ஞாயிறு, 30 ஜூலை, 2023

தொல்காப்பியம் உரைவிளக்கம்

 தொல்காப்பியம் -நூன்மரபு- எழுத்ததிகாரம் 

எழுத்துகளின் வகைகள், பெயர்கள்

முதலெழுத்துகள் விளக்கம் 

1. எழுத்தெனப் படுப

    அகரமுதல் னகர இறுவாய்

    முப்பஃ தென்ப; 

   சார்ந்துவரல் மரபின் மூன்றலங்கடையே

சொற்பொருள் 

எழுத்தெனப்படுப- எழுத்து எனப்படுவது

அகரமுதல் - அகரமுதல்

னகர இறுவாய் - னகரம்வரை

முப்பஃதென்ப - முப்பது ஆகும்

சார்ந்துவரல் - முதலெழுத்துகளைச்சார்ந்துவரும் 

மூன்று- சார்பெழுத்துகள்(குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம்) 

அலங்கடையே- இம்மூன்றைத்தவிர்த்து 

விளக்கம் 

   முதலெழுத்துகளைச்சார்ந்துவரும் மூன்று சார்பெழுத்துகளை நீக்கி,அகரமுதல் னகரவீறாக ( உயிர்-12 ,மெய்-18 ) முப்பது எழுத்துகள் முதலெழுத்துகள் எனப்படும். 

------------------------------------------------------------------

நூற்பா எண் -2

சார்பெழுத்துகள் விளக்கம் 

அவைதாம்,

குற்றிய லுகரம் குற்றிய லிகரம்

ஆய்தம் என்ற

முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன.

சொற்பொருள்

அவைதாம் - சார்ந்துவருமெனச்சொல்லப்பட்ட மூன்றும்

முப்பாற்புள்ளி- ஆய்தம்

எழுத்தோரன்ன- எழுத்து வகையுள் அடங்கும்.

விளக்கம்

'சார்ந்துவரல்' என முதனூற்பாவில் கூறப்பட்டனவற்றுக்கு விளக்கங்கூறுவது. 

குற்றியலுகரம் குற்றியலிகரம் மூன்றுபுள்ளி வடிவமாகிய ஆய்தமும் சார்பெழுத்துகளாம். 

இவையும்  எழுத்துவகையுள் அடங்கும்.

முதலெழுத்து -30

சார்பெழுத்து-3 

---------------------------------------------------------------------

நூற்பா எண் 3

எழுத்துகளின் ஒலியளவு


அவற்றுள்,

 அ இ உ எ ஒ என்னும் 

அப்பால் ஐந்தும் 

ஓரள பிசைக்கும் குற்றெழுத் தென்ப.

சொற்பொருள்

அவற்றுள் - முன்னர் கூறிய முதலெழுத்துகளுள் 

அ இ உ எ ஒ என்னும் - அ இ உ எ ஒ 

அப்பால் ஐந்தும் - அப்பகுதிகள் ஐந்தும்

ஓரளபிசைக்கும் - ஒருமாத்திரையளவில் ஒலிக்கும்

குற்றெழுத்தென்ப - குறிலெழுத்து என்பர்

விளக்கம்

முன்புகூறிய முதலெழுத்துக்களுள்    அ இ உ எ ஒ என்னும் ஐந்தெழுத்துகளும் ஒருமாத்திரையளவில் ஒலிக்கும் குறில் எழுத்துகளாகும். 

முதல் நூற்பாவில் முதலெழுத்துக்களையும், இரண்டாம் நூற்பாவில் சார்பெழுத்துகளையும் விளக்கிய தொல்காப்பியர், இந்நூற்பாவில் எழுத்துகள் ஒலிக்கக்கூடிய கால அளவைக் குறிப்பிடுகிறார்.

நூற்பா எண் 4

ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும்

அப்பால் ஏழும்

ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப.

விளக்கம்

ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் ஏழு நெடில்களும் முறையே, இரண்டுமாத்திரையளவாக ஒலிக்கும்.

(ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ- ஒலிக்குங்கால அளவு-இரண்டுமாத்திரைகள்) 

ஈரளபு-இரண்டுமாத்திரையளவு.

நூற்பா எண் 5

மூவள பிசைத்தல் ஓரெழுத் நின்றே.

விளக்கம்

ஓரெழுத்து தனித்துநின்று மூன்றுமாத்திரையளவாக ஒலிக்காது. அதாவது எழுத்துக்கு இரண்டுமாத்திரையளவே உச்ச அளவாகும்.

நூற்பா எண் 6 

நீட்டம் வேண்டின் அவ்வளபுடைய

கூட்டியெழூதல் என்மனார் புலவர்

சொற்பொருள்

நீட்டம் வேண்டின் - எழுத்துகளின் ஒலியளவை அதிகரிக்க வேண்டுமெனில்

அவ்வளபுடைய - நீட்டிக்க வேண்டிய அளவுடைய

கூட்டியெழூதல் - எழுத்துகளை இணைத்து எழுதவேண்டும்.

என்மனார் புலவர் -என்பர் புலவர்.

விளக்கம்

செய்யுளில் ஓசை,இசைக்காக எழுத்துகளின் ஒலியளவை அதிகரிக்க வேண்டுமெனில் நீட்டிக்க வேண்டிய அளவுடைய எழுத்துகளை இணைத்து எழுதவேண்டுமென்பர் இலக்கணமறிந்த புலவர்.

இதனை அளபெடை என்பர்

இரண்டு மாத்திரை உயரளவான நெடிலை மூன்று மாத்திரையாக ஒலிப்பதற்கு அதற்கு இனமான குறிலை இணைத்து எழுதவேண்டும்.

ஆஅ.    ஓஒ    சேஎ

ஓஒதல் வேண்டும்....(குறள் எண்: 

ஆஅதும் 


நூற்பா எண் :7


கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே


சொற்பொருள்


கண்ணிமை-கண்களை இமைக்கும் நேரம்

நொடி- விரல்நொடித்தல் (சொடுக்குதல்)

அவ்வே - அவையே

மாத்திரை - மாத்திரை அளவாகும்


நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே- இலக்கணத்தை நுண்மையாக அறிந்த சான்றோர்கள் கூறியபடி


விளக்கம்

ஒவ்வொருவகை எழுத்துக்கும் மாத்திரையளவைக்கூறிய தொல்காப்பியர்,இந்நூற்பாவில் மாத்திரையின் காலஅளவை விளக்குகிறார்.


கண்ணிமைத்தல் அல்லது கைசொடுக்குதல் இவற்றுக்குரிய கால அளவே மாத்திரையென்பது இலக்கணத்தையறிந்த சான்றோர்க்கண்டவழியாகும்.


கண்ணிமைத்தலும் ,கை சொடுக்குதலும் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும் என்பதால், இயற்கையாக நல்ல உடல்நலத்துடன் கூடிய மனிதவுடலுறுப்புகளின் செயற்பாட்டையே இங்கே அளவாகக்குறிப்பிடுகிறார்.

நூற்பா எண் 8

ஔகார இறுவாய்ப்

பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப.

ஔகார இறுவாய்- அகரம் முதலாகவும் ஔகாரம் ஈறாகவும்

பன்னீரெழுத்தும் - பன்னிரண்டு எழுத்தும்

உயிரென மொழிப - உயிரெழுத்து என்று கூறுவர். 

விளக்கம்

உயிரெழுத்துகளின் எண்ணிக்கை இத்தனையென இந்நூற்பாவில் விளக்குகிறார்.

அகரம் முதலாகவும் ஔகாரம் ஈறாகவுமுள்ள பன்னிரண்டு எழுத்துகளும் உயிரெழுத்துகளென புலவர் கூறுவர்.

அகரமுதலென முற்பகுதியில் கூறினார்.இங்கு ஔகார இறுவாய் என ஈற்றுப்பகுதியைக்கூறி விளக்குகிறார்.

உயிர் என்பதன் பொருள்

உயிர் கண்ணுக்குத்தெரியாத அருவம்.

மெய் தன்னளவில் இயக்கமின்றியும் கண்ணுக்குப்புலனாகும் வகையிலும் அமைந்தது. 

மெய்யெழுத்தினை தனித்து ஒலிக்கவியலாது. உயிருடன் இணைந்தே மெய்யானது ஒலிப்பினைப்பெறும்.அங்ஙனம் மெய்யோடு கூடி, உருவமிழந்து இயக்குஞ்சக்தியாக திகழ்வதால் இதனை உயிரென்பர்.

நூற்பா எண் 9

னகார இறுவாய்ப்

பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப.


னகார இறுவாய்- னகாரமீறாக

பதினெண் எழுத்தும் - பதினெட்டு எழுத்துகளும்

மெய்யென மொழிப - மெய்யெழுத்தென புலவர் கூறுவர்.

விளக்கம்

'ககரம்' முதலாக 'னகரம்' ஈறாகவுள்ள பதினெட்டு எழுத்துகளையும் மெய்யெழுத்துகளென்று புலவர் கூறுவர்.





திங்கள், 24 ஜூலை, 2023

பதினோராம் வகுப்பு மாதிரித் தேர்வு

               அலகுத்தேர்வு- இயல்1

மதிப்பெண்கள்:50.      காலம்:1.30 மணி

பலவுள் தெரிக.                           5×1=5

1. பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க

அ) அ.முத்துலிங்கம் -யுகத்தின் பாடல் ஆ)பவணந்தி முனிவர் -நன்னூல்.          இ).  சு. வில்வரத்தினம்- ஆறாம் திணை ஈ)இந்திரன்- பேச்சு மொழியும் கவிதை மொழியும்

1) அ ஆ 2) அ ஈ 3) ஆ ஈ 4) அ இ

2) பாயிரம் அல்லது ----------அன்றே

அ) காவியம் ஆ) பனுவல் இ) பாடல்          ஈ). கவிதை 

3) மொழி முதல் எழுத்துக்கள்------

அ) 24 ஆ) 22 இ) 18 ஈ) 216 

4) மாநகர் இலக்கணக்குறிப்பு தருக

அ) பண்புத்தொகை ஆ) முற்றும்மை 

இ) உரிச்சொற்றொடர் ஈ) தொழிற்பெயர். 

5)   எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் எந்த நூல் இலங்கை அரசின் சாகித்தியப்பரிசைப்பெற்றது?

அ) வம்சவிருத்தி ஆ) திகடசக்கரம்

இ) அக்கா ஈ) வடக்கு வீதி

அனைத்துக்கும் விடையளி.       5×1=5

6) அணிந்துரை - புணர்ச்சி விதி கூறுக.

7) வைத்தார் - பகுபதஉறுப்பிலக்கணம் தருக.

8) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராமப் போவாது- பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.

9) The pen is mightier than sword - தமிழாக்கம் தருக. 

10) விசா, பாஸ்போர்ட் - தமிழ்ச்சொல் தருக. 

குறுவினாக்கள்.                    5×2=10

11) இனம் மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையை குறிப்பிடுக

12) பாயிரம் பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?

13) பேச்சு மொழி, எழுத்து மொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச்சக்தி மிக்கது ஏன்?

14) உயிரீறு மெய்யீறு விளக்குக.

15) பாயிரத்திற்கு வழங்கும் பிற பெயர்கள் யாவை? 

சிறுவினாக்கள்.                   3×4=12

16)நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுமானால் நன்னூல் எவற்றை குறிப்பிடுகிறது?  

17) சு. வில்வரத்தினம் ஆழத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்? 

18) சொற்களின் அடிப்படையில் புணர்ச்சி எவ்விதம் அமையும்? சான்றுடன் விளக்குக.

நெடுவினா.                         2×6=12

19) நன்னூல் பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் வாயிலாக அறியலாகும் செய்திகளை தொகுத்துரைக்க.

20) தமிழர் வாழ்வோடும் புலம்பெயர் நிகழ்வுகளோடும் அ முத்துலிங்கத்தின் திணைப் பாகுபாடு எவ்வாறு இணைக்கப்படுகிறது?

அடிபிறழாமல் எழுதுக.      4+2=6

'ஏடு தொடக்கி' எனத் தொடங்கும் யுகத்தின் பாடல்

'ஆக்கியோன் பெயரே' எனத் தொடங்கும் நன்னூல் பாடல்



வெள்ளி, 21 ஜூலை, 2023

பதினோராம் வகுப்பு சிறுதேர்வு

 பதினோராம் வகுப்பு -சிறுதேர்வு

குறுவினாக்கள்

1.இனம் மொழி குறித்த இரசூல்கம்சதோவ் பார்வையை குறிப்பிடுக.

2.நேரடிமொழி விளக்குக.

3 எழுத்துமொழியைக்காட்டிலும் பேச்சுமொழி வெளிப்பாட்டுச்சக்தி மிக்கது ஏன்?

4.பாயிரத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?

5.பொதுப்பாயிரத்தில் இடம்பெறும் செய்திகள் யாவை? 

6.சிறப்புப்பாயிரத்தில் இடம்பெறும் செய்திகள் யாவை?

7.மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் எத்தனை? அவை யாவை?

8.மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள் எத்தனை? எடுத்துக்காட்டு தருக.

9.உயிரீறு, மெய்யீறு விளக்குக

10.உயிர்முதல் மெய்ம்முதல் எடுத்துக்காட்டுடன் விளக்குக

11. தொழு உரம் என்றால் என்ன?

12.ஐந்து வேளாண்மை மந்திரங்களை கூறுக.

13.ஏதிலிக்குருவிகள் எங்கோ போயின- விளக்குக.

14.உலக சிட்டுக்குருவிகள் நாள் எப்போது?

15.காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச்செல்கிறது?

16. பள்ளு இலக்கியம் குறிப்பு தருக.

17.தமிழ்நாட்டின் மாநில மரம் சிறு குறிப்பு வரைக.

சிறுவினாக்கள்

18.வடகரை நாட்டின் சிறப்புகள் யாவை?

19. தென்கரைநாட்டின் சிறப்புகள் யாவை?

20.குற்றியலுகரப்புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக

21.வேதி கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச சாத்தியமா? நம் கருத்தை எழுதுக


சனி, 15 ஜூலை, 2023

29.7.24 முதல் 2.08.24 வரைபாடக்குறிப்பு

 நாள்: 29.7.24-2.8.24

வகுப்பு: பன்னிரண்டாம் வகுப்பு 

 பாடம்: தமிழ் 

தலைப்பு : கம்பராமாயணம் , தமிழர் குடும்ப முறை 

கற்பித்தல் நோக்கங்கள் 

தமிழருக்கு உரிய பண்பாட்டுக் கூறுகளை காப்பியம் வழி படித்துணர்ந்து பின்பற்றுதல்.

யாவரும் கேளிர் என்னும் பண்பாட்டை உணர்தல்

கற்றல் விளைவுகள்

பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றான சுற்றம் தழுவி வாழ்தல் என்னும் பண்பை அறிதல்.

தமிழரின் குடும்ப உறவு முறைகளை புரிந்து அவற்றைப் போற்றும் பண்பினைப் பெறுதல். 

துணைக் கருவிகள்

            விளக்கப்படம் இணையம் மின்னட்டைகள்

ஆர்வமூட்டுதல்

கம்பராமாயணக் கதையை சுருக்கமாகக் கூறுதல். குடும்ப உறவு முறைகள் குறித்து கலந்துரையாடல்.

ஆசிரியர் செயல்பாடு 

பாட அறிமுகம்

கம்பராமாயணக் கதையின் குறிப்பிட்ட பகுதியை  கதைவடிவில் கூறுதல் குடும்பம் என்ற சொல் முதலில் தோன்றியது எப்போது? என உரையாடுதல்.

பாட வளர்ச்சி

கம்பராமாயணம் 

வேட்டுவர் குலத்தலைவனான குகனை நண்பனாக, தம்பியாக ஏற்றல். கழுகு அரசனாகிய சடாயுவைத் தந்தையாக ஏற்று இறுதிக்காரியங்களைச் செய்தல் சவரியின் பிறப்பை நீக்கி அருளல். சுக்ரீவனை நண்பனாகவும் தோழனாகவும் ஏற்றல். இராவணனின் தம்பியாகிய வீடணனைத் தம்பியாக ஏற்று இலங்கை ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தல். 

மேற்கண்ட பகுதிகளை ppt மூலம் காட்டி விளக்குதல்.

பாடலை ராகத்தோடு பாடி அருஞ்சொற்களுக்குப் பொருள் கூறுதல்.

பாடலின் பொருளை தெளிவுரையாகவும் விளக்கவுரையாகவும் 

விரித்துக்கூறுதல்.

தமிழர் குடும்ப முறை

 குடும்பம் என்னும் அமைப்பு பற்றி கூறுதல். குடும்பம் என்னும் சொல் இலக்கியங்களில் இடம்பெறும் முறை பற்றி விளக்குதல்.வாழிடங்கள் பற்றி விளக்குதல் தாய்வழிச் சமூகம் தந்தை வழிச்ச்சமூகம் பற்றி விளக்குதல் தனிக்குடும்பம், கூட்டுக்குடும்பம், விரிந்த குடும்பம் மூன்றையும் உரிய சான்றுகளோடு விளக்குதல் சங்ககாலக் குடும்ப முறைகள் பற்றி விவரித்தல்.

மேற்கண்ட செய்திகளை விளக்க விளக்கப்படங்கள் ppt பயன்படுத்துதல்.

மாணவர் செயல்பாடு

கம்பராமாயணத்தின் உறவுமுறைகள் பற்றிக் கூறுதல்

பாடலைப் பொருளோடு வாசித்தல்

கடினச்சொற்களுக்குப்பொருள் கூறுதல் பாடலின் பொருளைத் தொகுத்துக் கூறுதல் கம்பராமாயணம் நூற் குறிப்பை கூறுதல் கம்பராமாயணத்தின் உறவு முறைகள் குறித்து கலந்துரையாடல்

குடும்பம் என்ற சொல்லின் பொருள் அறிதல் குடும்பத்தை குறிக்கும் பிற சொற்களைத் தொகுத்தல். தற்போதைய குடும்ப முறைகள் பற்றி விவாதித்தல் தனிக்குடும்பம் கூட்டுக்குடும்பம் இரண்டையும் பற்றிக் கலந்துரையாடல் குடும்பம் குறித்த சங்க இலக்கியச் செய்திகளை இணையத்தில் தேடல்

வலுவூட்டல்

பாடலை இராகத்தோடு பாடி, பதவுரை, தெளிவுரை, விளக்கவுரை கூறி பாடற் கருத்தை வலுவூட்டல். குடும்ப அமைப்புகள், குடும்பம் என்னும் சொல் இடம் பெறும் இலக்கியங்கள், பல்வேறு வகையான குடும்ப முறைகளை மாணவர்களுடன் கலந்துரையாடி வலுவூட்டல்.

குறைதீர்க்கற்பித்தல்

 மெல்ல கற்கும் மாணவர்களுக்கு புரியாத பாடத்தின் பகுதியைக் கண்டறிந்து மீண்டும் விளக்குதல்.நுண்ணிலைக் கற்பித்தலைக் கொண்டு எளிய சிறு பகுதிகளாக பிரித்துக்கொண்டு, கடினச் சொற்களுக்கு பொருள் கூறி, எளிய வினாக்கள் கேட்பதன் மூலம் பாடப் பகுதியை புரிய வைத்தல்

மதிப்பீடு 

கம்பராமாயணம் நூல் குறிப்பு தருக.

 சடாயுவைத் தந்தையாக ஏற்று இராமன் செய்த இறுதி காரியங்களை விளக்குக.

குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை காரணம் எது?

 வாழிடங்களின் பெயர்களை தொகுத்து எழுதுக.

 தனிக்குடும்பம், கூட்டுக்குடும்பம் இவ்விருவகை குடும்ப அமைப்புகளும் சங்க இலக்கிய காலத்தில் இருந்ததா? அல்லது தற்காலத்தில் நடைமுறைக்கு வந்ததா? ஆய்வு செய்க.

தொடர் பணி 

இன்றைய சமூகத்தில் நிலவும் குடும்ப அமைப்பு முறைகளை ஆராய்ந்து கட்டுரை எழுதி வரவும்.

கம்பராமாயணம் காட்டும் உறவு முறைகளைத் தொகுத்து கட்டுரையாக்குக.


சனி, 1 ஜூலை, 2023

பன்னிரண்டாம் வகுப்பு பாடக்குறிப்பு ஜூலை முதல் வாரம்


 நாள்: 3.07.23 - 7.07.23

வகுப்பு: பன்னிரண்டாம் வகுப்பு 

பாடம்: தமிழ் 

தலைப்பு: பெருமழைக்காலம், முதல் கல்

கற்றல் நோக்கங்கள்

பருவ மாற்றத்திற்கான காரணங்களை அறிந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு பெறுதல்

நீர்வழிப்பாதைகளை பராமரிப்பதன் தேவையை உணர்ந்து கொள்ளும் திறன் பெறுதல்

கற்றல் விளைவுகள்

பேரிடர்க்காலங்களில் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் திறன் பெறுகிறான். இயற்கை சமநிலையை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடாது இருக்கிறான்.

நீர்வழிப்பாதைகளில் குப்பைகளைப் போட்டு சீரழிக்கும் எண்ணத்திலிருந்து விடுபடுதல்

துணைக் கருவிகள்

படங்கள், விளக்கப்படங்கள், மடிக்கணினி

ஆர்வமூட்டுதல்

வெள்ளம் தொடர்பான செய்திகளைக் காட்டுதல் வெள்ளத்தினால் ஏற்பட்ட பேரிழப்புகளை காணொளிகளாக் காட்டுதல். 

நீர்வழிப்பாதைகள் அடைபட்டால் ஏற்படும் சிக்கல்கள் குறித்துக்கலந்துரையாடல்

கற்றல் கற்பித்தல் செயல்பாடு

ஆசிரியர் செயல்பாடு

பெருமழை பெய்த பகுதிகளையும் அதனால் ஏற்பட்ட அழிவுகளையும் பட்டியலிட்டு காட்டுதல் .

புவி வெப்பமடைவதற்கான காரணங்களைக் கலந்துரையாடல்.

 பசுமைக்குடில் வாயுக்கள் குறித்து கூறுதல்.

 பணித்திட்ட பேரவை உருவாக்கம், வளர்ச்சி குறித்து மாணவர்களுக்கு விளக்குதல்.

 கார்பனற்ற ஆற்றல் பயன்பாடு குறித்து மாணவர்களுடன் விவாதித்தல்.

 வெள்ளச்சமவெளிகள் குறித்து விளக்குதல் .

வெள்ளம் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடல் .

பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கம், செயல்பாடுகள் குறித்து இணையவெளியில் மாணவர்களுக்கு காட்டி விளக்குதல்.

 பேரிடர்க்காலங்களில் நாம் செய்ய வேண்டியன ,செய்யக்கூடாதென குறித்து மாணவர்களுக்கு அறிவுரை கூறுதல்.

 மழையைக் கணிக்கும் அறிகுறிகள் பற்றி மாணவர்களுடன் விவாதித்தல்.

'முதல் கல்' கதையை உணர்வுபூர்வமாகக் கூறுதல்.

 நீர்வழிப்பாதைகளின் தேவைகள் பற்றி விளக்குதல் .

தம் சுற்றுப்புறத்தை சுற்றியுள்ள நீர்வழிப் பாதைகளைப் பராமரிக்கும் வழிகளைக் காட்டுதல்.

மாணவர் செயல்பாடு

வெள்ளம் தொடர்பான செய்திகளை மாணவர்கள் நாளிதழ்களை பார்த்துப் பட்டியலிடல் .

புவி வெப்பமயமாவதற்குரிய காரணங்களை மாணவர்கள் கலந்துரையாடல்.

 புவி வெப்பமடைவதைத் தவிர்க்க வழிமுறைகளை கூறுதல்.

 பெரு வெள்ள காலங்களில் ஏற்படும் உயிரிழப்புகள், பொருளிழப்புகளை மாணவர்கள் விவாதித்தல் .

பேரிடர் மேலாண்மை ஆணையத்தை பற்றி இணையத்தில் தெரிந்து கொள்ளுதல் 

பேரிடர்க்காலங்களில் செய்யக்கூடாத செயல்களைப் பட்டியலிடல்.

நீர்வழிப்பாதைகளின் தேவை குறித்து பேசுதல் .

நீர்வழிப் பாதைகள் அடைபட்டால் நேரக்கூடிய அவலங்கள் குறித்து கலந்தாலோசித்தல் .

நீர்வழிப் பாதைகள் அடைபடாமலிருக்க செய்ய வேண்டியவற்றை மாணவர்கள் தொகுத்து கூறுதல்.

வலுவூட்டல்

கடினமான பகுதிகளை மீண்டும் கற்பித்தல் .

வாசிப்பு பயிற்சி அளித்தல்.

 கடினப் பகுதிகளில் புரியாத பகுதிகளுக்கு விளக்கம் அளித்தல் .

எளிய வினாக்கள் கேட்டல்.

 கற்றலை உறுதி செய்தல்

மதிப்பீடு

வெள்ளச்சமவெளிகள் அழிய காரணம் யாது?

 உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கி சென்றாள் மட்டுமே புவி வெப்பமயமாதல் கட்டுப்படுத்த முடியும் இத்தொடர் மூலம் நீ அறிவன யாவை ?

பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கம் தருக.

 நீர்வழிப்பாதைகளை பாதுகாக்க என்ன செய்யலாம்?

தொடர்பணி

வெள்ளப் பேரழிவு குறித்த நாளிதழ் செய்திகளைத் தொகுக்க

மரக்கன்று நடுதலின் தேவையும் இன்றியமையாமையையும் வலியுறுத்தி கட்டுரை தயாரிக்க.

.

இராம்முருகன், தமிழாசிரியர், அரசூர்



மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...