ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

11 ஆம் வகுப்பு பாடக் குறிப்பு

 நாள் : 27.08.24 முதல்30.08.24 வரை

வகுப்பு பதினோராம் வகுப்பு 

பாடம் தமிழ் 

தலைப்பு : ஆனந்தரங்கர் நாட்குறிப்பு                                சீறாப்புராணம் 

கற்றல் நோக்கங்கள்

 நாட்குறிப்பு இலக்கியத்தின் இன்றியமையாவையை உணர்ந்து நாட்குறிப்பு எழுதுதல் 

சமய நல்லிணக்கத்தைப் போற்றி பின்பற்றுதல் 

கற்றல் விளைவுகள் 

ஆனந்தரங்களின் நாட் குறிப்பின் வழி தென்னிந்திய வரலாற்றை அறிந்து தானும் நாட்குறிப்பை எழுத முனைதல். 

சீறாப்புராணத்தின் மதீனம் புக்க படலம் வாயிலாக மதீனா நகரத்தின் சிறப்புகளை அறிவதோடு தாம் வாழும் நகரத்தின் சிறப்புகளை வெளிப்படுத்த முனைகிறான்.

துணைக் கருவிகள் 

மடிக்கணினி, விளக்கப்படம், கரும்பலகை 

ஆசிரியர் செயல்பாடு 

பாட அறிமுகம் 

டைரி என்னும் சொல்லின் பொருள் யாது? 

நீ அறிந்த பிற சமய இலக்கியங்களின் பெயர்களைக் கூறுக. 

இது போன்ற வினாக்களை எழுப்பி பாடத்தை அறிமுகம் செய்தல். 

பாட வளர்ச்சி 

நாட்குறிப்பு என்பதன் பொருள் கூறுதல் டைரி என்னும் சொல் எவ்வாறு உருவானது என்பதற்கான விளக்கம் தருதல் ஆனந்தரங்கனின் இளமைக்காலம் ஆனந்தரங்கர் நாட்குறிப்பு எழுதத் தொடங்கிய காலம் போன்றவற்றை கூறுதல் 

ஆனந்தரங்கரன் நாட்குறிப்பு வெளிப்படுத்தும் அரசியல் செய்திகள் சமுதாயச் செய்திகள் ஆனந்தரங்களின் திறமைகள் இறுதிக் காலத்தில் அவர் எழுதிய முக்கியக்குறிப்புகள் போன்றவற்றை மாணவர்களுக்கு விளக்கமாக கூறுதல் 

சீறாப்புராணம் நூற்குறிப்பு கூறுதல் 

சீறாப்புராணம் நூல் எழுந்த வரலாறு குறித்து கூறுதல் 

மதினம் புக்க படலம் வாயிலாக மதீனா நகரத்தின் சிறப்புகளைக் கூறுதல் 

மாளிகை நகரம், கொடை நகரம், பொன்னகரம், மனை நகரம், மாநகரம், ஒண்ணகரம் , செம்மை நகரமாக விளங்கிய மதினா நகரத்தின் சிறப்புகளைக் குறித்து விளக்குதல். 

பாடல்களுக்கு பதவுரை, தெளிவுரை விளக்கவுரை கூறுதல் அருஞ்சொற்களுக்கு பொருள் கூறுதல் இலக்கண குறிப்பு, பகுபத உறுப்பிலக்கணம், புணர்ச்சி விதி கூறி மாணவர்களுக்கு விளக்குதல். 

மாணவர் செயல்பாடு 

ஆனந்தரங்களின் நாட்குறிப்பின் மூலம் அறியலாகும் அரசியல் செய்திகளைத் தொகுத்து கூறுதல். சமுதாயச் செய்திகளைப் பட்டியலிடல். 

நாட்குறிப்பு இலக்கியம் குறித்து அறிந்து இந்த இலக்கியத்தின் முன்னோடிகளை இணையத்தின் மூலம் கண்டு பட்டியலிடல். 

சீறாப்புராணத்தின் மதினம் புக்க படலப் பகுதியின் கருத்துக்களைத் தொகுத்துக் கூறுதல். மதினா நகரின் சிறப்புகளை கூறுதல். கடினமான சொற்களுக்கு உரிய பொருளை மாணவருடன் கலந்துரையாடுதல். 

மதினா நகரைப் போன்று தாம் வாழும் நகரின் சிறப்புகளை வகுப்பறையில் கலந்துரையாடுதல். 

மதிப்பீடு 

1.ஆனந்தரங்கனின் வருணனைத் திறனுக்குச் சான்று தருக. 

2.ஆனந்தரங்களின் நாட்குறிப்பில் வெளியாகும் சமுதாய செய்திகள் எவையேனும் இரண்டைக் கூறுக 

3.மதினா நகரம் மாளிகை நகரம் விளக்குக 

வலுவூட்டல்

கடினமான பாடப்பகுதிகளை உரிய துணைக்கருவிகள் கொண்டு மீண்டும் விளக்குதல். எளிய வினாக்கள் கேட்டு கற்றலை உறுதி செய்தல் 

குறைதீர்க்கற்றல் 

மெல்ல கற்கும் மாணவர்கள் தடுமாறும் பகுதியினை சிறு பகுதிகளாக பிரித்துக் கொண்டு நுண்ணிலைக்கற்பித்தல் மூலம் பாடக்கருத்துக்களை மாணவர்களுக்கு புரியச்செய்தல் எளிய வினாக்கள் கேட்டு கற்றலை உறுதி செய்தல் 

தொடர்பணி 

உனது ஒரு வாரத்திய நிகழ்வுகளை நாட்குறிப்பாக எழுதி வகுப்பறையில் வாசித்துக் காட்டுக 

நீ வசிக்கும் நகரத்தின் சிறப்புகளை கட்டுரையாக எழுதுக.


இரா.முருகன், தமிழாசிரியர் அரசுமேனிலைப்பள்ளி ஆனையூர் 

12 ஆம் வகுப்பு சிறு தேர்வு

 எவையேனும் பத்துவினாக்கள் மட்டும் எழுதுக.

1. நடை அழகியல் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடும் கருத்தை கூறுக 

2.கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்று கூறுகிறார்?

3. விடியல் வனப்பு இரு சொற்களையும் ஒருங்கிணைத்து தொடரமைக்க.

4. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது விளக்கம் தருக.

5. புக்கில் தன்மனை விளக்குக.

6. நிலையாமை குறித்து சவரி உரைக்கும் கருத்து யாது?

7. எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுதீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

8. சங்ககாலத்தில் தாய் வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை? 

9.சினத்தை ஏன் காக்க வேண்டும்?

10. வசனம் கவிதை வேறுபாடு தருக.

11. அக்காலத்து கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?

12. எத்திசையிலும் சோறு தட்டாத கிட்டும் யாருக்கு?

புதன், 21 ஆகஸ்ட், 2024

12 ஆம் வகுப்பு பாடக் குறிப்பு

 நாள் : 26.08.24 முதல் 30.08.24 வரை

வகுப்பு :பன்னிரண்டாம் வகுப்பு 

பாடம்: தமிழ் 

தலைப்பு: மதராசபட்டினம்,

                   தெய்வமணிமாலை 

                   தேவாரம் 

கற்றல் நோக்கங்கள்

 ஊர்களின் வரலாறு குறித்த தகவல்களைத் திரட்டி கட்டுரையாக எழுதும் திறன் பெறுதல்.

 இடைக்காலத்தில் கொண்டாடப்பட்ட திருவிழாக்களின் வழி மக்களின் நாகரீக கூறுகளை அறிந்து அவற்றின் இன்றைய தொடர்ச்சியை அறிய முற்படுதல்.

 திருவருட்பா வழியாக நேர்மறை சிந்தனைகளை அறிந்து பின்பற்ற முனைதல்.

கற்றல் விளைவுகள் 

சென்னையின் வரலாறு குறித்து அறிந்து கொள்கின்றனர். 

திருவருட்பா மூலம் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிகளை அறிகின்றனர்

தேவாரப் பாடல் மூலம் பண்டைய நாளில் நடைபெற்ற விழா குறித்து அறிகின்றனர். 

துணைக் கருவிகள் 

மடிக்கணினி, கரும்பலகை 

ஆசிரியர் செயல்பாடு 

பாட அறிமுகம் 

பழமை வாய்ந்த சென்னை மாநகரின் காணொளியைக் காட்டி பாடத்தை தொடங்குதல்.

இராமலிங்கரின் படத்தைக் காட்டி அவர் குறித்த அரிய தகவல்களைக் கூறி பாடத்தைத் தொடங்குதல்.

பங்குனி உத்திர திருவிழா குறித்து வினவுதல் 

பாட வளர்ச்சி 

சென்னை மாநகரின் தொன்மையான வரலாறு குறித்துக் கூறுதல் சென்னை மாநகரில் அயலவர் குடியேற்றம் நிகழ்ந்த பகுதிகளையும் ஆண்டுகளையும் குறிப்பிடல். சென்னையில் உள்ள நீர் நிலைகளைப் பற்றியும் வடிகால்கள் பற்றியும் காணொளிகள் மூலம் காட்டி விளக்குதல். சென்னை நகரம் உருவாவதற்கு ஆங்கிலேய ஆட்சியில் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தனர் என்பதை கூறுதல்‌ அறிவின் நகரமாக மாறிய சென்னையின் கல்வி நிலையங்களை பற்றி கூறுதல். பண்பாட்டு அடையாளமாக சென்னையில் அமைந்திருக்கும் இடங்களை குறித்து விளக்குதல் தொழில் வளர்ச்சி மிகுந்த சென்னை குறித்தும் இன்று சென்னை அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சி குறித்தும் மாணவர்களுடன் கலந்துரையாடல்.

இராமலிங்கர் குறித்த செய்திகளை கூறுதல் இராமலிங்கர் இயற்றிய நூல்கள் குறித்து கூறுதல் திருவருட்பா நூலின் சிறப்பினைக் கூறுதல் 'தெய்வ மணிமாலை' பாடலை இராகத்தோடு பாடுதல் . பாடலில் அமைந்திருக்கும் பொருள் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல்.

தேவாரம் நூற்குறிப்பு கூறுதல். தேவார மூவர் குறித்து கூறுதல் பங்குனி உத்திர திருவிழா நடைபெறும் முறை குறித்து விளக்குதல் திருநாவுக்கரசர் இயற்றிய தேவாரப் பதிகங்கள் குறித்து மாணவர்களுக்குக் கூறுதல்.

மாணவர் செயல்பாடு 

சென்னையின் வளர்ச்சி குறித்து இணையத்தில் தகவல்களை தேடி திரட்டுதல் சென்னை அடைந்த வளர்ச்சியில் பிற நாட்டவரின் பங்கு குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல் சென்னை அடைந்திருக்கும் வளர்ச்சியை காலக் கோடாக பட்டியலிட்டு காட்டுதல். 

இராமலிங்கர் கூறும் அறிவுரைகளை தொகுத்துக் கூறுதல் 

பங்குனி உத்திர திருவிழா நடைபெறும் முறையினை மாணவர்கள் அறிந்து கொண்டு தற்போது இந்த விழாக்கள் நடைபெறும் இடங்கள் குறித்து மாணவருடன் கலந்துரையாடல்.

மதிப்பீடு 

சென்னை நகரின் தொன்மைக்கு சான்றுகள் கூறுக. 

இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் எத்தகையோர் உறவு வேண்டுமென வேண்டுகிறார்?

கலிவிழா ஒலிவிழா விளக்குக

வலுவூட்டல் 

பாடக் கருத்துகளை காணொளிகள் மூலமும் துணைக்கருவிகள் மூலமும் மாணவர்களுக்கு விளங்கும்படியாக மீண்டும் கூறுதல் பாடப் பகுதியில் எளிய வினாக்கள் கேட்டு மாணவர்களின் கற்றலை உறுதி செய்தல் 

குறைதீர்க்கற்றல் 

மெல்ல கறகும் மாணவர்கள் தடுமாறும் பகுதியினை சிறு பகுதிகளாக பிரித்துக் கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு மீண்டும் கற்பித்தல் எளிய வினாக்களின் மூலம் அவர்களின் கற்றலை உறுதி செய்தல். 

 தொடர் பணி 

நீ வசிக்கும் நகரின் வரலாற்றை அறிந்து கொண்டு வந்து வகுப்பறையில் மாணவர்களுக்கு கூறவும். 

உங்கள் ஊரில் கொண்டாடப்படும் பண்பாட்டு விழாக்களைத் தொகுத்து வரவும்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

12 சிறு தேர்வு

1. வசனம், கவிதை வேறுபாடு தருக.

• வசனம் :

• எதுகை, மோனை சேர்க்காமல், அடி என்ற அளவு இல்லாமல் எழுதுகின்ற வடிவம் வசனமாகும்.

• கவிதை :

• எதுகை, மோனை சேர்க்க வேண்டும். அடிக்கென்று எல்லை வைத்து எழுதப்படுவதே கவிதையாகும்

2. எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்’ - யார்க்கு?

• கலைத்தொழில் செய்வோர்க்கு சோறு தட்டாது கிட்டும்.

• கலைத்தொழிலில் இருக்கும் வல்லவர்களுக்கு இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் உணவு தவறாமல் கிடைக்கும்.

3. அக்காலத்துக் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் யாவை?

• தமிழில் : நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள்.

• கணிதத்தில் : கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள்.

• ‘தலைகீழ்ப்பாடம்' என்ற முறையும் உண்டு.

• ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்ற அகராதி வடிவில் அமைந்த நூல்கள் நினைவாற்றலை வளர்க்க உதவின.

4.முறைவைப்பு என்றால் என்ன?

உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை ‘முறைவைப்பு’ என்று கூறுவர்.

5. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.

• முதலில் ஆசிரியர் தரையில் எழுத அதன் மேல் பிள்ளைகள் எழுதினர். மணலில் எழுதிப் பழகுவர்.

• எழுத்துகள் வரிசையாகவும் நன்றாகவும் அமைந்திருந்தன.

• பழங்காலத்தில் கல், களிமண்பலகை, உலோகத்தகடு, துணி, இலை, பனைஓலை, மரப்பட்டை, மரப்பலகை, தோல், போன்றவையும் எழுதுபடுபொருட்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

• கருங்கல்லில் எழுதினால் பிற இடங்களுக்குக் கொண்டு செல்வது கடினமாகும். ஓலைச்சுவடிகளில் எழுத்தாணிகளைக் கொண்டு எழுதினர். கல்வெட்டுகளில் கல்தச்சர்களால் சிற்றுளி கொண்டு எழுத்துகள் பொறிக்கப்பட்டன. களிமண் பலகைக் கணிதம் எழுத்தாணி கொண்டே எழுதினர்.

• எழுத்துகளின் உருவம் பல காலமாக மாறாமல் இருந்தது. காலம் செல்லச் செல்ல எழுதுகோலைப் பயன்படுத்திக் காகிதத்தில் எழுதும் முறையைக் கற்றுக்கொண்டனர்.



திங்கள், 19 ஆகஸ்ட், 2024

11 சிறு தேர்வு

 குறுவினா

1. சங்ககாலத்தில் தமிழ்மொழியின் நிலைபற்றி இராசமாணிக்கனாரின் கூற்று யாது?

விடை :

சங்ககாலத் தமிழகத்தில் தமிழ்மொழியானது

❖ ஆட்சி மொழியாக,

❖ பயிற்று மொழியாக,

❖ இலக்கிய மொழியாக.

❖ கல்வி மொழியாக

❖ சமய மொழியாக,

❖ வணிக மொழியாக

எல்லாத்துறைகளின் பொதுமொழியாகவும் விளங்கி வந்தது.

2. உ.வே.சா. அவர்கள் பயின்ற கல்விமுறை குறித்துக் குறிப்பு வரைக.

விடை

❖ தனிநிலையில் புலவர்களிடத்துக் கற்கும் கல்வி உயர்நிலைக் கல்விமுறை என்ற வகைமை ஆகும்.

❖ திருவாடுதுறை ஆதீன மடத்தின் தலைப்புலவராக விளங்கியவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்.

❖ மீனாட்சி சுந்தரனாரிடம் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதர் உயர்நிலைக்கல்வி முறையில் பாடம் பயின்றார்.

3. உவமை, உருவகம் - வேறுபடுத்துக.

விடை

உவமை ஒன்றை மற்றொன்றோடு ஒப்புமை தோன்றக் கூறுவது உவமையாகும். உவமை முன்னரும் உவமேயம் பின்னரும் வரும். எ.கா: மலர்க்கண்.

உருவகம் :

உவமையினையும், உவமேயத்தையும் வேறுபடுத்தாமல் ஒன்றே எனக் கூறுதல் உருவகமாகும். உவமேயம் முன்னரும் உவமை பின்னரும் வரும். எ.கா: கண்மலர்.

4. சமணப் பள்ளிகளும் பெண்கல்வியும் - குறிப்பு வரைக.

விடை

சமணப் பள்ளிகளின் தலையாய அறங்கள்:

கல்வி உணவு மருந்து அடைக்கலம் என்னும் நான்கும் சமணத்தின் கொடைகள் ஆகும்.

சமணத் துறவிகளின் தொண்டு:

❖ சமணம் சார்ந்த திகம்பரத் துறவிகள் மலைக் குகையில் தங்கினர்.

❖ தங்குமிடங்களிலேயே கல்வியையும், சமணக் கருத்துகளையும் மாணவர்க்குக் கற்பித்தனர்.

❖ பள்ளி எனப்படும் படுக்கைகளின் மீது மாணவர்கள் அமர்ந்து கற்றதனால் கல்விக்கூடம் பள்ளிக்கூடம் என்றாயிற்று.

❖ பள்ளி என்னும் சொல் சமணப் பௌத்த சமயங்களின் கொடையாகும்.

பெண்கல்வி:

❖ வந்தவாசி - வேடல் என்னும் ஊரில் இருந்த சமணப் பள்ளியில் பெண் சமண ஆசிரியர் ஒருவர் 500 மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தார்.

❖ பட்டினிக்குரத்தி என்னும் சமணப்பெண் ஆசிரியர் விளாப்பாக்கத்தில் சமணப்பள்ளி ஒன்றை நிறுவினார்.

❖ பெண்களுக்கெனத் தனியாகக் கல்வி கற்பிக்கும் சமணப்பள்ளிகள், பெண்பள்ளிகள் என்றழைக்கப்பட்டன.



ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

பதினோராம் வகுப்பு பாடக்குறிப்பு 19.08.24 முதல் 23.08.24 வரை

 நாள்: 19/8/24 முதல் 23/ 8/24 

வகுப்பு: பதினோராம் வகுப்பு 

பாடம்: தமிழ் 

தலைப்பு:இயல்4

படைப்பாக்க உத்திகள்

கற்றல் நோக்கங்கள் 

படைப்பாக்க உத்திகளைப் புரிந்து கொண்டு கவிதைகளைச் சுவைத்தல், படித்தல், படைத்தல் 

கற்றல் விளைவுகள் 

உவமை, உருவகம் ,உள்ளுறை உவமம் இறைச்சி போன்ற நுட்பங்களை அறிகின்றனர் .

துணைக் கருவிகள்

 மடிக்கணினி , கரும்பலகை 

ஆசிரியர் செயல்பாடு

 பாட அறிமுகம் 

உரைநடைக்கும் கவிதைக்குமான வேறுபாடு யாது? என வினவி பாடத்தை அறிமுகம் செய்தல் 

பாட வளர்ச்சி

ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிட்டுக் கூறுவது உவமையாகும் வினை பயன் மெய் உரு ஆகிய நான்கன் அடிப்படையில் அமையும் . இவற்றைச் சான்றுடன் விளக்குதல் 

உருவகம் 

ஒப்பிட்டுச்செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும் பொழுது அதனை உருவகம் என்கிறோம். சான்றுகள் காட்டி விளக்குதல்

 உள்ளுறை உவமம் 

கவிஞர் தான் கூறக் கருதிய பொருளை வெளிப்படையாக கூறாமல் கருப்பொருள்கள் மூலம் உவமைப்படுத்துவதை உள்ளுறை உவமும் என்கிறோம் .இதனை சான்றுகள் காட்டி விளக்குதல் 

இறைச்சி 

இது அகப்பாடலில் வரும் மற்றொரு உத்தி இது குறிப்புப் பொருளில் அமையும்.

 மாணவர் செயல்பாடு

 உவமை நயம் அமைந்த புதுக்கவிதைகளை கூறுதல்

 அகப்படலில் அமைந்துள்ள பாடலின் நுட்பங்களைக் கண்டறிந்து கூறுதல்.

 கவிதையைச் செழுமைப்படுத்த படைப்பாக்க உத்திகள் எவ்வாறு பயன்படுகின்றன என்பது குறித்து கலந்துரையாடல்

 மதிப்பீடு

 உவமை எவ்வற்றின் அடிப்படையில் அமையும்?

 உள்ளுறைக்கும் இறைச்சிக்கும் உள்ள வேறுபாட்டினை சான்றுகளுடன் விளக்குக.

 வலுவூட்டல் 

பாடக் கருத்துக்களை பல்வேறு பாடல்கள் கூறி வலுப்படுத்துதல் எளிய வினாக்கள் கேட்டு கற்றலை உறுதி செய்தல்

 தொடர் பணி

 உவமை நயம் அமைந்துள்ள பாடல்களை தொகுத்து வகுப்பறையில் கலந்துரையாடுக.

இரா.முருகன்

தமிழாசிரியர் 

அரசுமேனிலைப்பள்ளி ஆனையூர் 

சனி, 17 ஆகஸ்ட், 2024

பன்னிரண்டாம் வகுப்பு பாடக்குறிப்பு 19.08.24 - 23.08.24

 நாள் :19.08.24. - 23.08.24

வகுப்பு : பன்னிரண்டாம் வகுப்பு 

பாடம் : தமிழ் 

தலைப்பு : 

                     புறநானூறு,                                                     பாதுகாப்பாய் ஒரு பயணம்,                       பா இயற்றப் பழகலாம்

கற்றல் நோக்கங்கள் 

1) கல்வியின் மேன்மை அறிந்து தன்னம்பிக்கை பெறுதல் 

2) சாலை போக்குவரத்து விதிகளை கற்று பின்பற்றுதல் 

3) செய்யுள் இலக்கணம் பயின்று மரபுக் கவிதைகள் எழுதும் படைப்பாற்றல் பெறுதல் 

கற்றல் விளைவுகள் 

ஔவையாரின் சங்கப்பாடல் வழி கற்றோருக்கு ஏற்படும் தன்னம்பிக்கையை உணர்கின்றனர்.

போக்குவரத்து விதிகளைப் பின்பற்ற தொடங்குகின்றனர் 

மரபுக்கவிதை எழுத முயற்சி செய்கின்றனர் .

துணைக் கருவிகள் 

மடிக்கணினி, கரும்பலகை 

ஆசிரியர் செயல்பாடு 

பாட அறிமுகம் 

எட்டுத்தொகை நூல்கள் யாவை? என வினவி புறநானூற்று நூலை அறிமுகம் செய்தல் 

உனக்குத் தெரிந்த சாலை விதிகளைக் கூறு.

 அலகிட்டு வாய்ப்பாட்டின் அடிப்படைச் செய்திகளை நினைவூட்டி பாடத்தைத் தொடங்குதல் 

பாட வளர்ச்சி .

நெடுமானஞ்சியின் காவலர்களிடம் ஔவையார் கூறிய கருத்துக்களை பாடல் வழியாக விளக்குதல்.

 அருஞ்சொற்களுக்குப் பொருள்கூறுதல்

 திணை, துறை விளக்கம் தருதல் 

சாலை விதிகளையும் அதனை கடைப்பிடிக்காவிட்டால் கிடைக்கும் தண்டனைகளையும் விளக்குதல்

 சாலை விதிகளின் இன்றியமையாமை பற்றி எடுத்துரைத்தல் 

அலகிடுதல் மூலம் தளையமைப்பை விளக்கி பா இயற்றக் கற்றுத்தருதல்.

 மாணவர் செயல்பாடு 

ஔவையார் பற்றிய செய்திகளைக் கூறுதல் 

கல்வியின் சிறப்புப் பற்றிக் கலந்துரையாடல்

 சாலை விதிகளைக் கடைபிடிக்காவிட்டால் நேரும் இன்னல்களைப் பட்டியலிடல்.

 திருக்குறளை சீர் பிரித்து அலகிடல்.

 மதிப்பீடு 

பாடாண் திணை விளக்குக

 பரிசில் துறை விளக்குக 

இருசக்கர வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டிய சாலை விதிகளை கூறுக

 வலுவூட்டல் 

பாடக்கருத்துகளை துணைக் கருவிகள் துணை கொண்டு விளக்குதல் .எளிய வினாக்கள் கேட்டு கற்றலை உறுதி செய்தல்

 திணை துறை என்றால் என்ன?

 குறைதீர்க்கற்பித்தல் 

மெல்லகற்க்கும் மாணவர்கள் தடுமாறும் பகுதியினை சிறு பகுதிகளாக பிரித்து மீண்டும் கற்பித்தல் எளிய வினாக்கள் கேட்டல் 

தொடர்பணி

கல்வியின் சிறப்பை உணர்த்தும் திருக்குறள், நாலடியார் பாடல்களைக் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.


இரா.முருகன்

தமிழாசிரியர் 

அரசுமேனிலைப்பள்ளி, ஆனையூர் 

சனி, 10 ஆகஸ்ட், 2024

விடுதலைநாள்விழா-உரை

 அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.


இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் கடந்து ஓடிவிட்டது. இத்தனை ஆண்டு காலங்களில் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின விழா என்பது நாடு முழுவதும் இருக்கின்ற அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகளில் கொண்டாடப்பட்டாலும் இன்றைய தலைமுறை பிள்ளைகளை பொறுத்தவரை அது ஒரு தேசியக்கொடியேற்றுகின்ற சம்பிரதாய விழாவாக மாறிக்கொண்டு வருகிறது. இந்த சுதந்திரம் சுலபத்தில் கிடைத்துவிட்டதாக கருதுகின்ற மனோநிலை நம் நாட்டின் தற்போதைய தலைமுறையினர் பலரிடமும் உள்ளது.


இந்த சுதந்திரம் என்பது உண்மையில் நமக்கு எளிதாக கிடைத்துவிட்டதா என்றால் நிச்சயம் கிடையாது. இன்றைய தலைமுறையினர் நன்றாக வாழ வேண்டும் என கருதி, நமக்கு பல தலைமுறைகளுக்கு முன்பாக இருந்த நம் முன்னோர்கள் சிந்தித்து, இந்த நாடு அந்நியர்கள் ஆதிக்கத்திலிருந்தும், அவர்களின் சுரண்டலிலிருந்தும் விடுதலை பெற வேண்டும் எனும் உயரிய லட்சியத்தை கொண்டு, தங்கள் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இந்த நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்து, நமக்கு பெற்று கொடுத்தது தான் இப்போது நமது நாட்டு மக்கள் அனுபவிக்கின்ற சுதந்திரம் ஆகும்.


பழங்காலம் முதலே நம் இந்திய நாடு செல்வவளம் மிகுந்த ஒரு நாடாக உலகெங்கிலும் அறியப்பட்டிருந்தது. 


 ஐரோப்பிய கண்டத்தின் பல நாட்டின் வியாபாரிகள் இந்திய நாட்டுடன் வணிகம் செய்வதற்கு கப்பல்களில் வரத்தொடங்கினர். முதலில் நம் நாட்டுடன் வாணிபம் மட்டுமே செய்த அந்த அந்நியர்கள், நம் நாட்டில் இருக்கின்ற இன, மத, குல, மொழி அடிப்படைகளில் இருக்கின்ற பிரிவினைகளையும், அதனால் இந்த நாட்டில் ஒற்றுமை  இல்லை என்பதையும் தெளிவாக உணர்ந்த அந்த அந்நியர்கள், நம் நாட்டை தங்களின் தந்திரமிக்க சதிச்செயல்களின் மூலம் சிறிது சிறிதாக பிடித்து, பிறகு ஒட்டுமொத்த பாரத நாட்டையும் தங்களின் காலனியாதிக்க அடிமை நாடாக மாற்றினர்.


தங்களின் அடிமை நாடாக இந்தியாவை மாற்றிய பிறகு, அந்த அன்னியர்கள் சிறிது சிறிதாக தங்களின் சட்டங்கள், கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்களை இந்த நாட்டு மக்களின் மீது வலுக்கட்டாயமாக திணித்தனர். அத்தோடு இந்த நாட்டின் இயற்கை வளங்களை சுரண்டி தங்களது சொந்த நாடுகளை வளம் கொழித்த நாடாக மாற்றினர். இதன் காரணமாக ஒரு காலத்தில் செல்வந்த நாடாக இருந்த இந்தியா ஒரு நூற்றாண்டு காலத்திற்குள்ளாகவே வறுமை, பஞ்சம், பசி, நோய்கள் நிறைந்த ஒரு ஏழை நாடாக மாறியது.



நமது நாட்டின் மீதும், நாட்டு மக்களின் மீதும் தீராத பற்றும் அன்பும் கொண்ட தேசப்பற்றாளர்கள் பலர் இந்த கொடுமைகளை கண்டு மனம் நொந்தனர்.  இத்தகைய அவல நிலையைப் போக்க அன்னியர்களை விரட்டி, அவர்களிடமிருந்து நம் நாடு சுதந்திரம் பெறுவது தான் ஒரே தீர்வு என்கிற முடிவிற்கு வந்தனர். அந்த வகையில் நமது தமிழ்நாட்டில் நெற்கட்டுஞ்செவல் பகுதியை ஆண்ட பூலித்தேவர் தொடங்கி, கட்டபொம்மன், பகத்சிங், ராஜகுரு , சுகதேவ் சுபாஷ் சந்திரபோஸ் வரை  எண்ணற்ற விடுதலைப் போராளிகள் ஆயுதப்போராட்டம் மூலம் அன்னியர்களை இந்த நாட்டை விட்டு வெளியேற்ற அரும்பாடு பட்டனர்.


ஆயுதங்கள் இல்லாமல் அகிம்சையால் மட்டுமே அனைத்தையும் வெல்ல முடியும் என்கிற கொள்கையுடன் மகாத்மா காந்தி, திருப்பூர் குமரன், லாலா லஜபதி ராய், பெருந்தலைவர் காமராஜர் போன்ற தலைவர்கள் இந்திய நாடு சுதந்திரம் பெற பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினர். ஆயுதப் போராட்டம் நடத்தியவர்கள், அகிம்சை போராட்டம் நடத்துபவர்கள் என்கிற பேதங்களின்றி அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களையும் அப்போதைய அந்நிய நாட்டு அரசாங்கம் சிறையில் அடைத்து பல துன்புறுத்தல்களை செய்தது. ஒரு சிலரை பல சதிச்செயல்கள் செய்ததாக ஆதாரங்களின்றி குற்றஞ்சாட்டி தூக்கிலிட்டு கொன்றது.


இப்படி பல்லாண்டுக்காலம் அந்நியர்களின் கொடுங்கோல் ஆட்சியால் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்த அக்காலத்திய இந்திய நாட்டு மக்கள் இன, மொழி, நிற, பேதங்களின்றி, ஒன்று சேர்ந்து அந்நிய நாட்டு ஆதிக்கத்தை நம் நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்கிற ஒரே உயரிய லட்சியத்துடன் செயல்பட்டனர். அவர்களின் கடும் போராட்டங்களுக்கும், விடாத முயற்சிகளுக்கும் அடிபணிந்த ஆங்கிலேய அரசு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இந்திய நாடு தங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதாக அறிவித்து, இந்த நாட்டை விட்டு வெளியேறியது.


தங்களின் சொந்த சுகங்கள், செல்வங்கள் மட்டுமின்றி தங்கள் இன்னுயிரையே இந்த நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான விடுதலைப் போராளிகளின் ரத்தத்தில் கிடைத்த நம் நாட்டின் சுதந்திரத்தை பேணிக்காப்போம் என வலியுறுத்தி , இந்த சுதந்திர தின உரையை நிறைவு செய்து கொள்கிறேன். நன்றி.

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

பன்னிரண்டாம் வகுப்பு பாடக்குறிப்பு 12.8.24 முதல் 16/ 8/ 24

 நாள்: 12/8/24 முதல் 16/ 8/24 

பாடம்: தமிழ் 

வகுப்பு: பன்னிரண்டாம் வகுப்பு 

தலைப்பு

 பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள், இதில் வெற்றி பெற, இடையீடு 

கற்றல் நோக்கங்கள் 

கற்றல் கற்பித்தலின் தொடர்ச்சியினை உணர்வதன் மூலம் கல்வியின் போக்குகளை அறிதல் 

கவித்துவக் கூறுகளை அறிந்து கவிதை எழுதும் ஆர்வம் கொள்ளுதல்.

 எண்ணங்களை எழுத்தில் வெளிப்படுத்தும் நுட்பத்தை உணர்ந்து எழுதுதல் 

கற்றல் விளைவுகள்

 காலந்தோறும் மாறிக்கொண்டிருக்கும் கற்றல் கற்பித்தல் முறைகளை அறிகிறான் 

கவிதையின் கூறுகளை அறிந்து கவிதை எழுதுவதற்கு ஆர்வம் கொள்கிறான்

 கற்றல் கற்பித்தல் இரண்டுக்கும் இடையே நேரும் இடையீடு மற்றும் எதிர்பாராத நல்ல விளைவுகள் பற்றி அறிகின்றனர் 

துணைக் கருவிகள் 

மடிக்கணினி, கரும்பலகை 

ஆர்வமூட்டல்

 பண்டைய காலத்து பள்ளிக்கூடங்கள் மற்றும் கற்பித்தல் முறைகள் குறித்த படங்களை மடிக்கணினியில் காட்டுதல்.

 சுரதா பற்றிய செய்திகளை இணையத்தில் காட்டுதல் 

ஆசிரியர் செயல்பாடு 

பாட அறிமுகம் 

பண்டைய காலத்து திண்ணை பள்ளிக்கூடங்கள் பற்றிய சுவையான செய்திகளைக் கூறுதல் 

மாணவர் மனம் கவரும் மரபுக் கவிதையினை வாசித்துக் காட்டுதல் 

பாட வளர்ச்சி 

திண்ணைப் பள்ளிக்கூடங்கள்,  வித்தியாரம்பம், மையாடல் விழா, கையெழுத்து, எழுத்தின் வடிவம், மனனப் பயிற்சி, சுவடிகள், எழுத்தாணிகள், ஏடு எழுதும் வழக்கம், வாதம் புரிதல் போன்றவற்றை ஒவ்வொரு படிநிலைகளாக விளக்குதல்.

 உவேசா பற்றியும் அவர் பயின்ற கல்வி முறை பற்றியும் விளக்கமாக கூறுதல்.

 எதுகை, மோனை, இயைபு, முரண் பற்றி விளக்குதல்.

 யாப்பிலக்கணம் பற்றி விளக்குதல்.

 உவமைக் கவிஞர் சுரதா பற்றி விளக்கமாக கூறுதல் 

புதுக்கவிதை அமைப்பை மாணவர்களுக்கு புரியும் படி விளக்குதல்.

கவிஞர் சி. மணி இயற்றிய இடையீடு கவிதையின் பொருளை வகுப்பறையில் கலந்துரையாடல் 

மாணவர் செயல்பாடு 

மாறிவரும் கல்வி நிலைகளை பட்டியலிடல்

 அக்கால கல்வி முறைக்கும் இக்கால கல்வி முறைக்கும் இடையேயான வேறுபாடுகளை பட்டியலிடல் .

சுவைத்துப் படித்த மரபுக்கவிதையினை வகுப்பறையில் வாசித்தல் .

கல்வி பற்றிய புதுக்கவிதையை எழுதுதல்

 கற்றல் கற்பித்தலில் நேரும் இடையூறுகளை பட்டியலிடுதல் 

வலுவூட்டல் 

பாடக்கருத்துகளை மீண்டும் கூறுதல். துணைக்கருவிகள் கொண்டு கடினப் பகுதியை விளக்குதல். எளிய வினாக்கள் கேட்டு கற்றலை உறுதி செய்தல். 

குறைதீர்க்கற்றல் 

மெல்ல கற்போர் தடுமாறும் பகுதியினை சிறு பகுதிகளாக பிரித்துக் கொண்டு எளிமையாக துணைக்கருவிகள் மூலம் அவர்களுக்கு விளங்க வைத்தல் .

அந்த குறிப்பிட்ட பகுதியில் வினாக்கள் கேட்டு கற்றலை உறுதி செய்தல் 

மதிப்பீடு 

அக்கால கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் யாவை?

 மையாடல் விழா விளக்குக .

தொடைகள் நான்காகும் எவை?

 தொடர்பணி

 அக்கால கல்வி முறை , இக்கால கல்வி முறை ஒப்பிடுக.

புதன், 7 ஆகஸ்ட், 2024

பதினோராம் வகுப்பு பாடக்குறிப்பு - 12/08/24 முதல் 16/08/24

 நாள்:  12/8/24 முதல் 16/ 8/24 

வகுப்பு: பதினோராம் வகுப்பு 

பாடம்: தமிழ் 

தலைப்பு:இயல்4

 பிள்ளைக்கூடம், நற்றிணை, தொல்காப்பியம் 

கற்றல் நோக்கங்கள் 

மாணவர்கள் எவ்வாறு கல்வி கற்க வேண்டும் என்பதை இலக்கண நூல் வழி அறிந்து பின்பற்றுதல் 

வளமையும் வறுமையும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை நற்றிணை வழி அறிதல் 

கற்றல் விளைவுகள் 

கல்வி கற்றல் காலம் தோறும் அடைந்துள்ள மாற்றங்களை அறிகின்றனர் 

 சங்ககால வாழ்வியலை நற்றிணை வாயிலாக அறிகின்றனர்

துணைக் கருவிகள் விளக்கப்படம் மடிக்கணினி கரும்பலகை 

ஆர்வமூட்டல்

நீ விரும்பும் வகையில் பள்ளிக்கூடம் அமைய வேண்டுமானால் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என வினவுதல் 

வறுமை வளமான வாழ்வுக்கு தடையாகுமா? மாணவர்களுடன் கலந்துரையாடல்

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் 

ஆசிரியர் செயல்பாடு 

பாட அறிமுகம் 

மாணவர்கள் பள்ளியில் இன்பமாக கல்வி கற்க ஏதுவான வகையில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டுமென்று மாணவர்களுடன் கலந்துரையாடல் 

பாட வளர்ச்சி 

பிள்ளைகளுக்குப் பிடித்த பள்ளிக்கூடம் பற்றியும் தாய்மொழி கல்வி பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் எடுத்துரைத்தல்

கவிதையை வாசித்துக் காட்டுதல் கவிதையில் ஏற்புடைய நயங்களை சுட்டிக்காட்டுதல் 

கவிஞர்.இரா மீனாட்சி குறித்த குறிப்புகளை அவர் படைத்த நூல்களை கூறுதல்.

திணை துறை விளக்குதல் 

பாடலைப் பதம் பிரித்துப் படித்தல் அருஞ்சொற்களுக்குப் பொருள் கூறல் எட்டுத்தொகை நூல்களை பட்டியலிடல்

 நற்றிணை நூல் அமைப்பு பற்றி விளக்குதல்

 தொல்காப்பியம் பற்றி விளக்குதல். கல்வி கற்கும் முறையை விளக்குதல்.

மாணவர் செயல்பாடு 

தனக்குப் பிடித்த பள்ளிக்கூடம் எவ்வாறு இருக்க வேண்டும் என பட்டியலிடல் 

 தாய்மொழி கல்வியின் சிறப்பு குறித்துக் கலந்துரையாடல் 

எட்டுத்தொகை நூல்களைப் பட்டியலிடல்

 நற்றிணையின் நூலமைப்பை அறிந்து வகுப்பறையில் கூறுதல்

 தொல்காப்பியம் பற்றி அறிந்த செய்திகளை வகுப்பில் பகிர்தல்

 பதம்பிரித்து பொருளோடு பாடலைப் படித்தல்

வலுவூட்டுதல் 

பாடக் கருத்துக்களை மீண்டும் கூறுதல் எளிய வினாக்கள் கேட்டல் 

கடினப்பகுதியை மீண்டும் கற்பித்தல்

 துணைக்கருவி பயன்பாடு

 பிள்ளைகள் கற்க விரும்பும் பள்ளிகளின் மாதிரிக் காணொளிகளை காட்டுதல். நற்றிணைப் பாடலின் பொருள் விளங்கும் விளக்கப்படம் காட்டுதல்

 தொல்காப்பியம், தொல்காப்பியர் பற்றிய செய்திகளை இணையத்தில் காட்டுதல்

 குறைதீர்க்கற்பித்தல் 

கடினப் பகுதிகளை கண்டறிந்து எளிய சான்றுகள் மூலம் விளக்குகள் 

துணைக் கருவி கொண்டு பாடப் பகுதிகளை சிறு பகுதிகளாக பிரித்து கற்பித்தல் 

மதிப்பீடு

 1)மகள் நிலை உரைத்தல் துறையை விளக்குக

 2)பிரசம் பொருள் கூறுக

3) நற்றிணை நூற்குறிப்பு தருக

 4)தொல்காப்பியத்தின் உரையாசிரியர்கள் யாவர்?

 தொடர்பணி 

தாய்மொழி கல்வி பற்றிய உங்கள் எண்ணங்களை கவிதை ஆககுக.

சூழலோடு பொருந்தி கல்வியை வளர்த்துக் கொள்பவர் ஆணே! பெண்ணே! விவாதிக்க.

நன்றி 🙏 

இரா.முருகன்

முதுகலைத்தமிழாசிரியர் , 

அரசுமேனிலைப்பள்ளி, ஆனையூர் 

கோவை மாவட்டம் 

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

பதினோராம் வகுப்பு இயல் 2

 குறுவினா

1. தமிழ்நாட்டின் மாநிலமரம் - சிறுகுறிப்பு வரைக.

விடை

❖ தமிழ்நாட்டின் மாநிலமரம் பனைமரம்.

❖ ஏழைகளின் கற்பக விருட்சம் பனைமரம்.

❖ சிறந்த காற்றுத்தடுப்பான்,

❖ நிலத்தின் ஆழத்தில் நீர்மட்டம் குறையாமல் நீரைச் சேமித்து வைக்கின்ற தன்மையுடையது.

❖ பனை வளர பெரிய அளவத் தண்ணீர் தேவையில்லை.

❖ ஏழே ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கி விடும்.

❖ பனையிலிருந்து நுங்கு, பதநீர், கருப்பட்டி, பனங்கற்கண்டு முதலியவை கிடைக்கின்றன.

2. மதிப்புக்கூட்டு பொருள் விளக்குக

ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருளாக மாற்றுவதை மதிப்புக்கூட்டுப்பொருள் என்கிறோம் சான்றாகப் பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரில் இருந்து பனங்கற்கண்டு கருப்பட்டி போன்றவை மதிப்பு கூட்டுப் பொருள்களாகத் தயாரிக்கப்படுகின்றன.

3. ஐந்து வேளாண் மந்திரங்கள் யாவை?

• உழப்படாத நிலம்

• ரசாயன உரம் இல்லாத உற்பத்தி

• பூச்சிக்கொல்லி தெளிக்காத பயிர்ப் பாதுகாப்பு

• தண்ணீர் நிறுத்தாத நெல் சாகுபடி

• ஒட்டு விதை இல்லாமல் உயர் விளைச்சல்

4. தொழுஉரம் விளக்குக.

• மாட்டுச் சாணம் கோமியம் ஆகியவற்றை கலந்து வைகோலை மக்கச் செய்து உருவாக்கப்படுவது தொழு உரம் ஆகும்.

2. ஏதிலியாய்க் குருவிகள் எங்கோ போயின - தொடரின் பொருள் யாது?

விடை

❖ மரங்கள் வெட்டப்பட்டன.

❖ வான்மழை பொய்த்தது.

❖ மண்வளம் குன்றியது.

❖ குருவிகள் கூடுகட்டி வாழ மரங்கள் இல்லை.

❖ வாழ ஏதுமின்மையால் ஏதிலியாய்க் குருவிகள் எங்கேயோ பறந்து சென்றுவிட்டன.

3. வளருங் காவில் முகில்தொகை ஏறும் – பொன் மாடம் எங்கும் அகிற்புகை நாறும் - அடிக்கோடிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன?

விடை

❖ நூல் - திருமலை முருகள் பள்ளு. தென்கரை நாடு.

❖ ஆசிரியர் -பெரியவன் கவிராயர்.

❖ தென்கரை நாட்டின் நீர்டு வளர்ந்த சோலையில் மேகக்கூட்டங்கள் தங்கிச் செல்லும். (கா- சோலை)

3. அலர்ந்து - பகுபத உறுப்பிலக்கணம் தருக,

விடை

அலர்ந்து – அலர் + த் (ந்) + த் + உ

அலர் - பகுதி, த் - சந்தி, த் - ந் ஆனது விகாரம், த் - இறந்தகால இடைநிலை, உ வினையெச்ச விகுதி.

5. ய், வ், ஞ், ட், ற், ந் - மெய்களுக்கான வேற்றுநிலை, உடனிலை மெய்ம்மயக்கங்களுக்கு எடுத்துக்காட்டுகள் தருக,

விடை

வேற்றுநிலை மெய்ம்மயக்கம்

ய் வாய்மை (ய்)

வ் தெவ்யாது (வ்)

ஞ் மஞ்சள் (ஞ)

ட் காட்சி (ட்)

ற் பயிற்சி (ற்)

ந் மந்தை (ந்)

உடனிலை மெய்ம்மயக்கம்

செய்யாமை (ய்)

இவ்விதம் (வ்)

விஞ்ஞானம் (ஞ)

பட்டம் (ட்)

வெற்றி (ற்)

செந்நாய் (ந்)

6. காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் சென்றது?

விடை

• ஒரு பறவையின் சிறகிலிருந்து பிரிந்து விழுந்த இறகு ஓன்று காற்றின் தீராத பக்கங்களில் அப்பறவையின். வாழ்வை எழுதிச் செல்கிறது.

சிறுவினா

1. வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா? - நும் கருத்தை எழுதுக.

விடை

❖ வேதிக் கலப்பில்லாத பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவது நடைமுறைக்குச் சாத்தியம்.

❖ முன்னோர்கள் எந்தவிதமான இரசாயனப் பூச்சிக் கொல்லியையும் பயன்படுத்தவில்லை.

❖ வேப்பங்கொட்டை, நொச்சி இலை, புங்கன், பிரண்டை, கற்றாழை எல்லாவற்றையும் இடித்து, கோமியத்தில்ஊறவைத்துப் பயிரில் தெளித்தார்கள்.

❖ பூச்சியும் படிப்படியாகக் குறைந்தது.

❖ இவ்வேதிக்கலப்பில்லாத பூச்சிக் கொல்லியால் நுண்ணுயிர்ப் பெருக்கமும், மண்வளமும் ஏற்பட்டன.

❖ இரசாயனப் பூச்சிக்கொல்லி பயிர்களுக்குள் ஊடுருவி, சாப்பிடுகிற மக்களுக்கும் நிறைய நோய் உண்டாக்கும்.

2. காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு யாது? ஏன்?

விடை

❖ குருவிகளையும் கூடுகளையும் காணமுடியவில்லை.

❖ முன்பெல்லாம் அடைமழைக்காலம் ஆற்றில் வெள்ளம் கரைபுரணர்டு ஓடும்.

❖ கரைகளில் நெடிய மரங்கள்.

❖ மரங்களில் பறவைகளின் ஒலிகள்.

❖ வழிநெடுகளிலும் தூக்கணாங்குருவி கூடுகள், முள்ளால் கட்டப்பட்ட இக்குருவி கூடுகளில் குருவிகள் இல்லாத காரணத்தால் ஏக்கத்தின் காரணமாக காற்றில் அசையும் வீடுகளென வருணிக்கிறார்.

3."சலச வாவியில் செங்கயல் பாயும்” - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

விடை

நூல் : திருமலை முருகன் பள்ளு - வடகரை நாடு பாடல் . அடிகள்.

ஆசிரியர் : பெரியவன் கவிராயர்.

இடம் : வடகரைநாட்டின் வளத்தைக் கூறும் பாடலில் இவ்வரி இடம்பெற்றுள்ளது.

பொருள் : வடகரை நாட்டின் தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து. விளையாடும்.

விளக்கம் : வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகள் இந்தளம் என்ற பண்ணினை இசைப்பதால் உள்ளான் பறவை வாலை ஆட்டிக்கொண்டு, மதகுகளின் சங்கிலியில் மீனைப் பிடித்து உண்பதற்காக அமர்ந்திருக்கும். அப்போது தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும்.

4. ஐங்குறுநூற்றுப் பாடல் சுட்டும் திணை, முதற்பொருள், கருப்பொருள்களை அட்டவணைப்படுத்துக.

விடை

தினை : முல்லைத் திணை

முதற்பொருள் : நிலமும் பொழுதும்

❖ நிலம் – காடும் காடு சார்ந்த இடமும்

❖ பெரும்பொழுது - கார்காலம்

❖ சிறுபொழுது - மாலை

கருப்பொருள்:

தெய்வம் - திருமால் (மாயோன்)

மக்கள - ஆயர் - ஆய்ச்சியர், இடையர் - இடைச்சியர்

தொழில் - வரகு, சாமை விதைத்தல், ஆநிரை மேய்த்தல், ஏறுதழுவல், களை பறிப்பு.

உணவு - வரகு, சாமை, முதிரை.

விலங்கு - மான், முயல்

பூ - முல்லை, தோன்றி

ஊர் - பாடி, சேரி

பறை - ஏறுகோட் பறை

யாழ் - முல்லை யாழ்

சான்று : 'காயா கொன்றை நெய்தல் முல்லை....' பேயனார் பாடிய பாடல்.

நெடுவினா 

2. திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை, தென்கரை நாட்டுப் பாடல்கள் வழி இயற்கை வளங்களை விவரிக்க.

விடை

வடகரை நாடு:

❖ வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகள் இந்தளம் என்னும் பண்ணை ரீங்காரமிட்டுப் பாடும்.

❖ இவ்விசையைக் கேட்டு மெய்மறந்து வாய்க்காலின் மதகுகளிடையே கட்டப்பட்ட சங்கிலியின் மீது அமர்ந்தஉள்ளான் பறவை, மீனைப் பிடித்து உண்ணாமல் வாலை ஆட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும்.

❖ தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும்.

❖ முத்துக்களை ஈன்ற வெண்சங்குகள் பரவிக் காணப்படும்.

❖ மின்னலையொத்த பெண்கள் பெய் என்றால் மழை பெய்யும்.

❖ உள்ளங்கை ஏந்தி இரந்துண்ணும் இயல்புடைய முனிவர்கள் கூறுவது மெய்யாகும்.

❖ இத்திருமலையில் புலவர்கள் போற்றும் திருமலைச் சேவகன் வீற்றிருக்கிறார்.

தென்கரை நாடு:

❖ தென்கரை நாட்டின் நீண்டு வளர்ந்த சோலையில் மேகக்கூட்டங்கள் தங்கிச் செல்லும்.

❖ தென்கரை நாட்டில் உள்ள பொன்னாலான மாடமாளிகையில் அகிற்புகையின் நறுமணம் பரவிக் கொண்டே இருக்கும்.

❖ மாட மாளிகைகளை மயில்களும் கார்கால மேகங்களும் சூழ்ந்து காக்கும்.

❖ செங்கோலைக் கொண்ட மன்னர் தென்கரை நாட்டை நீதி தவறாது காவல் காப்பார்.

❖ இளம்பெண்கள் பொன்னாலான அரங்கில் நடித்து விளையாடி மகிழ்வர்.

❖ குளங்களில் அலைகள் முத்துக்களை ஏந்தி வரும்.

❖ அலைகள் கரையில் மோதும்போது முத்துக்கள் சிதறி வெடிக்கும்.

❖ இந்தகைய குற்றாலத்தில் வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர்ச்சூடி . தென்னாடுடைய சிவன் குற்றாலநாதராக வீற்றிருக்கிறார்.

3. யானை டாக்டர் கதை வாயிலாக இயற்கை, உயிரினப் பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவிர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக,

விடை

முன்னுரை:

ஜெயமோகன் நாகர்கோவிலைச் சேர்ந்தவர். இவர் இயற்கை ஆர்வலர், யானையைப் பாத்திரமாகப் படைத்து ஊமைச் செந்நாய், மத்தகம் போன்ற கதைகளை எழுதியுள்ளார். இதில் சுதாபாத்திரமாக வந்துள்ள டாக்டர், வி. கிருஷ்ணமூர்த்தி ஒரு காட்டு விலங்கியல் வல்லுநர், கதையின் நோக்கம்:

யானை வாழும் காடுகளில் மனிதர்களால் கொடுக்கப்படும் உயிர்ப் பாதுகாப்பும், மனிதர்களால் ஒருபோதும் இழைக்கப்படக் கூடாத செயல்பாடுகளும் இக்கட்டுரையில் பகிரப்பட்டுள்ளன.

முதுமலையில் யானைக்குக் கால் வீக்கம்:

கதையைக் கூறும் கதாபாத்திரமாக வனத்துறை அதிகாரி டாக்டர். வி.கிருஷ்ணமூர்த்தியுடன் புண்பட்ட யானை இருக்கும் முதுமலைக் காட்டிற்குச் செல்கின்றனர். வழிகாட்ட மலைவாழ் குறும்பர்களுடன் இருவரும் காட்டினுள் சென்றனர். கொஞ்ச நேரத்தில் யானைகளின் நெடி (நாற்றம்) வந்தது. புல்வெளியில் பன்னிரெண்டும், மூங்கில் புதரில் ஆறும், குட்டிகள் நான்கும் என யானைக் கூட்டமே கண்ணில் பட்டது.

டாக்டர் கேயும் புண்பட்ட யானையும்:

தன்னுடன் வந்தவர்களை நிற்க வைத்துவிட்டு டாக்டர் யானைக் கூட்டத்தை நெருங்கினார். புண்பட்டயானை மரத்தடியில் நின்றது. டாக்டர் யானைக் கூட்டத்தை நெருங்கியதும் பிடியானை ஒன்று எதிர்த்தது. சில மணிகளுக்குப் பிறகு பின் வாங்கியது. டாக்டர் தன் வேலையை ஆரம்பித்தார். மயக்க மருந்து கலந்த ஊசியைத் துப்பாக்கியில் வைத்து சுட்டார். யானை சற்றே சாய்ந்தது.

யானைக்குச் சிகிச்சை:

யானையின் காலில் மனித மிருகங்கள் குடித்துவிட்டு தூக்கி எறிந்த கண்ணாடிக் குப்பி நன்றாகப் பதிந்திருந்தது. சீழ்க்கட்டிப் பெரிதாக இருந்தது. சீழ்கட்டி வெட்டியெடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்னும் பத்துப் பதினைந்து நாட்களில் குணமாகி விடும். சிகிச்சை முடித்து டாக்டர் திரும்பினார். இப்போது புண்பட்ட யானையைச் சுற்றி யானைகள் கூட்டம் பிளறியது. இதற்கிடையில் மஞ்சணத்தி மரத்திடியில் ஒரு குட்டியானை வந்தவர்களை நோட்டம் விட்டது.

விடியற்காலையில் யானைக் குட்டி:

ஒருநாள் விடியற்காலையில் டாக்டரின் வீட்டுக்குச் சற்று தூரத்தில் ஒரு யானைக் குட்டி இரண்டு வயதிருக்கும் தள்ளாடியது. டாக்டர் யானைக்குட்டியை நெருங்கி வாயில் மயக்கமருந்து ஊசி போட்டார். முன்போலவே யானைக்குட்டியின் கால்களில் மதுக்குப்பியின் கண்ணாடித் துண்டு, வெளியே எடுக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. ஓரிரு மணிகளில் யானைக்குட்டி எழுந்து விடும். மோப்பம் பிடித்துக்கொண்டு முந்நூறு மைல்தூரம் கூட வரும் சக்தி கொண்டவை யானைகள். சிகிச்சை முடித்து வீட்டின் படிகளிலை நின்று பார்த்தார் டாக்டர். யானைக்குட்டிக்கு அருகில் பத்துப் பண்ணிரண்டு யானைகள் பிளிறிப் பேரொலி எழுப்பின. யானைகளின்முகத்தில் வானவர் புன்னகைக் காணப்பட்டது.

முடிவுரை:

இயற்கையோடு இயற்கையாய் வாழும் யானைகள் இருக்குமிடத்திற்கு மனிதர்கள் சென்றால், ஆபத்து நிறைந்த கண்ணாடி மதுக்குப்பிகளை எறிவதைக் கட்டாயம் நிறுத்த வேண்டும். யானைகளுக்கு இவை ஆபத்தானவை என்று தெரியாது. அவைகளின் உயிர்ப் பாதுகாப்புக்கு மனிதர்கள்தான் உத்திரவாதம் தர வேணடும்.

கீழ்மையான செயல்களைத் தவிர்ப்போம்! விலங்குகளுக்கு உயிர்ப்பாதுகாப்பு அளிப்போம்!!


மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...