சனி, 11 ஜூலை, 2026
செவ்வாய், 12 மே, 2026
தொல்காப்பியம்
எழுத்துகளின் வகை
1. எழுத்து எனப்படுப,
அகரம் முதல்
னகர இறுவாய், முப்பஃது' என்ப-
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே.
தமிழெழுத்துகளின் எண்ணிக்கை அகரமுதல் னகரம்வரை மொத்தம் முப்பதாகும். இந்த எண்ணிக்கையானது மேற்கண்ட முப்பதெழுத்துகளைச்சார்ந்துவரும் சார்பெழுத்துகள் மூன்றும் நீங்கலாகக்கொள்க.
2. அவைதாம்,
குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆய்தம் என்ற
முப்பாற்புள்ளியும், எழுத்து ஓரன்ன.
முந்தையநூற்பாவில் கூறப்பட்ட சார்பெழுத்துகள் என்பவை குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் ஆகியனவாகும்.
(நன்னூலார் சார்பெழுத்துகளைப் பத்தாக வகைப்படுத்தியுள்ளார்)
மாத்திரை
3. அவற்றுள்
`அ, இ, உ, எ, ஒ' என்னும் அப்பால் ஐந்தும்
ஓர் அளபு இசைக்கும், `குற்றெழுத்து' என்ப.
முப்பது எழுத்துகளுள் உயிரெழுத்துகளை அவை ஒலிக்கும் காலஅளவைப்பொறுத்து குறில், நெடிலென வகைப்படுத்தியுள்ளார்.
ஒருமாத்திரையளவில் ஒலிப்பவை குறிலெழுத்துகள். அ ,இ, உ,எ ,ஒ ஆகிய ஐந்தும் குறிலெழுத்துகளாம்
4. ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும்
அப்பால் ஏழும்
ஈர் அளபு இசைக்கும், `நெட்டெழுத்து' என்ப.
இரண்டுமாத்திரையளவில் ஒலிப்பவை நெடிலெழுத்துகள் ஆகும்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழும் நெடிலெழுத்துகளாம்.
5. மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே.
மூன்று மாத்திரையளவில் ஒலிக்கும் எழுத்துகள் மொழியில் இல்லை.
6. நீட்டம் வேண்டின், அவ் அளபுடைய
கூட்டி `எழூஉதல்' என்மனார் புலவர்.
ஓசைநயம் வேண்டி மாத்திரையளவை நீட்ட விரும்பினால் எத்தனைமாத்திரை நீட்டியொலிக்க வேண்டுமோ அந்த அளவுடைய எழுத்துகளை இணைத்து எழுதுக.
7. கண் இமை, நொடி என அவ்வே மாத்திரை-
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே.
ஒலிக்கும் கால அளவைப் பொறுத்து எழுத்துகளை வகைப்படுத்திய புலவர் இந்நூற்பாவில் மாத்திரை பற்றி விளக்குகிறார்.
மொழியை நுட்பமாக ஆய்ந்து கூறிய முன்னோர் கூற்றுப்படி கண்ணிமைக்கும் காலம் அல்லது கைநொடிக்கும் காலஅளவே ஒருமாத்திரையளவு என்கிறார்.
8. ஒளகார இறுவாய்ப்
பன்னீர்-எழுத்தும் `உயிர்' என மொழிப.
அகரமுதல் ஔகாரம்வரையிலுள்ள பன்னிரண்டு எழுத்துகளும் உயிரெழுத்துகளாம்
9. னகார இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் `மெய்' என மொழிப.
ககரம் முதல் னகரம்வரையிலான பதினெட்டு எழுத்துகளும் மெய்யெழுத்துகளாம்
10. மெய்யொடு இயையினும், உயிர் இயல் திரியா.
உயிரெழுத்துகள் மெய்யோடு கூடி உயிர்மெய்வடிவம் பெறும்போது உயிரெழுத்துகள் தமக்கியல்பான மாத்திரை அளவினின்று மாறா.
க்+அ-க அரைமாத்திரை அளவுள்ள மெய்யும் ஒருமாத்திரையளவுள்ள உயிர்க்குறிலும் இணைந்து ககர உயிர்மெய் உருவாகும்போது மெய் தனக்குரிய அரைமாத்திரை அளவை இழக்கிறது. மாறாக, உயிர் தனது இயல்பான ஒரு மாத்திரை அளவை இழப்பதில்லை. ககரமெய் ஒரு மாத்திரையளவையே பெறுகிறது
11. மெய்யின் அளபே `அரை' என மொழிப.
மெய்யானது அரைமாத்திரையளவில் ஒலிக்குந்தன்மையுடையது.
12. அவ் இயல் நிலையும், ஏனை மூன்றே.
மெய்களின் மாத்திரையளவான அரைமாத்திரையளவையே சார்பெழுத்துகளாகச்சுட்டப்பட்ட குற்றியலுகரம் குற்றியலிகரம் ஆய்தம் ஆகியனவும் பெறுகின்றன.
13. அரை அளபு குறுகல் மகரம் உடைத்தே;
இசையிடன் அருகும், தெரியும் காலை.
அரைமாத்திரையளவுள்ள மெய்களுள் மகரமெய் இசையுடன் கூடிய செய்யுளில் தனக்குரிய அரைமாத்திரையளவில் குறைந்து கால்மாத்திரையளவில் ஒலிக்கும்.
(இதுபோன்ற குறுக்கங்களை நன்னூலார் சார்பெழுத்துகளாகச்சுட்டியுள்ளார்.)
மனோன்மணியம்
4.1 மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில் Act என்று குறிப்பிடலாம். களம் என்ப...
-
நாள்: (12.6-23-16-6.23) வகுப்பு : பன்னிரண்டாம் வகுப்பு பாடம்: தமிழ் தலைப்பு: இயல் 1 கவிதைப்பேழை- இளந்தமிழே ...
-
நாள்: 11.11.24 - 15.11.24 வகுப்பு: பதினோராம் வகுப்பு பாடம்: தமிழ் தலைப்பு: இயல் 7 பதிற்றுப்பத்து, சிந்தனைப் பட்டிமன்...
-
நாள்:12.6.23-16.6.23 பாடம்: தமிழ் தலைப்பு:இயல்1 கவிதைப்பேழை- யுகத்தின் பாடல் நன்னூல் பாயிரம் உரைநடை- ...



