ஞாயிறு, 22 மே, 2022

தேனீரா ? தேநீரா?

 தமிழ் செழுமையுற வேண்டுமெனில் அங்காடிகள், வணிகநிறுவனங்கள், விற்பனை செய்யப்படும் பொருள்களின் பெயர்கள் தமிழிலேயே இருக்கவேண்டும்.

அதுவும் பிழையற்றதமிழில் அமைவது நலம்.


பிழையின்றி எழுதுவதற்கு தமிழ்இலக்கணம் இன்றியமையாதது.இன்றைய பதிவில் அப்படியொரு பெயரை அறிந்து கொள்ளலாமா?


தேனீர்க்கடை/தேநீர்க்கடை


இவ்விரண்டு பெயரில் எதுசரியென

புணர்ச்சிவிதிப்படி அறிவோம்.


தேனீர் - இச்சொல்லைப்பிரித்தால் தேன்+நீர் எனப்பிரியும்.


தனிக்குற்றெழுத்தைச்சாராத னகர,ணகரங்கள் முன் நகரமெய் வருமிடத்து திரிந்து இருவழியினுங்கெடும்.


இப்போது விளக்கமாகப்பார்க்கலாம்.


தேன்+நீர்

தேன்+(ந்+ஈ)ர்

தேன்+(ன்+ஈ)ர் (ந்,ன் ஆக திரிந்தது)

தே+னீர் (நிலைமொழியீறு கெட்டது)

தேனீர்.

மேற்கூறிய விதிப்படி,

நகரமெய் திரிந்து இருவழியினுங்கெட்டது.


இப்புணர்ச்சியின்படி தேன்கலந்த நீரையே 'தேனீர்' எனல் வேண்டும்.


தேயிலை முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது.இதனை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் அறிந்திருந்தனர். பின் சீனாவிற்கு புத்த மதத்தைக் கற்க வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு 800 களில் தேயிலை ஜப்பானுக்குப் பரவியது. ஜப்பானிலிருந்து டச்சுக்காரரகள் வழியாக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்றஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது. 1840-50 களில் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்தது.

'தே' என்னுஞ்செடியின் இலையைப்பக்குவப்படுத்தி வடிக்கும் நீரே தேநீராகும்.


தே+நீர் - தேநீர் (Tea)


இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

தேநீர்க்கடை என்பதே சரியான பெயராகும்.


அங்காடிகளின் பெயரைச் சரியான தமிழில் எழுதுவோம்.


ஆக்கமும் இடுகையும்

இராம்முருகன்

ம.ரெட்டியபட்டி.

விருதுநகர் மாவட்டம்

தன்னலம்/தந்நலம் எது சரி?

 தன்னலம்/தந்நலம்

இவ்விரண்டு சொற்களைப்பயன்படுத்துவது எப்படி?

றன்னகரம் பயின்று வரும் 'தன்னலம் '

தந்நகரம் பயின்று வரும் 'தந்நலம் '

இவ்விரண்டு சொற்களில் 'தன்னலம் '

என்னும் சொல்லையே பெருமளவு தொடர்களில் பயன்படுத்துகிறோம்.

தந்நலம் -என்னுஞ்சொல்லை நாம் பயன்படுத்துவது குறைவு . காரணம் இச்சொல்லை எங்கு/எப்படிப் பயன்படுத்துவதென்ற அறியாமை.

இவ்விரண்டு சொற்களையும் முறையாகப்பயன்படுத்த இவற்றின் புணர்ச்சி பற்றி அறிவோம்.


தான் , தாம் என்பவை படர்க்கை இடப்பெயர்கள்.இவை திரியும்போது முறையே தன்,தம் என மாறும்.

இதில் 'தன்' படர்க்கை ஒருமையையும்,'தம்' ஓரோவிடத்தில் மரியாதை ஒருமையாகவும்,பெருமளவு பன்மைப்பொருளிலும் வரும்.


தன்+நலம் 

“னலமுன் றனவும் ணளமுன் டணவும்

ஆகும் தநக்கள் ஆயுங் காலே ” நன்னூல் – 237

னகவீற்றுப்புணர்ச்சியின்படி,

வருமொழி முதலில் வரும் நகரமெய்யானது னகரமெய்யாக மாறும்.

தன்+(ந்+அ)லம்

தன்+(ன்+அ)லம் (ந் - ன் ஆக மாறியது)

தன்னலம் - இது படர்க்கை ஒருமையைக்குறிக்கும்.


சான்று

குமரன் தன்னலமின்றி ஊருக்குப்பாடுபட்டான்.


மாடசாமி தன்னலமற்ற தலைவனாக வாழ்ந்தான்.


இவ்விரண்டு தொடர்களிலும் எழுவாய் ஒருமை.எனவே,ஒருமைக்குரிய 'தன்னலம்' என்னுஞ்சொல்லைப்பயன்படுத்தியுள்ளோம்.


தம்+நலம்


தம்-மகரவீறு (படர்க்கைப்பன்மை)


மகரவீற்றுப்புணர்ச்சியின்படி,

நும், தம், எம், நம் என்னும் நான்கு சொற்களின் இறுதியில் உள்ள மகர மெய்யானது, வருமொழி முதலில் வருகின்ற ஞகர மெய்யாகவும், நகர மெய்யாகவும் திரியும்.


நும், தம்

எம், நம் ஈறாம் மவ்வரு ஞநவே (நன்னூல், 221)


தம்+நலம்-தந்நலம்

(நிலைமொழி மகரமெய்(ம்)நகரமெய்யாக(ந்)மாறியது.)


சான்று


ஆசிரியர்கள் தந்நலமின்றி மாணவர்களுக்காகப் பாடுபாட படவேண்டும்.


ஊராட்சிமன்றத்தலைவர்கள் தந்நலமின்றி மக்களுக்குப் பணியாற்ற வேண்டும். 


இவ்விரண்டு தொடர்களிலும் எழுவாய் பன்மை.எனவே,'தந்நலம்'என்னுஞ்சொல்லைப் பயன்படுத்தியுள்ளோம்.


தன்னலம்/தந்நலம் வேறுபாடறிந்து மொழியைச்செழுமையாக்குவோம்.


ஆக்கமும் இடுகையும்

இராம்முருகன்

ம.ரெட்டியபட்டி

விருதுநகர் மாவட்டம்

சனி, 21 மே, 2022

மெய்யீற்றின்முன் உயிர் - புணர்ச்சி விதிகள்

 மெய்யீற்றின்முன் உயிர் -புணர்ச்சியறிவோம்

இரண்டுசொற்கள் இணையும்போது முதலில் நிற்கும் சொல் நிலைமொழி. அடுத்ததாக வரக்கூடிய சொல் வருமொழி. நிலைமொழியின் ஈற்றில் மெய்யெழுத்து நிற்க, அதை 'மெய்யீறு' என்பர்.


சான்று:மரம்,பெண்,ஆண்,அறன், குறள், நிரல்


வருமொழி முதலானது உயிரெழுத்தாக இருந்தால் (அழகு,அடி,ஆற்றல், இன்பம் ) இருவேறு வழிகளில் சொற்களிணையும்.இதையே 'மெய்யீற்றின்முன் உயிர்' என்று கூறுகிறோம்.


1. நிலைமொழியில் தனிக்குறிலைச்சாராத மெய் அதாவது,தனிநெடிலடுத்த மெய்யாகவோ, ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களுக்குப்பின் இடம்பெறும் மெய்யாகவோ இருப்பின்,வருமொழிவுயிர் மெய்யின்மேல் ஏறிநிற்கும்.


சான்று :

ஆண்+ஆதிக்கம் 

ஆ(ண்+ஆ) திக்கம்

ஆணாதிக்கம்

ஆண் - தனிநெடிலடுத்த மெய்

ஆதிக்கம்-உயிர்முதல்

ண்+ஆ -ணா -உயிர் மெய்மேல் ஏறியது. 


மரம்+அழகு

மர(ம்+அ)ழகு

மரமழகு


மரம் -ஒன்றுக்குமேற்பட்ட எழுத்தின்பின் மெய்

அழகு- உயிர்முதல்

ம்+அ - ம - உயிர் மெய்மேல் ஏறிது.

இதற்குரிய புணர்ச்சி விதி


'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே'


2 . தனிக்குறிலையடுத்த மெய் வருமொழி முதலில் உயிர்வரின் இரட்டித்துப்புணரும்.


சான்று

பெண்+அழகு

பெண்ண்+அழகு (மெய் இரட்டித்துள்ளது)

பெண்(ண்+அ)ழகு(உயிர் மெய்மேல் ஏறியது)

பெண்ணழகு 


இப்புணர்ச்சியில் இரண்டுவிதிகள் செயல்பட்டுள்ளன.

1.தனிக்குறில்முன் மெய் உயிர்வர இரட்டும்.(கண்ண்+அழகு)


2.உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (ண்+அ -ண)


இவ்விரண்டு புணர்ச்சிவிதிகளையுமறிந்து மொழியைச் செழுமைசெய்வோம்.


புணர்ச்சியிலக்கணத்தொடர்: 3


ஆக்கமும் இடுகையும்

இராம்முருகன்

ம்.ரெட்டியபட்டி

விருதுநகர் மாவட்டம் 626118

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...