வியாழன், 22 செப்டம்பர், 2022

தமிழா! நீ எழுதுவது தமிழா?

 தமிழா! நீ எழுதுவது தமிழா? 

தமிழ்மொழிக்கென்று சில தனித்தன்மைகள் உள.இத்தனித்தன்மையே மொழியின் காப்பரணாகும். பிறமொழிச்சொற்கள் கலவாமல் தமிழின் தூய்மையைக்காக்க ஒவ்வொரு தமிழரும் முன்வரவேண்டும். 

ர,ல,மெய்யெழுத்து- இவைசொல்லுக்கு முதலில் வரக்கூடாது.இவ்வெழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெற்றால் பிறமொழிச்சொற்கள் தமிழில் கலப்பதற்கு ஏதுவாகும். 

தவிர்க்கவியலாத பிறமொழிச் சொற்களைத் தமிழில் பயன்படுத்தும்போது தமிழ்வடிவில் பயன்படுத்த,நம்முன்னோர் வழிகாட்டியுள்ளனர். 

ராமமூர்த்தி, லட்சுமி,க்ரியா 

இப்பெயர்களைத் தமிழில் எழுதும்போது முதலெழுத்தாக அ இ உ போன்ற முன்னொட்டுகளைப்பயன்படுத்துக. 

இராமமூர்த்தி,இலட்சுமி (இலக்குமி) 

மெய்யெழுத்தாயின் தமிழுக்கேற்றவாறு விகுதிகளை இணைத்துத்தமிழாக்கலாம்.

ப்ரியா என்பதை பிரியா என்றும், க்ரீஷ் என்னும் பெயரை கிரீசு என்றும் எழுதலாம். இதுவெல்லாம் தவிர்க்கவியலாத சூழலில் மட்டுமே. இப்பெயர்களைத்தவிர்த்து தனித்தமிழில் பெயர்வைத்தால் குழப்பமே மில்லை. 

ராமமூர்த்தி என்பவரின் மகன் இனியன் 

தம்பெயரை ரா.இனியன் என்றெழுதுகிறான்.முன்பெல்லாம் தமிழாசிரியர்கள் இதுபோன்று எழுதும்போது பிழையைச்சுட்டிக்காட்டி, 

இரா.இனியன் என்றெழுது எனக்கூறினார்.

ஆனால், தமிழாசிரியரொருவர் வருகைப் பதிவேட்டில் எழுதியதைப்பார்வையிட்டேன்

ரா.மாலா , ல.அன்புச்செல்வன் 

தமிழாசிரியரே இவ்வாறென்றால் தமிழ் தழைக்குமா?



ஞாயிறு, 18 செப்டம்பர், 2022

வல்லினம் மிகுதல்

 வல்லினம் விதிப்படி எல்லாவிடத்திலும் மிகுமா? 

புணர்ச்சியில் விதிகளைவிட பொருளே இன்றியமையாதது. இரண்டுசொற்கள்‌ புணரும்போது நிலைமொழி வினையெச்சமானால், அதுவும் வன்றொடர் குற்றியலுகரமானால் வருமொழி முதலில் வல்லினம் இருந்தால் இடையில் வல்லொற்றுமிகுமென்பது விதி.

படித்து+பார் - படித்துப்பார் 

நடித்து+கொடு - நடித்துக்கொடு 

எடுத்து+காட்டு -எடுத்துக்காட்டு 

ஆனால்,இவ்விதியை அப்படியே எல்லாவிடத்திலும் பயன்படுத்த முடியுமா? 

கொடுக்கப்பட்ட வினாவிடைகளைப் படித்து, பார்க்காமல் எழுதிவரவும். 

'படித்து' 'பார்க்காமல்' இவ்விரண்டு சொற்களையும் புணர்ச்சிவிதிக்காக 'படித்துப்பார்க்காமல்' என்று புணர்த்தினால் பொருள் மாறிவிடும். வினாவிடைகளைப் படிக்காமலே எழுதிவரவும் என்னும்பொருளைத்தரும். 

இங்கு விதியைக்காட்டிலும் பொருளுணர்ச்சியே கவனத்தில் கொள்ளவேண்டும். 

கொடுக்கப்பட்ட வினாவிடைகளைப் படித்து, பார்க்காமல் எழுதிவரவும்.என்று புணர்த்தாமல் எழுதும்போது வினாவிடைகளை நன்குபடித்து, பின்னர் பார்க்காமல் எழுதிவரவும்‌ என்னும்பொருளைத்தரும். 

புணர்ச்சியென்பது முதலில் பொருளுணர்ச்சியைக்காட்ட வேண்டும். 

எல்லாவிடத்திலும் அப்படியே விதிகளைத்திணிக்கக்கூடாது.




சனி, 17 செப்டம்பர், 2022

பதினோராம் வகுப்பு முக்கிய குறுவினாக்கள்

                காலாண்டுத் தேர்வு

முக்கிய குறுவினாக்கள்

1. பேச்சுமொழி எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச்சக்தி மிக்கது ஏன்?
2. பாயிரம் பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது? 
3. உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் இச்சொற்களில்  எவ்வகை ஈற்றெழுத்துக்கள் அமைந்துள்ளன?
4.இனம், மொழி குறித்த இரசூல்கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.
5. என் அம்மை ஒற்றியெடுத்த 

நெற்றி மண் அழகே!

 வழி வழி நினதடி தொழுதவர்

 உழுதவர், விதைத்தவர்

 வியர்த்தவர்கெல்லாம் 

நிறை மணி தந்தவளே!
இக்கவிதையில் இடம் பெற்றுள்ள வினையாலணையும் பெயர்களை எடுத்து எழுதுக. 
6.ஏதிலியாய் குருவிகள் எங்கோ போயின தொடரின் பொருள் யாது?
7. 'நேரடி மொழி' என கருதுவது எதனை? 
8. தமிழ்நாட்டின் மாநில மரம் குறித்து சிறு குறிப்பு வரைக. 
9. காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் செல்கிறது? 
10. வளருங்காவில் முகில் தொகை ஏறும் பொன் மாடம் எங்கும் அகிற்புகை நாறும் அடிக்கோடிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன? 
11. அலர்ந்து- பகுபத உறுப்பிலக்கணம் தருக. 
12. கோட்டை என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது? 
13. காவடிச்சிந்து என்பது யாது? 
14. தமிழர்கள் புகழ், பழி ஆகியவற்றை எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது? 
15. தீயினால் சுட்டதைப் புண் என்றும் நாவினால் சுட்டதை வடு என்றும் வள்ளுவம் கூறுவது ஏன்? 
16. மருந்து எது? மருந்து மரமாக இருப்பவர் யார்? 
17. பெருந்தகையான்கண் படின் இக்குறைட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக. 
18. சங்க காலத்தில் தமிழ் மொழியின் நிலைபற்றி இராசமாணிக்கனாரின் கூற்று யாது?  
19. கொழுஞ்சோறு -புணர்ச்சி விதி கூறுக. 
20. உவமை - உருவகம் வேறுபடுத்துக. 
21. மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம்- என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக. 
22. ஆனந்தரங்கரின் வருணனைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக. 
23. நெருங்கின, இரங்கி -பகுபத உறுப்பிலக்கணம் தருக. 
24 "ஊனமில் ஊக்கமும் ஒளிர காய்த்தநல் தீன் எனும் செல்வமே பழுத்த சேணகர்" இப்பாடலடிகளில் ஒளிர காய்த்தது எது? பழுத்தது எது? 
25. மருத்துவத்தின் பிரிவுகளாகக் குறள் கூறுவன யாவை?

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...