வியாழன், 29 அக்டோபர், 2020

பத்தாம் வகுப்பு இரண்டு மதிப்பெண் வினா விடைகள்

                பத்தாம்வகுப்பு

இரண்டு மதிப்பெண் வினா விடைகள்
1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாக பாவலரேறு சுட்டுவன யாவை?
1.செழுமை மிக்க மொழி எம் உயிர்
2.சொல்லுதற்கு அரிய நின் பெருமைகளை என்னுடைய நா விரித்துரைக்கும்.
3.பழம் பெருமையும் தனக்கெனத் தனிச்சிறப்பும் இலக்கிய வளமும் கொண்டது தமிழ்.
4.வியக்கத்தக்க நீண்ட நிலைத்த தன்மையும் வேற்றுமொழி யார் உரைத்த புகழ் உரையும் உணர்வும் கொண்டவை தமிழ்மொழி.
------------------------------------------------------
2. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
வெளியூர் சென்று வந்திருந்த பாவாணரிடம் அவரது நண்பர் பகல் உணவும் இராவுணவும் எப்படி இருந்தது? எனக் கேட்டார் அதற்கு பாவாணர் பகலுணவு பகல் உணவாகவும் இராவு 'இரா'உணவாகவும் இருந்தன என்றார்.
(இரா உணவு- உணவின்றி இரவைக் கழித்தார்)
-------------------------------------------
3.வேங்கை என்பதை தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
வேங்கை ---வேங்கை என்பது மரத்தைக் குறிக்கும் இது தனி மொழி.
வேம்+கை-வேங்கை
வேகின்ற கை எனப் பொருள்படும்.
-----------------------------------
4. உலக காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்க தொடர்களை எழுதுக.
மரங்கள் வளர்ப்போம்; உயிர்கள் வாழ தூய்மையான காற்றை பெறுவோம்.
மண் வளத்தைக் காக்க, மரங்களை வளர்ப்போம்.
----------------------------
5. வசன கவிதை குறிப்பு வரைக
உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம்.
---------------------------
6.மாஅல்-பொருளும் இலக்கணக்குறிப்பும் தருக.
மாஅல் என்பதன் பொருள் 'திருமால்'
மாஅல் என்பதன் இலக்கணக்குறிப்பு செய்யுளிசை அளபெடை.
------------------------------
7. விருந்தினரை மகிழ்வித்துக்கூறும் முகமன் சொற்களை எழுதுக.
வணக்கம் வாருங்கள்.
உட்காருங்கள்.
உங்கள் பயணம் இனிமையாக இருந்ததா?
தங்கள் வீட்டில் அனைவரும் நலமாக உள்ளார்களா?
தண்ணீர் குடியுங்கள்.
-------------------------------
8."இறடிப்பொம்மல் பெறுகுவீர்"- தொடர் உணர்த்தும் பொருள் எழுதுக.
கூத்தரே! தினைச் சோற்றை பெறுவீர்கள்.
--------------------------------
9. 'நச்சப்படாதவன்' செல்வம் இத்தொடரில் வண்ணம் இட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
நச்சப்படாதவன் - பிறருக்கு உதவி செய்யாதவன் ஆகையால் எவராலும் விரும்பப்படாதவர்.
-----------------------------------
10.முல்லை நிலத்திலிருந்தும்
மருத நிலத்திலிருந்தும் கிடைக்கும் உணவு வகைகள் யாவை?
முல்லை நிலம்
தினை, வரகு சாமை,முதிரை, பால் ,நெய்
மருதநிலம்
செந்நெல் அரிசி
 வெண்ணெல் அரிசி 
தினைச்சோறு




வியாழன், 22 அக்டோபர், 2020

பத்தாம் வகுப்பு - நண்பனுக்கு வாழ்த்துமடல்

    மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் என்னும் தலைப்பிலான கட்டுரை போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்து மடல் எழுதுக   
--------------_---------------------------------------------
                                               6.07.2021.                                                  ம.ரெட்டியபட்டி .
அன்புள்ள நண்பனுக்கு,
                             நலம். நலமறிய ஆவல்
உன் குடும்பத்தாரின் நலத்தையும் அறிய விழைகிறேன்.
                   மாநிலஅளவில் நடைபெற்ற 'மரம் இயற்கையின் வரம்' என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றிருப்பதாக அறிந்து அகமிக மகிழ்ந்தேன்.
            இன்றைய நிலையில் உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய  பிரச்சினை சுற்றுச்சூழல் மாசுபாடு.
சுற்றுச்சூழலை பேணிக்காப்பதில் மரங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இந்தக் கருத்தை உணர்த்தும் வகையிலான உன்னுடைய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்திருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி.
இதுபோன்று மேன்மேலும் பல்வேறு பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.
                                              அன்புடன்,
                                               இனியன்
உறைமேல் முகவரி,
வளவன்,
கபிலர் தெரு,
உடன்குடி,
திருநெல்வேலி



பொருள்கள்-பொருட்கள் எது சரி?

பொருள்கள்/பொருட்கள் எது சரி?
இதைப்பற்றி அறிந்துகொள்ள லகர,ளகர ஈற்றுப்புணர்ச்சி பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
கல் - கற்கள்
சொல்- சொற்கள்
முள் - முட்கள்
இதில் கள்- விகுதி புணரும் போது லகரம் றகரமாகவும், ளகரம் டகரமாகவும் மாறுகிறது. அப்படியெனில் பொருட்கள் சரிதானே இது ஒரு வாதம். இருக்கட்டும்
விரல்-விரல்கள்
குறள் -குறள்கள்
வாள் - வாள்கள்
தாள் - தாள்கள்
என்று ஆகிறதே தவிர விரற்கள், குறட்கள், தாட்கள் என ஆகவில்லையே இது ஒரு வாதம் . 
சரி நாம் ஒரு முடிவுக்கு வருவோம்.
1. தனிக்குறிலை அடுத்து லகரமும், ளகரமும் இடம்பெற்றால் லகரம் றகரமாகவும்,ளகரம் டகரமாகவும் மாறும்.
பல் - பற்கள்
சொல் - சொற்கள்
முள் - முட்கள்
2. தனிநெடிலோ, இரண்டு குறில்களை அடுத்தோ , பல எழுத்துகளின் இறுதியிலோ லகரமும் , ளகரமும் இடம்பெற்றால் இந்த மாற்றம் நிகழாது.
இதனால் சொற்களில் நிகழும் மாற்றங்கள்.
1.நாள் - நாள்கள்
2.தாள் - தாள்கள்
3.ஆள்- ஆள்கள்
4. பொருள்- பொருள்கள்
எனவே நாட்கள், ஆட்கள், பொருட்கள் என்பதை தவிர்க்க முயல்வோம்.

செவ்வாய், 6 அக்டோபர், 2020

பத்தாம் வகுப்பு -உணவுப் பாதுகாப்பு ஆணையருக்கு கடிதம் எழுதுதல்

உணவு விடுதியொன்றில் உணவு விலை கூடுதலாகவும் தரமற்றதாகவும் இருப்பதை உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கடிதம் எழுதுக.
அனுப்புநர்,
                 த.இளங்கோ,
                  18- தெற்குத் தெரு,
                 ம.ரெட்டியபட்டி(அஞ்சல்),
                  அருப்புக்கோட்டை (வட்டம்),
                   விருதுநகர் மாவட்டம்.
பெறுநர்,
       உணவுப் பாதுகாப்புஆணையர் அவர்கள்,
        உணவுப்பாதுகாப்பு  அலுவலகம்,
                விருதுநகர்.
ஐயா,
பொருள்; உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாக இருப்பதால் நடவடிக்கை எடுக்கக்கோருதல்-சார்பு
வணக்கம் நேற்று நான் அருப்புக்கோட்டையில் வங்கிக்கு சென்று இருந்தேன். மதிய நேரத்தில உணவு உண்பதற்காக அருகிலிருந்த குமரன் உணவு விடுதிக்குச் சென்றேன். சாப்பாட்டின் விலை 50 ரூபாய் என விலை பட்டியலில் இருந்தது சாப்பிட்டு முடித்துவிட்டு காசாளரிடம் பணம் கொடுக்கும்போது 70 ரூபாய் என்று கூறினார் நான் அவரிடம் விலைப் பட்டியலில் உள்ள விலையை காட்டினேன் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். மேலும், உணவு உண்ட அரை மணி நேரத்தில் எனக்கு வயிற்று வலியும் ஏற்பட்டது. இந்த உணவகத்தில் விலை கூடுதலாகவும் தரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்வதாலும் தாங்கள் இந்த உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
                      நன்றி
                               இப்படிக்கு,
                               த.இளங்கோ
உறைமேல் முகவரி,
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு அலுவலகம்,
விருதுநகர்.

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

ஈரொற்று எங்கு வரவேண்டும்?

தமிழில் இரண்டுஒற்றுகள் அடுத்தடுத்து வருவது சில எழுத்துகளாக மட்டுமே இருக்கும். ய் ர் ழ் இந்த மூன்று மெய்யெழுத்துக்கள் மட்டுமே இவற்றை ஏற்கக்கூடிய தன்மையுடையன ய் ர் ழ் இந்த எழுத்துக்களை தொடர்ந்து க் ங் ச் ஞ் த் ந் ப் ம் - எட்டு மெய்யெழுத்துக்கள் மட்டுமே ஈரொற்றாய் வரக்கூடியது. (எ.கா)
ய்
 வாய்க்கால் - க் 
வேய்ங்குழல் - ங் 
பாய்ச்சல் - ச் 
மெய்ஞ்ஞானம் - ஞ் 
காய்த்தல் - த் 
பாய்ந்தது - ந் 
வாய்ப்பு - ப் 
ம் - இணைந்து வரும் சொல் தற்காலத்தமிழில் இல்லை ---------------------------------------- 
ர்
 பார்க்கும் - க்
 ஆர்ங்கோடு - ங்
 உயர்ச்சி - ச்
 பார்த்தான் - த்
 சேர்ந்தது - ந்
 பார்ப்பு - ப்
 ஞ் ம்- இரண்டு எழுத்துகளுக்கான சொற்கள் தற்காலத்தமிழில் இல்லை --------------------------------------- 
ழ்
 வாழ்க்கை - க்
 தாழ்ங்கிளை - ங்
 தாழ்ச்சி - ச்
 வாழ்த்து - த்
 ஆழ்ந்து - ந்
 காழ்ப்புணர்ச்சி - ப்
 ஞ் ம் - இரண்டு எழுத்துகளுக்கான சொற்கள் தற்காலத்தமிழில் இல்லை --------------------------------------
- இவற்றைத் தவிர வேறு எழுத்துகள் தமிழில் ஈரொற்றாய் வராது

 இராம் முருகன் தமிழாசிரியர்

சனி, 11 ஏப்ரல், 2020

அனைத்து பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய கீழ்கண்ட லிங்கை சொடுக்கவும்            http://tnschools.gov.in/textbooks                    

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...