ச்சி இது;உழைத்தால் கிடைக்கும் இது (மானம்) 

படிப்பவர்,படிப்பாளி வேறுபாடு கூறுக.

கற்றல் விளைவுகள்

பதிற்றுப்பத்து நூல் குறித்து அறிகின்றனர். 

வளமான நாட்டின் அமைப்பு பற்றி அறிகின்றனர்.

சேரமன்னர்கள் பற்றி அறிகின்றனர். 

பசி,பிணி,பகை மூன்றும் நாட்டிற்குக் கேடு என உணர்கின்றனர். 

ஆக்கப்பெயர் பற்றி அறிகின்றனர். 

நாம் வாழும் சூழலில் பயன்படுத்தும் ஆக்கப்பெயர்களை இனம்காண்கின்றனர். 

தொடர்பணி

நாட்டிற்கு அழகுசேர்ப்பன எவையென்று கலந்துரையாடுக. 

மாணவர்களுடன் கூடி புதிய ஆக்கப்பெயர்களை உருவாக்குக.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி 🙏

இராம்முருகன். தமிழாசிரியர்,அரசூர்.

8012906557. 

இலக்கணங்கற்க, 

'தமிழ்நதி' வலையொளி பாருங்கள். 

https://youtube.com/channel/UCzo4rz4l4R74ysmXFWA_e-w

புலனத்தில் இணைய (WhatsApp)

https://chat.whatsapp.com/Ge1mIcRmN8tAyBM3aNQAsq



பன்னிரண்டாம் வகுப்பு பாடக்குறிப்பு 31.10.22 - 4.11.22

 நாள்: 31.10.22 - 04.11.22 

வகுப்பு : பன்னிரண்டாம் வகுப்பு 

பாடம்: தமிழ்

தலைப்பு: இயல் 7(நாடு, அரசு, சமூகம், நிருவாகம்) 

 • தேயிலைத்தோட்டப்பாட்டு

• புறநானூறு

கற்பித்தல் நோக்கங்கள்

  • தமிழரின் புலம்பெயர் வாழ்வையும், அவர்தம் துயரங்களையும் அறிய முற்படுதல். 

• சான்றோரின் பட்டறிவு, ஆட்சி முறைக்குப் பயன்பட்டதை புறநானூற்று பாடல் வழியாக புரிந்து கொள்ளுதல். 

கற்பித்தல் உபகரணங்கள்

காணொளிகள்

விளக்கப்படங்கள்

மடிக்கணினி

இணையக்குறிப்புகள் 

கரும்பலகை

ஆர்வமூட்டல் 

எளிய மக்களின் துயரத்தை வெளிப்படுத்தும் நாட்டுப்புறப்பாடல் பாடுதல். 

பண்டைக்கால ஆட்சிமுறை, வரிவிதிப்பு முறை குறித்துக் கலந்துரையாடல். 

ஆசிரியர் செயல்பாடு: 

தேயிலைத்தோட்டப்பாட்டு

பாடலை இராகத்தோடு பாடுதல்.

மாணவர்களை இணைந்து பாடச்செய்தல். 

பஞ்சத்தினால் தமிழர்கள் கூலிகளாகப்புலம்பெயர்ந்த வரலாற்றைக் கூறுதல். 

அவர்தம் வலிகளை, துயரங்களை, எளிய பாடல்களில் பாடியமுறையை விளக்குதல். 

முச்சந்தி இலக்கியம்,தெருப்பாடல்கள் போன்ற செவ்வியல் இலக்கியங்கள் கூறாத இலக்கியவகைகள் குறித்துக்கூறுதல். 

பாரதமக்களின் பரிதாபச்சிந்து நூல்குறித்து விளக்குதல்.

புறநானூறு 

புறநானூறு நூற்பொருள் கூறுதல்.

பாடலை இராகத்தோடு பாடுதல்

பதவுரை கூறுதல் 

திணை, துறை விளக்குதல் 

இணையக்குறிப்புகளைச் சுட்டுதல். 

இலக்கணக்குறிப்பு,உறுப்பிலக்கணம் குறித்து விளக்குதல்.

பிசிராந்தையார் பற்றிய செய்திகளைக்கூறுதல். 

மாணவர் செயல்பாடு 

எளிய நாட்டுப்புறப் பாடல்கள் பாடுதல்.

தேயிலைத்தோட்டப்பாட்டை இராகத்தோடு பாடுதல். 

இசைக்கேற்ப கும்மியடித்தல். 

பாடலுக்குரிய பொருள் கூறுதல். 

வாய்மொழி இலக்கியங்களைப் பட்டியலிடல். 

மாணவர் அறிந்த வரிவிதிப்புமுறை பற்றிக் கூறுதல்.

பதவுரையறிந்து பாடற் பொருளைத் தொகுத்தல். 

மதிப்பீடு

1.ஒரு கோப்பைத் தேநீரில் பொதிந்துள்ள மனிதஉழைப்பைச்சிந்தித்து உங்கள் கருத்தை வெளிப்படுத்துக.

2. தமிழர்களின் புலம்பெயர் வாழ்வு எதனால் நிகழ்ந்தது? 

3.யானை புக்க புலம் போல உவமையை பொருளோடு பொருத்துக. 

4. காய்நெல் இலக்கணக்குறிப்பு தருக. 

5. பாடாண் திணை -விளக்குக.

கற்றல் விளைவுகள் 

 தமிழர்களின் புலம்பெயர் வாழ்வையும் அதனால் ஏற்பட்ட வலியையும் உணர்கின்றனர். 

எளிய மக்களின் உழைப்பை மதிக்க கற்றுக் கொள்கின்றனர். 

வாய்மொழி இலக்கியங்கள் குறித்த அடிப்படைச் செய்திகளை அறிகின்றனர். 

பண்டைய கால ஆட்சி முறை குறித்து அறிகின்றனர். 

மன்னர்களுக்கும் புலவர்களுக்குமான உறவு குறித்து அறிகின்றனர். 

திணை, துறை பற்றிய புறப்பொருள் செய்திகளை அறிகின்றனர் . 

தொடர்பணி 

உங்கள் பகுதியில் காணப்படும் வாய்மொழி இலக்கியங்களைத் தொகுத்து சிறப்புமலர் ஒன்றை உருவாக்குக. 

நல்ல நிருவாகத்திற்கு நீங்கள் பரிந்துரைக்கும் செய்திகளை ஒரு பக்க அளவில் கட்டுரையாக எழுதுக. 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


நன்றி 🙏

இராம்முருகன். தமிழாசிரியர்,அரசூர்.

8012906557. 

இலக்கணங்கற்க, 

'தமிழ்நதி' வலையொளி பாருங்கள். 

https://youtube.com/channel/UCzo4rz4l4R74ysmXFWA_e-w

புலனத்தில் இணைய (WhatsApp)

https://chat.whatsapp.com/Ge1mIcRmN8tAyBM3aNQAsq







புதன், 26 அக்டோபர், 2022

இயல்6 சிறுதேர்வு

              இயல்6 சிறுதேர்வு

குறுவினா.                      10×2=20

 1. எண்வகை மெய்ப்பாடுகள் யாவை? 

2. ஒருமுக எழினி, பொருமுகஎழினி குறிப்பு வரைக. 

3. பின்னணிஇசை படத்தின் காட்சி அமைப்புக்கு எவ்வாறு உயிரூட்டும் சான்று தருக. 

4. மூச்சு நின்று விட்டால் பேச்சும் அடங்கும் கவிதைக்குப் பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக. 

5. குலஷோவ் விளைவு என்றால் என்ன? 

6. படத்தொகுப்பு என்றால் என்ன? 

7. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து இக்குறட்பாவின் உவமையை பொருளோடு பொருத்துக. 

8. நஞ்சுண்பவர் என வள்ளுவர் யாரை இடித்துரைக்கிறார்? 

9. அஞ்சத்தக்கன; அஞ்சத்தகாதன என வள்ளுவம் குறிப்பிடுவது யாது? 

10. மீஅண்மைக் காட்சித்துணிப்பு என்றால் என்ன?

வெள்ளி, 21 அக்டோபர், 2022

பதினோராம் வகுப்பு பாடக்குறிப்பு

 நாள்: அக்டோபர் மூன்றாவது வாரம்

வகுப்பு:பதினோராம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு: இயல் 7(நாடு, சமூகம்,அரசு,நிருவாகம்) 

• காற்றில் கலந்த பேரோசை 

• புரட்சிக்கவி 

• சிந்தனைப்பட்டிமன்றம் 

கற்பித்தல் நோக்கங்கள்: 

கருத்துகளைத் தொகுத்து கட்டுரைக்கும் திறன் பெறுதல். 

கவிதையில் புரட்சிக்கருத்துகள் எழுச்சியுடன் வெளிப்படுத்தப்படும் நயம் அறிந்து சுவைத்தல். 

பண்பட்ட முறையில் கருத்துகளை முன்வைத்து பேசுந்திறனையும் மொழியாளுமையையும் வளர்த்தல். 

கற்பித்தல் உபகரணங்கள்

மடிக்கணினி

கரும்பலகை

இணையம்

ஆசிரியர் செயல்பாடு

காற்றில் கலந்த பேரோசை

ஜீவா பற்றிய ஆவணப்படம் காட்டல்.

ஜீவாவின் பேச்சாற்றல் பற்றி விளக்குதல்.

நல்லபேச்சு என்பது செய்திகளைக்கொட்டுவதன்று;எடுத்துக் கொண்ட செய்தியை மக்களின் மனங்கவரும் வகையில் சொல்வதே என்பதை ஜீவாவின் பேச்சு மூலம் விளக்குதல். 

சுந்தரராமசாமி பற்றிக் கூறுதல்.

அவர்தம் நூல்களை அறிமுகம் செய்தல். 

புரட்சிக்கவி

மக்களாட்சிச்சிந்தனைகளைப் பரப்பியதில் இலக்கியத்திற்கும் பெரும்பங்கு உண்டு அரசு என்பது மக்களுக்கானதே என்று கூறுதல். 

பாரதிதாசன் எழுதிய நூல்கள் குறித்துக் கூறுதல். 

புரட்சிக்கவி காப்பியத்தின் முன்கதைச் சுருக்கம் கூறுதல். 

பாடலை இராகத்தோடு பாடுதல்.

அருஞ்சொற்களுக்குப் பொருள் கூறுதல். 

இலக்கணக்குறிப்பு, புணர்ச்சி விதி, பகுபத உறுப்பிலக்கணம் குறித்து விளக்குதல். 

சிந்தனைப்பட்டிமன்றம் 

இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவது வீடா? நாடா? என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடத்துதல். 

மாணவர்களின் சிந்தனையாற்றலைத் தூண்டும் வகையில் பட்டிமன்றத்தில் பங்கேற்கச்செய்தல். 

பட்டிமன்றத்துக்கு தேவையான கருத்துக்களை கலந்தாலோசிக்கச் செய்தல். 

மாணவர் செயல்பாடு

பேச்சுக்கலையின் திறனை அறிந்து, வகுப்பில் குறிப்பிட்ட தலைப்பில் பேச முற்படுதல். 

பொதுவுடைமை முன்னோடிகளுள் ஒருவரான ஜீவா குறித்த செய்திகளைத் தொகுத்தல். 

அரசாட்சி, மக்களாட்சி இரண்டிற்குமான வேறுபாடுகளைக் கூறுதல். 

பாடலைப் பொருளோடு வாசித்தல். 

பாடலுக்கான பொருளைத் தொகுத்துக் கூறுதல். 

பட்டிமன்றத்தில் பங்கேற்று தனது கருத்துக்களை வெளிப்படுத்தல். 

தான் சார்ந்த தலைப்புக்கேற்றவாறு கருத்துகளைத் தொகுத்துப் பேசுதல். 

மதிப்பீடு

நாழிக்குள் திணிக்கும் மருந்து போல என்னும் உவமையை ஜீவானந்தம் பேச்சுடன் ஒப்பிடுக.

அலைகடல்,புதுக்கியவர் - இலக்கணக்குறிப்பு தருக.

நீரோடை - புணர்ச்சி விதி கூறுக. 

சிந்தனை பட்டிமன்றத்தின் கருத்துக்களைத் தொகுத்துக் கூறுக.

கற்றல் விளைவுகள் 

பேச்சாற்றல் குறித்து அறிந்து கொள்கின்றனர்.

கருத்துக்களைத் தொகுத்துக் கட்டுரையாக்கும் திறனைப் பெறுகின்றனர். 

மக்களாட்சியின் மகத்துவம் குறித்து அறிகின்றனர். 

பண்பட்ட சிந்தனைகளைத் தொகுத்து கூறும் ஆற்றல் பெறுகின்றனர். 

குறிப்பிட்ட தலைப்பில் பேசுவதற்கான கருத்துக்களைத் தொகுக்கும் திறன் பெறுகின்றனர்.

தொடர்பணி 

ஜீவானந்தம் பற்றிய செய்திகளை தொகுத்து வகுப்பறையில் படித்துக்காட்டுக.

மக்களாட்சியின் சிறப்பைப் பற்றி கட்டுரை எழுதுக. 

மனித வாழ்வை உயர்த்துவதற்கு பெரிதும் தேவை பணமே! கல்வியே! என்பது பற்றி ஒரு சொற்போர் நிகழ்த்துக.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி 🙏

இராம் முருகன். தமிழாசிரியர்,அரசூர்.

8012906557. 

இலக்கணங்கற்க, 

'தமிழ்நதி' வலையொளி பாருங்கள். 

https://youtube.com/channel/UCzo4rz4l4R74ysmXFWA_e-w

முகநூல் பக்கத்தில் இணைய, (Facebook)

https://www.facebook.com/groups/419403600069598/?ref=share 

புலனத்தில் இணைய (WhatsApp)

https://chat.whatsapp.com/Ge1mIcRmN8tAyBM3aNQAsq




புதன், 19 அக்டோபர், 2022

பன்னிரண்டாம் வகுப்பு பாடக்குறிப்பு

 நாள்: அக்டோபர் மூன்றாவது வாரம்

வகுப்பு: பன்னிரண்டாம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு: இயல்7 (வையத்தலைமை கொள்) 

• இலக்கியத்தில் மேலாண்மை

• அதிசய மலர்

• தொன்மம் 

கற்பித்தல் நோக்கங்கள்: 

• தலைமைப்பண்பிற்கான கூறுகளைப் பகுத்தாராய்தல். இலக்கியத்தில் சுட்டப்பட்டுள்ள அன்றாட வாழ்க்கைக்கான மேலாண்மைக் கூறுகளை அறிந்து கொள்ளுதல். 

• மீண்டெழும் ஒரு சமூகத்தின் உணர்வுகளை கவிதையாக்கும் திறன் பெறுதல் .

• தொன்மங்களை அறிந்து படைப்புகளில் பயன்படுத்தும் நுட்பமறிதல். 

கற்பித்தல் உபகரணங்கள்: 

• இறையன்பு நூல்கள்

• மேலாண்மை குறித்த இணையக்கட்டுரைகள் 

• ஈழக்கவிதைகள் பற்றிய இணையக்குறிப்புகள். 

• மடிக்கணினி

• கரும்பலகை 

ஆயத்தப்படுத்தல்

உன் கற்றலுக்கான நேரத்தை எவ்வாறு திட்டமிடுவாய்? 

அயல்நாட்டுக்கவிஞர்களில் உன்னைக் கவர்ந்தோரின் பெயர்களைக் கூறு. 

நீ  அறிந்த புராணக்கதைகள், பழங்கதைகளைக் கூறு. 

ஆசிரியர் செயல்பாடு 

இலக்கியத்தில் மேலாண்மை 

மேலாண்மை என்பதன் பொருள் கூறுதல் 

நேரமேலாண்மை குறித்தும், திட்டமிடல் குறித்தும்  விளக்குதல்.அதற்கான இலக்கியப்பதிவுகளைச்சுட்டல். 

வேளாண் மேலாண்மை குறித்தும் அதன் படிநிலைகள் பற்றியும் விளக்குதல். 

வணிகமேலாண்மை குறித்தும் அதற்கான பட்டினப்பாலை இலக்கியச் சான்றுகள் காட்டியும் விளக்குதல். 

நிருவாக மேலாண்மை குறித்தும் உரிய திருக்குறள் பாடலைச் சுட்டிக்காட்டியும் விளக்குதல். 

மேலான மேலாண்மையில் வரவு செலவு பற்றியும் செயலுறுதி பற்றியும் உரிய இலக்கியச் சான்றுகளுடன் விளக்குதல்.

அதிசயமலர்

ஈழத்துமக்களின்‌ துயரநிலையை விளக்குதல். 

உள்நாட்டுப்போரின் தாக்கங்களைக் கூறுதல் . 

போருக்குப்பின்னான‌ அவர்களின் நம்பிக்கையை விளக்குதல். 

கவிதையின் பொருள் பொதிந்த வரிகளைச்சுட்டிக்காட்டுதல். 

இணையம் மூலம் பிற ஈழக்கவிதைகளை வாசித்துக்காட்டுதல். 

தொன்மம்

தொல்காப்பியர் காட்டும் எட்டுவகை வனப்புகளுள் ஒன்றான தொன்மம் பற்றி விளக்குதல். 

கதையில் தொன்மத்தைப் பயன்படுத்திய நுட்பங்களை கு.அழகிரிசாமி கதைகள் மூலம் விளக்குதல். 

புதுமைப்பித்தனின் 'சாபவிமோசனம் ' கதையில் தொன்மம் பற்றிக்கூறுதல் .

இலக்கியத்தில் தொன்மம் பயின்ற அடிகளைச்சுட்டுதல். 

புதுக்கவிதைகளில் தொன்மத்தின் பயன்பாடு பற்றி அப்துல்ரகுமான் கவிதை மூலம் விளக்குதல். 

மாணவர் செயல்பாடு

மேலாண்மை என்பது குறித்து கலந்துரையாடுதல்

நேர மேலாண்மை குறித்தும் ஒரு நாளை திட்டமிடுவது குறித்தும் கலந்துரையாடல 

கவிதைகளைப் பொருளோடு படித்தல்.போருக்குப் பிந்தைய நிலைகளைத் தொகுத்துக் கூறுதல் 

தொன்மம் அடங்கிய பழமொழிகளை கூறுதல். 

குறிப்பிட்ட கவிதைகளை கொடுத்து அதில் இடம்பெற்ற தொன்மத்தினைக் கண்டறிதல்.

மதிப்பீடு

மேலாண்மை என்னுஞ்சொல்லின்‌ பொருள் கூறுக. 

வேளாண்மேலாண்மைக் கூறுகளை விளக்குக. 

'இச்செடியிலிருந்து காடு பெருகும்' தொடர் உணர்த்தும் பொருள் யாது? 

எட்டுவகை வனப்புகள் யாவை? 

கற்றல் விளைவுகள்

பல்வேறு வகையான மேலாண்மையை அறிந்து வாழ்வில் கடைப்பிடித்தல். 

மனிதகுலத்தின் துயரத்தையும், நம்பிக்கையையும் உணர்கின்றனர். 

படைப்பின் நுட்பமான தொன்மத்தைப் பயன்படுத்தி படைப்புகள் உருவாக்க அறிகின்றனர். 

தொடர்பணி

உனது ஒருநாளை நேரமேலாண்மைப்படி திட்டமிடு. 

ஈழத்துக்கவிஞர்களையும் அவர்தம் படைப்புகள் குறித்தும் வகுப்பில் கலந்துரையாடுக. 

தொன்மம் இடம்பெறும் வகையில்  புதுக்கவிதை எழுதி வரவும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நன்றி 🙏

இராம் முருகன். தமிழாசிரியர்,அரசூர்.

8012906557. 

இலக்கணங்கற்க, 

'தமிழ்நதி' வலையொளி பாருங்கள். 

https://youtube.com/channel/UCzo4rz4l4R74ysmXFWA_e-w

முகநூல் பக்கத்தில் இணைய, (Facebook)

https://www.facebook.com/groups/419403600069598/?ref=share

புலனத்தில் இணைய (WhatsApp)

https://chat.whatsapp.com/Ge1mIcRmN8tAyBM3aNQAsq





சனி, 15 அக்டோபர், 2022

நாட்டுநலப்பணித்திட்டம்

 எங்கள் பள்ளியில் நான் சரிசெய்த பிழைதிருத்தம்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

எங்கள் பள்ளியில் நாட்டுநலப்பணித்திட்டத்தின் திட்ட அலுவலராக என்னைப்பொறுப்பேற்குமாறு தலைமையாசிரியர் கேட்டுக்கொண்டார். நானும் இசைவுதெரிவித்தேன். நாட்டுநலப்பணித்திட்டத்திற்கான விளம்பரப்பதாகையொன்றை(Banner) அச்சிடவேண்டும்.அதற்கான வரைவை(Model) எழுதிக்கொடுக்குமாறு தலைமையாசிரியர் கேட்டார்.நானும் எழுதிக்கொடுத்தேன். 'ஐயா,இதனில் ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டுமா? என வினவினேன். 

பிறபள்ளிகளில் அச்சிட்டதைப்பார்த்துக்கொள்ளலாமென்றார்.ஓரிருநாட்களில் மாவட்டத்திட்ட அலுவலரிடம் பேசி, அவர்கள் பள்ளியில் வைத்துள்ள பதாகையின் படத்தைக்காட்டி ' தாங்கள் எழுதிய வரைவில் சிறியபிழை அதைமட்டும்  மாற்றுமாறு கூறினார். 

என்ன பிழை? என்று வினவினேன். 

'நாட்டுநலப்பணித்திட்டம்' என்பதை              'நாட்டு   நலப்பணித் திட்டம்'  எனப்பிரித்தெழுதுமாறு கூறினார். ஏன் அவ்வாறு எழுதவேண்டுமெனக்கேட்டேன். 

எதாவது இலக்கணநுட்பமிருக்குமென நினைத்தேன்.அவர் கூறிய விடை வியப்பளித்தது. 'மாவட்டத்திட்ட அலுவலரே எழுதியிருக்கிறார். அதனால், சரியாகத்தானிருக்குமென்றார்'. 

'நாட்டு  நலப்பணித் திட்டம்' என்று எழுதுவது சரியா?  

நாடு + நலப்பணி இதில் 'நாடு' நெடிற்றொடர் குற்றியலுகரம்.

நெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுள் 

டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே. 

என்னும் விதிப்படி வேற்றுமைப்புணர்ச்சியில் நெடிற்றொடர் குற்றுகரத்தில் டகர,றகர குற்றுகரம் இடம்பெறின், அவை இரட்டித்துப்புணரும்.

நாடு+ நலப்பணி 

நாடு (நா+ட்+உ)இதில் டகரம் இடம்பெற்றுள்ளது. இது இரட்டித்து ( நா + ட்+ ட்+உ- நாட்டு ) என மாறும். 

நலப்பணி+திட்டம்

இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்

எனவே, இரண்டு சொற்களும் புணரும் 

புணர்ச்சியால் மாற்றமடைந்த சொல்லைப்பிரிக்கக்கூடாது. 'நாட்டுநலப்பணித்திட்டம்' என்று இணைத்தேயெழுத வேண்டும். 

நாட்டு நலப்பணித் திட்டம் என்று பிரித்தெழுதினால் பொருளே மாறிவிடும். 

'நாட்டுநலப்பணித்திட்டம்' சேர்த்தெழுதும்போது,நாட்டிற்குச்செய்யும்நலப்பணித்திட்டம் எனப்பொருள்படும்.இது 'வேற்றுமையுருபும் பயனும் உடன்றொக்கத்தொகை' 

இதையே நாட்டு நலப்பணித் திட்டம் எனப்பிரித்தெழுதினால் 'நாட்டு' ஏவல்வினைமுற்றாகி,நலப்பணித்திட்டத்தை நாட்டு.(நாட்டு- நிலைநிறுத்து) எனப்பொருள் மாற்றமடையும். 

சிறு இடைவெளி தொடரின் பொருளையே மாற்றிவிடும். இச்செய்தியினை தலைமையாசிரியருக்கு எடுத்துக்கூறி சரியான முறையில் பதாகையை அச்சிட்டுள்ளேன். 

ஒவ்வொரு தமிழாசிரியரும் தம் பள்ளியளவில் பயன்படுத்தும் விளம்பரங்களில் பிழையற்ற தமிழை இடம்பெறச்செய்வது கடமையன்றோ? சிந்திப்பீர்.

நன்றி

இராம்முருகன் 

வியாழன், 13 அக்டோபர், 2022

பதினோராம் வகுப்பு பாடக்குறிப்பு

 நாள்: 17.10.22  -  21.10.22 

வகுப்பு: பதினோராம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு: இயல்6(கலை,அழகியல்,புதுமைகள்) 

            • இசைத்தமிழர் இருவர்.

            • கலைச்சொல்லாக்கம்

கற்றல் நோக்கங்கள்: 

 வாழும் காலத்தின் ஆளுமைகளின் திறமைகளை உணர்ந்து முன்னோடியாக் கொள்ளுதல். 

கலைச் சொல்லாக்கத்தின் இன்றியமையாமையை உணர்ந்து புதிய சொற்களை உருவாக்கிப் பயன்படுத்துதல். 

கற்பித்தல் உபகரணங்கள்

இளையராஜா,ஏ.ஆர்.இரகுமான் இருவரின் நேர்காணல் காணொளி. 

இளையராஜா குறித்த ஆவணப்படம். 

கலைச்சொல் அகராதி. 

கலைச்சொல் தொகுப்பேடு. 

ஆர்வமூட்டல்

இளையராஜா,ஏ.ஆர்.இரகுமான் இசையில் உருவான பாடல்களைக்கூறச்செய்தல்.இராகத்தோடு பாடிக்காட்டுதல். 

நீங்கள் பயன்படுத்தும் கருவிகளின் கலைச்சொற்களைப் பட்டியலிடுங்கள். 

ஆசிரியர் செயல்பாடு

இசைத்தமிழர் இருவர் 

இளையராஜா குறித்த ஆவணப்படம் காட்டல். 

இளையராஜா குறித்த செய்திகளைக்கூறுதல். 

சிம்பொனி இசைக்குழு பற்றிக் கூறுதல். 

இவர் இசைக்கோவைகளை விளக்குதல். 

இளையராஜா பெற்ற உயரியவிருதுகளைக்கூறுதல்.

இவர்தம் இசைநுணுக்கத்தை விளக்குதல்.

ஏ‌.ஆர்.இரகுமான் அவர்களின் இசைப்பாரம்பரியத்தைக்கூறுதல். 

இவர் இசைகோர்க்கும் நுட்பங்களைக்கூறுதல். 

உலகளாவிய இசையை கணினி தொழில்நுட்பத்தில் உருவாக்கிய விதத்தைக்கூறுதல். 

இவர் பெற்ற உலகளாவிய விருதுகளைப் கூறுதல்.

கோல்டன் குளோப்,கிராமி, ஆஸ்கர் விருதுகள் பெற்ற நிகழ்வுகளை விவரித்தல். 

இசைத்துறையில் ஆர்வமுள்ளோர்க்கு இவ்விருவரின் வாழ்வும் முன்னோடியாக அமைவதை விளக்குதல். 

கலைச்சொல்லாக்கம்

கலைச்சொல் என்பதற்குப்பொருள் கூறுதல். 

அகராதி, கலைச்சொல் வேறுபாடு கூறுதல்.

மருத்துவ கலைச்சொற்கள், கல்விசார் கலைச்சொற்கள், தகவல் தொழில்நுட்ப கலைச்சொற்கள் பற்றி விளக்குதல். 

தமிழில் கலைச்சொற்களின் இன்றியமையாமையைக் கூறுதல். 

கலைச்சொற்கள் உருவாக்கும் வழிமுறைகள் பற்றி வா.செ.குழந்தைசாமி கூறுவனவற்றைத் தொகுத்துக் கூறுதல். 

கலைச்சொல் உருவாக்கத்தில் மாணவர்கள் பங்கு குறித்து விளக்குதல். 

மாணவர் செயல்பாடு: 

இளையராஜா,ஏ.ஆர்.இரகுமானின் இசையை நுட்பமாக ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் கலந்துரையாடல் செய்தல். 

இளையராஜா,ஏ.ஆர். இரகுமான் பெற்ற விருதுகளைப் பட்டியலிட்டுக்கூறுதல். 

நுட்பமாக இசையமைத்த பாடல்களைப் பாடுவர். 

கலைச்சொற்கள் பற்றியறிந்து துறைசார்ந்த கலைச்சொற்களைப்பட்டியலிடல். 

அறிவியற்கண்டுபிடிப்புகளின் கலைச்சொற்களை மாணவர்களோடு விவாதித்தல். 

ஏதேனும் ஒருபொருளைத்தேர்ந்தெடுத்து அதற்குரிய கலைச்சொல் உருவாக்குதல். 

மதிப்பீடு

இளையராஜா பெற்ற விருதுகள் யாவை? 

கோல்டன் குளோப், கிராமி விருதுகளை ஏ.ஆர். இரகுமான் எப்படத்திற்கு இசையமைத்ததற்காக வழங்கப்பட்டது? 

ESCALATOR,STRAW,MASSDRIL - இணையான தமிழ்க் கலைச்சொற்கள் தருக. 

கற்றல் விளைவுகள்

சமகாலத்தில் வாழும் இசை ஆளுமைகள் குறித்து அறிந்து கொள்கின்றனர். 

இசைத்துறையில் இவர்கள் பெற்ற உயரிய விருதுகளை அறிகின்றனர். 

கலைச்சொற்களின் இன்றியமையாமை குறித்தும், கலைச்சொற்கள் உருவாக்கும் பணிகுறித்தும் அறிந்து கொள்கின்றனர். 

துறைசார்ந்த கலைச்சொற்களை அறிந்து கொள்கின்றனர். 

தொடர் பணி :

தமிழ்த்தாய் வாழ்த்து, நாட்டுப்பண், தமிழில் பிறந்தநாள் பாடல் போன்றவற்றை நண்பர்களுடன் இணைந்து இசையுடன் பாடுக. 

மாணவர் ஒவ்வொருவரும் 25 கலைச் சொற்களைப் பொருளுடன் திரட்டி அகராதி ஆக்குக.

நன்றி 🙏

இராம் முருகன். தமிழாசிரியர்,அரசூர்.

8012906557. 

இலக்கணங்கற்க, 

'தமிழ்நதி' வலையொளி பாருங்கள். 

முகநூல் பக்கத்தில் இணைய, 

'நறும்பூந்தமிழ்' பக்கத்தில் இணையுங்க

புலனத்தில் இணைய 

https://chat.whatsapp.com/Ge1mIcRmN8tAyBM3aNQAsq









அளவைகள்

 சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள அளவைகளைப் பற்றி காணலாம். 


மேடையை அளக்கும் கோல்: 

8அணு-1தேர்த்துகள் 

8தேர்த்துகள்-1இம்மி 

8 இம்மி - 1 எள்ளு 

8 எள்ளு - 1 நெல்லு 

8 நெல்லு - 1 பெருவிரல்


24பெருவிரல் கொண்டது 1 கோல்.


மாதவி பெற்ற பரிசு


1008 கழஞ்சு பொன்னாலான மாலை. 


2 குன்றிமணி - 1 மஞ்சாடி 

10 மஞ்சாடி - 1 கழஞ்சு

ஒரு கழஞ்சு என்பது தற்கால அளவையில் 1.77கி 

அப்படியென்றால்

1008×1.77=1784.16கி 


அரசன் பரிசாக கொடுத்த மாலை 1784.16 கி 


இந்தச்செய்திகளை மாணவர்களிடம் கூறுங்கள்.


பண்டைய அளவைகளை உணர்வார்கள். நம் ஆசிரியர் எவ்வளவு நுட்பமான செய்திகளைக்கூறுகிறார் என்று வியந்து பாடத்தைக்கவனிப்பார்கள்


நன்றி

இராம் முருகன்

அரசூர்

புதன், 12 அக்டோபர், 2022

பன்னிரண்டாம் வகுப்பு பாடக்குறிப்பு- (17.10.22 -21-10-22)

 நாள்: அக்டோபர் இரண்டாம்வாரம் 

பாடம்: தமிழ்

தலைப்பு: இயல் 6 (சிறுகை அளாவிய கூழ்) 

     • சிலப்பதிகாரம்

     • மெய்ப்பாட்டியல் 

     • காப்பிய இலக்கணம் 

கற்பித்தல் நோக்கங்கள்: 

•தமிழரின் தொன்மைக்கலையான நடனம் பற்றி அறிதல். 

•பண்பாடு வரலாறு அழகியல் கூறுகளை அறிதல். 

•எண்வகை மெய்ப்பாடுகள் பற்றி அறிதல். 

•பெருங்காப்பியம்,சிறுகாப்பியம் பற்றியும் அதன் அடிப்படைக்கூறுகளையும் அறிதல். 

கற்பித்தல் உபகரணங்கள்

சிலப்பதிகாரக்காணொளி 

அளவுகள் குறித்த வரைபடம்

மெய்ப்பாடுகளை விளக்கும் படம் 

காப்பிய நூல்

மடிக்கணினி, இணையம்

ஆயத்தப்படுத்தல்

தற்கால நாடகமேடையின் அமைப்பு குறித்துக் கலந்துரையாடல். 

மனிதவுடலில் தோன்றும் உணர்வுகளைப்பட்டியலிடக்கூறல். 

காப்பியங்களின் பெயர்களைக்கூறச்செய்தல். 

ஆசிரியர் செயல்பாடு

சிலப்பதிகாரம்

மாதவி நடனம் கற்றதை விளக்குதல். 

நாட்டிய அரங்கின் அமைப்பை படத்தைக்காட்டி விளக்குதல். 

தலைக்கோல் பற்றியும்,மாதவியின் நடனத்தையும் கூறல். 

மாதவி பெற்ற பரிசை விவரித்தல். 

மெய்ப்பாட்டியல்

எண்வகை மெய்ப்பாடுகள் பற்றி விளக்குதல். 

ஒவ்வொருவகை  மெய்ப்பாட்டையும் நடித்து விளக்குதல். 

மெய்ப்பாடுகள் பயின்றுவரும் இலக்கியச்சான்றுகள் கூறுதல். 

காப்பிய இலக்கணம்: 

காப்பு+இயம் சொற்பொருள் கூறல்.

பெருங்காப்பியம்,சிறுகாப்பியம் பற்றி விளக்குதல். 

காப்பியத்தின் கூறுகளை விளக்குதல். 

தற்கால காப்பிய வடிவங்களையும் பெயர்களையும் சுட்டிக்காட்டுதல். 

மாணவர் செயல்பாடு

நாட்டிய அரங்கின் அமைப்பை தொகுத்துக் கூறுதல். 

பண்டைய அளவைகளைத்தொகுத்தல். 

செய்யுளைப்பொருளோடு படித்தல். 

செய்யுளில் இடம்பெற்ற மெய்ப்பாடுகள் கண்டறிதல்.

காப்பியத்தின் கூறுகளை தொகுத்துக் கூறுதல். 

மதிப்பீடு

கழஞ்சு என்பதன் தற்கால அளவு எவ்வளவு? 

நாட்டிய அரங்கின் அமைப்பைத் தொகுத்துக்கூறுக. 

எண்வகை மெய்ப்பாடுகள் எவை? 

காப்பியம்- சொற்பொருள் விளக்குக. 

கற்றல் விளைவுகள்

தமிழரின் தொன்மைக்கலையான நடனத்தை, நாட்டிய அரங்கின் அமைப்பையும் அறிகின்றனர். 

எண்வகை மெய்ப்பாடுகளை அறிகின்றனர். 

செய்யுளில் இடம்பெற்ற மெய்ப்பாடுகளை இனம்காண்கின்றனர். 

கதைவடிவிலான காப்பியங்கள் பற்றியும் அதன் அடிப்படைக்கூறுகளையும் அறிகின்றனர். 

தொடர்பணி

உங்கள் ஊரில் அமைந்துள்ள நாடகமேடையையும் சிலப்பதிகாரம் காட்டும் நாட்டிய அரங்கின் அமைப்பையும் ஒப்பிடுக. 

எண்வகை மெய்ப்பாடுகளை நடித்துக்காட்டுக. 

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் காப்பியக்கூறுகள் குறித்துக் கலந்துரையாடல் செய்க. 

நன்றி 🙏

இராம் முருகன். தமிழாசிரியர்,அரசூர்.

8012906557. 

இலக்கணங்கற்க, 

'தமிழ்நதி' வலையொளி பாருங்கள். 

முகநூல் பக்கத்தில் இணைய, 

'நறும்பூந்தமிழ்' பக்கத்தில் இணையுங்க

புலனத்தில் இணைய 

https://chat.whatsapp.com/Ge1mIcRmN8tAyBM3aNQAsq




திங்கள், 10 அக்டோபர், 2022

இயல்6 குறுவினா சிறுவினா

 1.ஒருமுக எழினி: 

ஒருபுறத்திலிருந்து மறுபுறம் செல்லுமாறு அமைக்கப்பட்டிருக்கும் ஒருமுகத்திரை. 

  பொருமுக எழினி: 

இருபுறத்திலிருந்தும் நடுவில் ஒன்றோடொன்று பொருந்தும்படியான பொருமுகத்திரை. 

சிறுவினா: 

நாட்டிய அரங்கின் அமைப்பு: 

• சிற்பநூலில் சொல்லப்பட்டவாறு நன்னிலத்தைத் தேர்வு செய்தனர். 

• ஒரு சாண் அளவு கொண்ட மூங்கிலை புண்ணியமலையிலிருந்து கொண்டுவந்து இருபத்துநான்கு விரலளவு கொண்ட கோலாக்கினர். 

• எழுகோல் அகலம் எண்கோல் நீளம் ஒருகோல் உயரத்தில் அரங்கமைத்தனர். 

•உத்தரப்பலகை இடைநிலம் அறுகோல்‌ அளவில் இருந்தது. 

• அரங்கிற்கேற்ப இருவாயில்களை அமைத்தனர்.

• தூணின் நிழல் மேடையில் விழாதவாறு அழகிய விளக்குகளையும் அமைத்தனர். 

• மேல்நிலையில் ஐம்பூதங்களையும் எழுதி ஓவியவிதானத்தையும் முத்துமாலைகளையும் அமைத்தனர். 

• ஒருமுக எழினி,பொருமுக எழினி,கரந்துவரல் எழினியையும் பொருத்தினர்.


ஞாயிறு, 9 அக்டோபர், 2022

11ஆம்வகுப்பு பாடக்குறிப்பு(அக்டோபர் முதல் வாரம்)

 நாள்: அக்டோபர் முதல் வாரம் 

பாடம்: தமிழ் 

வகுப்பு: பதினோராம் வகுப்பு 

தலைப்பு : இயல் 6(பல்கலை நிறுவு

                • காலத்தை வென்ற கலை

                • ஆத்மாநாம் கவிதைகள்

                • குற்றாலக்குறவஞ்சி 

                • திருச்சாழல்

கற்பித்தல் நோக்கங்கள் :

• தமிழர் கலைகளை அவை படைக்கப்பட்ட காலப்பின்னணி , அறிவியல் நுட்பங்களுடன் இணைத்துப் போற்றுதல்.

• இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள பல்வேறு உரையாடல் வடிவங்களைச் சுவைத்து பின்பற்றுதல் .  

கற்பித்தல் உபகரணங்கள்

தஞ்சைக்கோயில் குறித்த காணொளி 

புதுக்கவிதை குறித்த இணையப்பக்கம் 

பண்டைய காலத்து அணிகலன்கள் படம் 

தமிழிணையக்கல்விக்கழகம் இணைப்பு 

கற்பித்தல் முறை: 

                        ' நாடகமுறை ' 

ஆயத்தப்படுத்தல்

தஞ்சைப்பெரியகோவில் பற்றி அறிந்ததைக்கூறச்செய்தல். 

மாணவர்களின் மனங்கவர்ந்த புதுக்கவிதைகளைக்கேட்டல். 

முந்தைய வகுப்பில் கற்ற சிற்றிலக்கியங்களின் பெயர்கேட்டல். 

குறவர்கள் வாழ்வியல் குறித்துக் கேட்டல். 

ஆசிரியர் செயல்பாடு: 

காலத்தை வென்ற கலை

    தஞ்சைப்பெரியகோயில் கட்டடக்கலை பற்றி விளக்குதல்.

கற்றளி குறித்தும் கட்டடக்கலைப்பாணி குறித்தும் விளக்குதல்.

பெரியகோவில் ஓவியங்கள் குறித்து விளக்குதல். 

சோழர்கள் கட்டிய பிறகோவில்கள் குறித்து விளக்குதல். 

தச்சர்கள் பற்றிய கல்வெட்டுச்செய்திகளைக்கூறுதல். 

மேற்கண்ட செய்திகளை விளக்கும் காணொளிகளைக்காட்டி விளக்குதல். 

ஆத்மாநாம் கவிதைகள்

புதுக்கவிதையின் வடிவம் பற்றி விளக்குதல்.

மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்குமான வேறுபாட்டைக் கூறுதல். 

கவிதையைப் பொருளோடு வாசித்தல். 

ஆத்மாநாம் பற்றியும் அவர்தம் படைப்புகள் பற்றியும் கூறுதல். 

இணையத்திலுள்ள ஆத்மாநாமின் பிறகவிதைகளைச்சுட்டிக்காட்டல். 

குற்றாலக்குறவஞ்சி 

96 வகையான சிற்றிலக்கியங்கள் பற்றி விளக்குதல்.

சிற்றிலக்கியவடிவம் பற்றி விளக்குதல். 

குற்றாலக்குறவஞ்சியை அறிமுகம் செய்தல். 

குறவஞ்சியில் கூறப்பட்டுள்ள அணிகலன்களை இணையத்தின் மூலம் காட்டுதல். 

திருச்சாழல்

திருவாசகம் பற்றியும் மாணிக்கவாசகர் பற்றியும் கூறுதல்.

'சாழல்' என்னும் இலக்கியவடிவத்தைக்கூறுதல். 

சாழல் என்பதன் தற்கால இலக்கியவடிவத்தை விளக்குதல்.

மாணவர் செயல்பாடு: 

உரைநடையை நாடகவடிவில் நடித்துக்காட்டுதல். 

உரைநடைப்பகுதியைப்பொருளோடு வாசித்தல். 

மனங்கவர்ந்த புதுக்கவிதைகளை வகுப்பில் பகிர்தல். 

பழங்கால அணிகலன்களின் பெயர்களைப்படத்துடன் தொகுத்தல். 

சிங்கன் சிங்கியாக உரையாடல் நிகழ்த்தல். 

மதிப்பீடு

கற்றளி யாருடைய காலத்தில் தொடங்கப்பட்டது? 

சோழர்கள் கட்டிய பிறகோவில்கள் எவை? 

சோழர்கள் கட்டிடக்கலைப் பாணி எத்தகையது? 

குற்றாலக்குறவஞ்சியில் சுட்டப்படும் அணிகலன்கள் எவை? 

நாங்கூழ்- பொருள் கூறுக. 

கற்றல் விளைவுகள்

தமிழரின் தொன்மைப்பண்பாடு, கட்டடக்கலை பற்றி அறிகின்றனர். 

புதுக்கவிதை எழுத உந்துதல் பெறுகின்றனர். 

படைப்பாற்றல் திறன் வளர்கிறது. 

சிற்றிலக்கியம் பற்றிய அடிப்படை புரிதலைப்பெறுகின்றனர். 

பழங்கால அணிகலன்கள் பற்றி அறிகின்றனர். 

தொடர்பணி

தஞ்சைப் பெரியகோயிலின் படங்கள் மற்றும் செய்திகளைச் சேகரித்து தொகுப்பேடு உருவாக்குக. 

பழங்கால அணிகலன்களின் படங்களைத்தொகுக்க. 

உனக்குப்பிடித்த புதுக்கவிதைகளை வகுப்பில் பகிர்ந்து கொள்க. 

நன்றி 🙏

இராம் முருகன்

தமிழாசிரியர்,அரசூர்.

8012906557. 

இலக்கணங்கற்க, 

'தமிழ்நதி' வலையொளி பாருங்கள். 

முகநூல் பக்கத்தில் இணைய, 

'நறும்பூந்தமிழ்' பக்கத்தில் இணையுங்கள்



சனி, 8 அக்டோபர், 2022

பன்னிரண்டாம் வகுப்பு -பாடக்குறிப்பு அக்டோபர் முதல் வாரம்

நாள்: அக்டோபர் முதல் வாரம் 

வகுப்பு: பன்னிரண்டாம் வகுப்பு

பாடம்: தமிழ் 

தலைப்பு: இயல் 6(சிறுகை அளாவிய கூழ்)

                   1. கவிதைகள்

                    2.திரைமொழி 

                    3. நடிகர்திலகம்

கற்பித்தல் நோக்கங்கள்

• திரைக்கலையின் நுட்பங்களையும் கலை வெளிப்பாடுகளையும் அறியும் திறன் பெறுதல். 

• புதுக்கவிதையின் வடிவம்,பொருண்மை பற்றியறிதல். 

• நிகழ்வுகளை உயிரோட்டத்துடன் மொழிவழி வெளிப்படுத்தும் ஆற்றல் அடைதல். 

கற்பித்தல் உபகரணங்கள்

இணையம்,வலையொளி,தமிழிணையக்கல்விக்கழகம்- இணைப்பு, கரும்பலகை

ஆயத்தப்படுத்தல் 

1.திரைப்பட உருவாக்கம் குறித்து கலந்துரையாடல். 

2. மாணவர்களைக்கவர்ந்த புதுக்கவிதையைக் கூறச்செய்தல். 

3. நடிகர்திலகம் பற்றிய சுவையான செய்திகளைக் கூறுதல்.

ஆசிரியர் செயல்பாடு

திரைமொழி

திரைப்படம் தோன்றிய வரலாறு கூறுதல்.

திரைக்கதை,காட்சியின் ஆற்றலை விளக்குதல். வலையொளி காட்டி விளக்குதல். 

அண்மைக்காட்சி,சேய்மைக்காட்சி ,நடுக்காட்சி மூன்றையும் வலையொளிமூலம் விளக்குதல்.

படத்தொகுப்பு, ஒலிப்பதிவு நடைபெறும் முறையை விளக்குதல்.

நல்லதிரைப்படத்தையும் திரைப்படநூல்கள் குறித்தும் கூறுதல். 

கவிதைகள்

நகுலனின் கவிதைகள் பற்றிக்கூறுதல்.

கவிதைகளின் பொருள் குறித்து கலந்துரையாடல். 

நகுலனின் கவிதைப்பணி குறித்துக் கூறுதல். 

நடிகர்திலகம்

பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பற்றி கூறுதல்.

கட்டுரையாளர் நடிகர்திலகம் சந்திப்பு குறித்து உணர்வுப்பூர்வமாகக்கூறுதல். 

நடிகர்திலகத்தின் நடிப்புத்திறனை விளக்குதல்.

வலையொளி மூலம் சிவாஜியின் நடிப்புத்திறனைக்காட்டுதல். 

மாணவர் செயல்பாடு

திரைப்படஉருவாக்கம் குறித்து கலந்துரையாடல். 

புதுக்கவிதை சிலவற்றைக் கூறுதல் .

புதுக்கவிதையின் வடிவம் குறித்து கலந்துரையாடல்.

நடிப்பில் உச்சந்தொட்ட நடிகர்திலகத்தின் திரைப்படங்களையும் நடிப்புத்திறனையும் கூறச்செய்தல். 

உரைநடையைப் பொருளோடு வாசித்தல்.

மதிப்பீடு

திரைப்படம் தோன்றிய வரலாற்றைக் கூறுக. 

நகுலன் எழுதிய கவிதைநூல்கள் யாவை? 

சிவாஜிகணேசன் பெற்ற விருதுகள் யாவை?

கற்றல்விளைவுகள்

திரைப்பட உருவாக்கம் பற்றி அறிந்து கொண்டனர். 

புதுக்கவிதை பற்றியும் அதன் பொருண்மை பற்றியும் அறிந்து கொண்டனர். 

தென்னிந்திய சினிமாவின் நடிப்புச் சக்கரவர்த்தி பற்றியும் அவர்தம் நடிப்புத் திறன் பற்றியும் அறிந்து கொண்டனர். 

தொடர்பணி

1. நீ கண்டுகளித்த திரைப்படத்தின் திரைநுட்பங்கள் குறித்து விவாதிக்க. 

2. உனக்குப்பிடித்த புதுக்கவிதைகளைத் தொகுத்து தொகுப்பேடு உருவாக்குக. 

3. சிவாஜிகணேசன் குறித்த பிறசெய்திகளைத் தொகுத்து வகுப்பறையில் இரண்டுநிமிடம் பேசுக.





புதன், 5 அக்டோபர், 2022

நாலடியார்

 நாலடியார்: பாடல் எண் 3

செல்வம் நிலையாமை

பாடல்

யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச் 

சேனைத் தலைவராய்ச் சென்றோரும்-ஏனை 

வினையுலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட

மனையாளை மாற்றார் கொள.

பதவுரை

எருத்தம் - பிடரி 

குடைநிழல்-வெண்கொற்றக்குடைநிழல் 

ஏனைவினை-தீவினை 

உலப்ப - கெடுக்க

மனையாள் -மனைவி 

மாற்றார் - பகைவர்

கருத்துரை:

யானையின் அழகியபிடரியில் அமர்ந்து வெண்கொற்றக்குடைநிழலில் படைகளுக்கெல்லாம் தலைமைப்பொறுப்பேற்று வாழ்வோரும், தீவினைச் சூழுங்கால் தம்நிலையினின்று தாழ்ந்து, தம்நாட்டையும் அன்புடன் கைகோர்த்த மனைவியையும் பகைவர் கைக்கொள்ள தம்நிலையினின்று தாழ்வர்.

தொகுப்புரை:

செல்வச்செழிப்பில் திளைப்போரும் தீவினைச் சூழுங்கால் செல்வம், நாடு, நகரமிழந்து கட்டியமனைவியையும் பகைவர் கொள்ளும் நிலையும் வரலாம்.செல்வமும் செல்வாக்கும் நிலையற்றதென உணருங்கள்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 

பாடல் எண் 4 

செல்வம் நிலையாமை

நின்றன நின்றன நில்லா எனவுணர்ந் 

தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க; 

சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் 

வந்தது வந்தது கூற்று. 

பதவுரை: 

நின்றன - நிலைத்திருப்பன 

ஒன்றின - பொருந்தின 

வல்லே - விரைந்து

சென்றன - செல்கின்றன,கழிகின்றன 

செறுத்து - சினந்து

கூற்று - காலன் 


கருத்துரை

நம்முடைய வாழ்நாள் சிறிதுசிறிதாக கழிந்துகொண்டிருக்கிறது. உயிரைக்கொல்லுங்காலன் சினந்து வந்துகொண்டிருக்கிறான். நிலைத்துநிற்குமென்று நாமெண்ணிக் கொண்டிருக்கும் பொருள்களெல்லாம் நில்லாது போய்விடும்.அதற்குள்,பொருத்தமான அறச்செயல்களை விரைந்து செய்துகொள்ளுங்கள். 

தொகுப்புரை

நம்மிடமுள்ள செல்வம் நிலைத்திருப்பதில்லை.அதனால் இறுதிக்காலம் நெருங்குமுன் இயன்ற நற்செயல்களை விரைந்து செய்யவேண்டும்.

~~~~~~~~~~~~~~~~~~~~€€€€~~~~~~~~~~~~ 

பாடல் எண் 5

என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்     

பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே

கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்

கொடுத்தாறு செல்லும் சுரம்.

பதவுரை

என்னானும் - ஏதாகிலும்

பெற்றக்கால் - பெற்றபொழுது 

பின்னாவதென்று - பிற்காலத்தில் உதவுமென்று 

பிடித்திரா - பிடித்து வைக்காதீர் 

உயப்போவார் - நற்கதியடைவார் 

கோடில் தீக்கூற்றம் - யாருக்கும் வளைந்து கொடுக்காத கூற்றுவன்

ஆறு - வழி 

சுரம் - பாலை





சனி, 1 அக்டோபர், 2022

நாலடியார்

 பாடல் எண் 2

செல்வம் நிலையாமை

துகள்தீர் பெருஞ்செல்வம்- தோன்றியக்கால் தொட்டுப்

பகடு நடந்தகூழ் பல்லாரோடு உண்க 

அகடுற யார்மட்டும் நில்லாது செல்வம்

சகடக்கால் போல வரும் .

பதவுரை: 

துகள்தீர்-குற்றமிலாத 

தோன்றியக்கால் - பெறுங்காலத்தில் 

பகடு- எருமை 

கூழ்-உணவு 

அகடுற - நடுவுநிலையாக நிலைத்திருத்தல்

சகடக்கால் -வண்டிச்சக்கரம் 

கருத்துரை

செல்வமானது யாரிடமும் நிலைத்து நிற்பதில்லை.சக்கரம் மேலும் கீழும் சுழல்வதுபோல் செல்வமானது இன்றொருவரிடமும் நாளை மற்றவரிமுமாக மாறிக்கொண்டே செல்லும் தன்மையது.அதனால், நீங்கள் குற்றமிலாத செல்வத்தைப்பெறும் காலத்தில் பூட்டி வைக்காமல் எருமைகள் நடந்ததால் கதிரிலிருந்து பிரிந்த தானியங்களை கூழாக்கி எல்லாரோடும் பகிர்ந்து உண்ணுங்கள்.

தொகுப்புரை: 

செல்வம் நிலையற்றது.நீங்கள் செல்வத்தைப்பெறும் காலத்தில் எல்லாரோடும் பகிர்ந்து மகிழ்ந்து வாழ்வீர்.



மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...