செவ்வாய், 25 மே, 2021

முதியோர்க்கல்வி, முதியோர்கல்வி எது சரி?

                                 

 பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்கள் ஈற்றுமெய் வலி வரின் இயல்பாம்் ஆவி ய ர முன் வன்மைமிகா சில விகாரமுமாம் உயர்திணை(நன்னூல்:159) 

ய,ர, உயிரெழுத்துகளை ஈறாகக் கொண்ட உயர்திணைப்பெயர்கள் முன் வல்லினம் மிகாது.

முதியோர்+கல்வி 

இதில் நிலைமொழியின் ஈற்றில் ரகரமெய் வந்து,வருமொழி முதலில் வல்லினம் (க) வந்துள்ளது. மேற்சொன்ன சூத்திரப்படி, முதியோர் உயர்திணைப்பெயராக இருப்பதால் வல்லினம் மிகாமல் இயல்பாகவே புணரும்.

குழந்தை காப்பகம்,குழந்தை கை,

என்பதும் வல்லினம் மிகாமல் இயல்பாகவே வரும்.

 

குமரக்கோட்டமா?குமரகோட்டமா?

 பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்கள் ஈற்று மெய் வலி வரின் இயல்பு ஆம் ஆவி ய ர முன் வன்மை மிகா சில விகாரம் ஆம் உயர்திணை(நன்னூல்:159)

என்ற சூத்திரத்தின் படி, உயர்திணைப் பெயர்கள் இறுதியில் மெய்யெழுத்தை கொண்டிருந்தால், அதன் முன் வல்லினம் வரினும் இயல்பாகவே புணரும். சான்று:குமரன்+கோட்டம்-

உயிர், ய,ர நிலைமொழியின் ஈறானால் வலிமிகுந்தும்,மிகாமலும் இருவழியில் புணரும். சான்று:குமரன்+கோட்டம்-குமரக்கோட்டம் என ஈற்று மெய் நீங்கி வலிமிகுந்து புணரும். குமரகோட்டம் என ஈற்று மெய் மட்டும் நீங்கி வலி மிகாமல் குமரகோட்டம் என இயல்பாகவும் புணரும். 

இன்னொரு விதி: 

புணர்ச்சி என்பது தமிழ்ச்சொற்களுக்குரியது. புணரக்கூடிய சொற்களில் நிலைமொழியோ வருமொழியோ வடசொல்லாகவிருப்பின் புணர்ச்சியிலக்கணம் பொருந்தாது. 

சான்று: 

சூரியன்+ உதயம் (உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே விதிப்படி 'சூரியனுதயம்' ஆகாது.

சூரிய+உதயம்(விதியீறாக உயிர் நிற்கிறது. இடையில் உடம்படுமெய்  தோன்றி சூரியவுதயம்' ஆகாது. 

இடையில் ஓகாரம் தோன்றி 'சூரியோதயம்' என்றாகும். 

இதைப்போன்றே, 

சிவன் என்பது தமிழ்ச்சொல்லன்று .ஷிவா என்னும் வடசொல்லின் திரிபு. பெருமான் தமிழ்ச்சொல். இரண்டும் புணரும்போது தமிழுக்குரிய புணர்ச்சி செயல்படாது. 

சிவன்+பெருமான் -சிவபெருமான் என்றும்

சிவன்+ குமார் இதில் இரண்டுமே வடசொல். இவை புணரும் போது சிவகுமார் என்றும் புணரும். 

இதில் திட்டமான விதிகள் கிடையாது.நன்னூலில் இதுகுறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



சனி, 22 மே, 2021

மூன்றாம் வேற்றுமையில் வல்லினம் மிகுதல்

 மூன்றாம் வேற்றுமையும் வல்லினம் மிகுதலும் 

மூன்றாம் வேற்றுமையானது மூன்று பொருள்களில் வரும்.

               *கருவிப்பொருள் 

               *கருத்தாப்பொருள் 

               *உடனிகழ்ச்சிப்பொருள்


ஆல்,ஆன்,ஒடு,ஓடு என்பன மூன்றாம் வேற்றுமையுருபுகள்.இதில் ஆல்,ஆன் உருபுகள் கருவிப்பொருளுக்கும்,கருத்தாப்பொருளுக்கும் வருவன. ஒடு,ஓடு உடனிகழ்ச்சிப்பொருளுக்கு வருவன.

சான்று

எழுதுகோலால் எழுதினேன்(கருவிப்பொருள்- ஆல் உருபு)

வாளான் வெட்டினான்(கருவிப்பொருள்-ஆன் உருபு) ஆன் உருபுப்பயன்பாடு தற்காலப் பயன்பாட்டில் இல்லை.இது செய்யுள் நடையில் வரும்.

சான்று:புறந்தூய்மை நீரான் அமையும்

கருத்தாப்பொருள்

             *இயற்றுதல் கருத்தா 

             *ஏவுதல் கருத்தா 

என இருவகைப்படும்.

சிற்பியால் சிலை செதுக்கப்பட்டது.(இயற்றுதல் கருத்தா) இதில் செயலைச்செய்பவன் சிற்பி.

கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது(ஏவுதல் கருத்தா) இதில் கரிகாலன் செயலைச்செய்யவில்லை. செயலைச்செய்ய  ஏவுகிறான்.

இத்தகைய கருத்தாப்பொருளுக்கு ஆல்,ஆன் உருபுகளே வரும். 

மன்னனான் கோவில் கட்டப்பட்டது.(ஆன் உருபு)

ஆன்-உருபு தற்காலப்பயன்பாட்டில் இல்லை.

இராமனோடு சீதையும் வந்தாள்(உடனிகழ்ச்சிப்பொருள்)

'வந்தாள்' என்ற பயனிலை சீதைக்கு மட்டும் உரியது. இந்த நிகழ்வில் இராமனும் உடன் இணைந்ததால்,உடனிகழ்ச்சிப்பொருள் பெற்றது.

உடனிகழ்ச்சிப்பொருள் ஒடு,ஓடு உருபுகளைப்பெறும்.

குதிரையொடு குட்டியும் வந்தது(ஒடு உருபு) 

தற்காலத்தில் ஓடு உருபு பயன்படுத்துமளவு ஒடு உருபைப்பயன்படுத்துவதில்லை.

ஆல்,ஆன்,ஒடு,ஓடு  உருபுகளைத்தவிர சில சொற்களும் உருபுகளின் தன்மைபெறும்.இவற்றை 'சொல்லுருபுகள்' என்பர்.

கொண்டு,உடன் என்பவை மூன்றாம் வேற்றுமையின் சொல்லுருபுகளாகும்.

தற்காலத்தில் கூட, வைத்து உருபுகளும் பயன்படுத்தப்படுகிறது.

வாள்கொண்டு வெட்டினான்.

ஆசிரியருடன் மாணவர்கள் வந்தனர்.

கத்திவைத்து அறுத்தான்.

கண்ணன்கூட நானும் வந்தேன்.

மூன்றாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.

கைதொழுதான்-இது கையால் தொழுதான் என்று இருக்க வேண்டும். இங்கே 'ஆல்' உருபு மறைந்து வந்துள்ளது. எனவே ,இது மூன்றாம் வேற்றுமைத்தொகை. இது போன்ற, மூன்றாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.

மூன்றாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது.

கையால் தொழுதான். 

மரத்தால் செய்தான்.

இதில் மூன்றாம் வேற்றுமை உருவானது வெளிப்பட்டு நிற்கிறது. மறையாமல் வெளிப்பட்டு நிற்பதால், இதனை வேற்றுமை விரி என்கிறோம். இது போன்ற மூன்றாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது.

மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.

மரச்சிலை - மரத்தால் ஆன சிலை

இதில் 'ஆல்' என்ற மூன்றாம் வேற்றுமை உருபும், 'ஆன' என்ற பயனும் மறைந்திருக்கிின்றன. எனவே, இது மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை எனப்படும்.

மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்.

சான்றுகள்:

வெள்ளிக்கிண்ணம், மரப்பெட்டி 

வேற்றுமைத்தொடர்-2 

இராம்முருகன்




வியாழன், 20 மே, 2021

உடம்படுமெய்ப்புணர்ச்சி

 உடம்படுமெய்ப்புணர்ச்சி

------------------------------------------++

இரண்டு சொற்கள் இணையும்போது நிலைமொழியின் இறுதி யெழுத்தாக உயிரெழுத்தும், வருமொழியின் முதலெழுத்தாக உயிரெழுத்தும், இருந்தால் இந்த இரண்டு சொற்களும் இணையாது. இணையாத  இரண்டு உயிரெழுத்துக்களை இணைத்து வைக்கும் பொருட்டு, உடன்படுத்தும் பொருட்டு ய்,வ் என்ற இரண்டு மெய்யெழுத்துகள் தோன்றும். இவ்வாறு இணையாத எழுத்துக்களை உடன்படுத்துவதற்காக தோன்றக்கூடிய இந்த இரண்டு மெய்யெழுத்துகளையும் 'உடம்படுமெய்யெழுத்துகள்' என்று வழங்குவர்.

"இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை

உயிர்வழி வவ்வும்;ஏ முன் இருமையும்

உயிர்வரின் உடம்படுமெய் என்றாகும்."

அதாவது நிலை மொழி இறுதியில் இ,ஈ,ஐ எழுத்துகள் வந்து, வருமொழியின் முதல் எழுத்தாக உயிரெழுத்துகளில் பன்னிரண்டு எழுத்துகளில் ஏதேனும் ஒன்று வந்தால், இந்த இரண்டு சொற்களும் இணையும்போது இடையில் 'யகர' மெய் தோன்றும்.சான்று: மணி+அடித்தது-(மணி+ய்+அடித்தது)-மணியடித்தது.(மணி-மண்+இ)

தீ+எரிந்தது-(தீ+ய்+எரிந்தது)-தீயெரிந்தது(தீ-த்+ஈ) 

வேலை+எறிந்தான்-(வேலை+ய்+எறிந்தான்)-வேலையெறிந்தான்(லை-ல்+ஐ)

இ, ஈ ,ஐ இந்த மூன்று உயிர்களைத்தவிர்த்துப்பிற  உயிரெழுத்துகள் வந்தால் 'வகரமெய்' தோன்றும்.

சான்று:கோ+இல்-(கோ+வ்+இல்)-கோவில்

நிலைமொழியின் இறுதியில் 'ஏ' வரின் யகரமெய்யும், வகரமெய்யும் தோன்றும். 

சான்று: சே+அடி-சேயடி,சேவடி.

-புணர்ச்சித்தொடர் 1

இரண்டாம் வேற்றுமை

 "வேற்றுமையில்  வல்லினம் மிகுதலும், மிகாமையும்"


பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் 'பொருளை' வேறுபடுத்துவது 'வேற்றுமை' எனப்படும். வேற்றுமையில் 'உருபு' முதன்மையானதன்று; பொருளே முதன்மையானது. 


இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட சொற்கள் சேர்ந்திருப்பது 'தொடர்' எனப்படும். தொடரென்பது ஒருசொல் தன்மையது. தொடரை அவசியமான காரணமின்றி அதாவது பொருள்தெளிவுக்கன்றிப்-பிரித்தல் கூடாது.

இரண்டாம் வேற்றுமைத்தொகை

இரண்டாம் வேற்றுமைத்தொகையானது ஆறு பொருள்களில் வரும்.

              *ஆக்கல் 
              *அழித்தல்
              *அடைதல்
              *நீங்கல் 
              *ஒத்தல் 
              *அடைதல்

சிலையைச்செய்தான்.(ஆக்கல்)

எதிரியைக்கொன்றான்.(அழித்தல்)

சென்னையை அடைந்தான். (அடைதல்

ஊரைக்கடந்தான்.(நீங்கல்

குமரனைப்போன்றவன் முகமது. (ஒத்தல்

செல்வத்தைப்பெற்றான். (உடைமை)

ஒருதொடரில் வேற்றுமையுருபு வெளிப்பட்டுவந்தால், அது 'வேற்றுமை விரிநிலைத்தொடர்' எனப்படும்

சான்று:புத்தகத்தைப்படித்தான்

ஒருதொடரில் வேற்றுமையுருபு மறைந்து(தொக்கி) வந்தால், அது 'வேற்றுமைத்தொகைநிலைத்-தொடர்' எனப்படும். (சான்று; சிலைதிறப்பு. )தொகையை எக்காரணம் கொண்டும் பிரிக்கக்கூடாது. ஒருதொடரில் வேற்றுமையுருபும் பயனும் மறைந்துவந்தால் அது, 'வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகை' எனப்படும். (சான்று:தயிர்க்குடம்-தயிரை உடைய குடம்)

இருசொற்கள் புணருவதாலே வல்லினம் மிகுகிறது. புணர்ச்சியினால் தோன்றிய ஒற்றினை  நிலைமொழியின் ஈற்றில் நிறுத்திவிட்டு, புணர்ந்த வருமொழியை பிரித்து தனிச்சொல்லாக எழுதுவது, பொது இலக்கணத்திற்கும், புணர்ச்சியிலக்கணத்திற்கும் முரணானது என்பதை நினைவில் நிறுத்துக.(தயிர்க் குடம் - எனப்பிரித்து எழுதுவது தவறு. தயிர்க்குடம் என இணைத்தே எழுதவேண்டும்)

இரண்டாம் வேற்றுமையின் பொருள் 'செயப்படுபொருள்' இது  எழுவாயை, செயப்படுபொருளாக மாற்றுகிறது.இதன் வேற்றுமையுருபு "ஐ" என்றவொன்றே.  "ஐ" என்னும் எழுத்துரு வெளிப்பட்டு வராது. ஐகாரத்தின் உயிர்மெய்யானது, சொல்லின் ஈற்றில்வரும். இரண்டாம் வேற்றுமை வினைச்சொல்லைமட்டுமே ஏற்கும். அதாவது, வினைச்சொல்லுடன்மட்டுமே புணரும்; அப்புணர்ச்சி காரணமாக வல்லினம் மிகும். இரண்டாம்வேற்றுமையருபை அடுத்து, பெயர்ச்சொல் வரலாம்; ஆனால், புணராது.

(சான்று: ஓவியத்தை கண்ணன் வரைந்தார்)


* "குமரா, தண்ணீர்குடி". 'தண்ணீர்குடி' என்னுந்தொடர் 'இரண்டாம்வேற்றுமைத்தொகை' ஆகும். ஏனெனில், இடையில் ஐ-உருபுமறைந்துள்ளது.வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகவில்லை என்பதைக்காண்க. எனவே,இரண்டாம்வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது.


* "குமரன் தண்ணீரைக்குடித்தான்". இதில் இரண்டாம்வேற்றுமையுருபு "ஐ" வெளிப்பட்டு வந்துள்ளதைக்காண்க. அதனால் ககரவொற்று (க்) மிகுந்தது. எனவே, இரண்டாம் வேற்றுமைவிரியில் வல்லினம் மிகும்.

"தயிர்க்குடம்". இதன்பொருள் 'தயிரை உடைய குடம்' என்பதாம். இதில் "ஐ" உருபும், உடைய என்ற பயனும் மறைந்துவந்துள்ளன. ஆகவே, இது 'இரண்டாம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகை' ஆகும். இதில் ககரவொற்று (க்) மிகுந்துள்ளதைக்காண்க. எனவே, இரண்டாம்வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகையில் வல்லினம் மிகும்.




நான்காம் வேற்றுமை

 வேற்றுமையில் வல்லினம் மிகுதலும் மிகாமையும்.


33. நான்காம் வேற்றுமையின் பொருள், "இதற்கு இது" என்று வருவது. அதாவது கோடற்(கொடை)பொருள்; கோடல் = கொடுப்பதை ஏற்றுக்கொள்வது.

இதன் உருபு "கு" ஆகும். ஆக, பொருட்டு என்பன சொல்லுருபுகள். 

4-ஆம் வேற்றுமை முதன்மையாகக்கீழ்க்கண்ட ஏழுபொருளில்வரும்.

∆ கொடை : முல்லைக்குத்தேரினை ஈந்தான் பாரிவள்ளல்.

∆ பகை: தமிழுக்குப்பகை ஆரியம்.

∆ நட்பு: குமரனுக்கு நண்பன் வளவன்.

∆ தகுதி: கண்ணுக்கு அணிகலன் கண்ணோட்டம்.

∆ அதுவாதல் = தயிருக்குப்பால் வாங்கினான். (பாலே தயிராக மாறுகிறது. இதுவே அதுவாதல்.)

∆ பொருட்டு = "நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" .

∆ முறை: சேரன் செங்குட்டுவனுக்குத்தம்பி இளங்கோவடிகள்.  


4-ஆம் வேற்றுமை பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இரண்டையும் ஏற்கும்.

* "கூழுக்குப்பாடினாள் ஔவை பாட்டி". இதில் 4-ஆம் வேற்றுமையுருபு "கு" வெளிப்பட்டு வந்துள்ளதால், இது 4-ஆம் வேற்றுமை விரிநிலைத்தொடர் எனப்படும். இதில் ஒற்று மிகுந்துள்ளதையும் காண்க. எனவே,  4-ஆம் வேற்றுமைவிரியில் வல்லினம் மிகும். "அறியாமல் செய்தாலும் தவறுக்குத்தண்டனை உண்டு", என்பது மற்றொரு எடுத்துக்காட்டாகும். முன்னதில் வினைையையும், பின்னதில் பெயரையும் ஏற்று, வல்லினம் மிகுந்ததைக்காண்க.


* "வள்ளிக்குத்திருமணம்" என்னும் 4-ஆம் வேற்றுமைவிரியின், தொகைநிலைத்தொடர்  "வள்ளித்திருமணம்" என்பதாம். 4-ஆம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகுந்திருப்பதைக்காண்க. எனவே,   4-ஆம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும்.


* " நான் கோழித்தீவனம் வாங்கி வருகிறேன்". இதில் "கோழித்தீவனம்' என்னுந்தொடர், 'கோழிக்கு உரிய தீவனம்' என, 4-ஆம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகையாக விரியும். இதில் வல்லினம் மிகுந்திருப்பதைக்காண்க. எனவே, 4-ஆம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகையில் வல்லினம் மிகும்.


ஆக, 4-ஆம் வேற்றுமை விரி, தொகை, உருபும் பயனும் உடன்றொக்கத்தொகை ஆகியவற்றில் வல்லினம் மிகும்.


* சொல்லுருபுகளுக்கான எடுத்துக்காட்டுகள்:

∆ ஆக - எதற்காகப்பொய் சொல்லவேண்டும்?

∆ பொருட்டு - அன்பின்பொருட்டு மன்னிக்கிறோம்.


34. ஐந்தாம் வேற்றுமையின் பொருள்கள் நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது  என்பனவாம். "இல்", "இன்"‌ என்பன இதனுருபுகள். இருந்து, காட்டிலும், நின்று, பார்க்கிலும், விட முதலானவை சொல்லுருபுகள்.

∆ நீங்கல்:

* தலையின் இழிந்த முடி.

* மலையின்வீழ் அருவி.

∆ ஒப்பு:

* மலையினும் மாணப்பெரிது.

* கரும்பின் உயர்ந்தசுவை தேன்.

∆ எல்லை:

* இந்தியாவின் வடக்கு இமயம்.

* இந்தியாவின் தெற்கு கன்னியாக்குமரி.

∆ ஏது (காரணம்): 

* கல்வியில் பெரியன் கம்பன்.

* அருளில் மிக்கவர் வள்ளல்பெருமான்.


சொல்லுருபுகளுக்கான எடுத்துக்காட்டுகள்:

∆ இருந்து - வீட்டிலிருந்து போனான்.

∆ காட்டிலும் - தாயைக்காட்டிலும் அன்பில் மிக்கார் யாவர்?

∆ நின்று - அருவி மலையினின்று வீழ்கிறது.  .

∆ பார்க்கிலும் - வடவரைப்பார்க்கிலும தென்னவர் முன்னேறியவர்.

∆ விட - உயிரைவிட‌ மானம் பெரிது.

 

5-ஆம் வேற்றுமையுருபுகள் எல்லைப்பொருளில் பெயர்ச்சொற்களைமட்டுமே ஏற்கும் என்பதை நினைவில்கொள்க. ஏனைய நீங்கல், ஒப்பு, ஏது பொருள்களில் வினைச்சொற்களை ஏற்கும்.


* "தாய்மொழியில் பேசு", என்பது 5-ஆம் வேற்றுமை  விரிநிலைத்தொடராகும். இது தொகையாகும்போது "தாய்மொழிபேசு" என்றாகும். ஈரிடத்தும் வல்லினம் மிகவில்லை என்பதைக்காண்க. எனவே, 5-ஆம் வேற்றுமைத்தொகையிலும், வேற்றுமைவிரியிலும் வல்லினம் மிகாது.


5-ஆம் வேற்றுமைவிரியில் "விட" என்னும் சொல்லுருபு வெளிப்பட்டு வரும்போது வல்லினம் மிகும்.

* விட - மாணவர்களே, கல்வியைவிடப்பெரியது எது?


* "தாய்மொழிக்கல்வி அறிவை வளர்க்கும்". இது "தாய்மொழியில் கற்பிக்கப்படும் கல்வி" என்பதாக, 5-ஆம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகையாக விரியும். இதில் ககரமெய் (க்) மிகுந்திருப்பதைக்காண்க. எனவே, 5-ஆம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகையில் வல்லினம் மிகும். 'பழச்சாறு'  என்பது பழத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாறு' எனவிரியும். கனிச்சாறு, வாய்ப்பாட்டு முதலானவை இதரசில எடுத்துக்காட்டுகள்.



ஆறாம் வேற்றுமை

 வேற்றுமையில் வல்லினம் மிகுதலும் மிகாமையும்.


35. ஆறாம் வேற்றுமையின் பொருள் "கிழமை" என்பதாம். கிழமை = உரிமை, உடைமை.


இதன் உருபுகள் "அது", "ஆது", "அ" என்பன. இதில் "அது", "ஆது" ஆகியன ஒருமைக்கும், "அ" என்பது பன்மைக்கும் வரும். இம்மூன்றும் அஃறிணைக்கு உரியன. இதில் "ஆது", "அ" என்பன தற்போது பயன்பாட்டில் இல்லை. "உடைய" என்பது சொல்லுருபு.


மனித உறுப்புகளை தனித்தனியாகச்சுட்டும்போது, அவ்வுருப்புகள் அஃறிணையாகவே கருதப்படும். எடுத்துக்காட்டுகள்:

* எனது கை. ✓ சரி.

* எனாது கை. ✓ சரி.(தற்கால பயன்பாட்டில் இல்லை)

* என கைகள். ✓ சரி. என்+அ= என.

* 'பாம்பறியும் பாம்பின கால்'. பாம்பின என்பதில் "அ" விகுதி பன்மைக்கான,  6-ஆம் வேற்றுமையுருபு . கால்கள்  எனப்பொருள்தரும்.  (தற்கால பயன்பாட்டில் இல்லை).


"உடைய" என்னுஞ்சொல்லுருபு இருதிணைக்கும் (உயர்திணை, அஃறிணை), இருமைக்கும் (ஒருமை, பன்மை) வரும்.

* என்கை. ✓சரி.

* என்கைகள். ✓சரி.

* என்மக்கள். ✓ சரி. இவைகள் "உடைய" என்னுஞ்சொல்லுருபு மறைந்துவரும்  6-ஆம் வேற்றுமைத்தொகைகள்.

* என்னுடைய புத்தகம். ✓சரி.

* என்னுடைய புத்தகங்கள். ✓சரி.

* என்னுடைய பெற்றோர். ✓சரி.

* என்னுடைய மக்கள். ✓ சரி. இவைகள் "உடைய" என்னுஞ்சொல்லுருபு வெளிப்பட்டுவரும்  6-ஆம் வேற்றுமைவிரிகள். 


"உடைய" என்ற சொல்லுருபு அஃறிணை இருமைக்குமட்டுமே உரியது என்றும்; உயர்திணைக்கானது அல்ல என்பதும் ஒருகொள்கை. இக்கருத்துக்கான தொல்காப்பியநூற்பா வருமாறு:-

"அது வென் வேற்றுமை

உயர்திணைத் தொகைவயின்

அதுவென் உருபுகெடக் குகரம் வேண்டும்". இதன்படி "அது" என்னும் உருபு வரக்கூடிய உயர்திணைத்தொகைநிலைத்- 

தொடர்களுக்கெல்லாம் "கு" என்னும் உருபுதான் வரவேண்டும்.

* எனக்கு மனைவி. ✓ சரி.

* எனக்குக்கணவன். ✓ சரி.

* எனக்கு மக்கள். ✓ சரி.

இந்த கொள்கைக்கானக்காரணம் என்ன? " தமிழ்ப்பண்பாட்டில் மக்களுக்கு அஃறிணைப்பொருள்கள்தாம் உரிமையுடைய சொத்துக்களாக இருக்கமுடியுமே தவிர, உயர்திணை தேவர், மக்கள், நரகர் சொத்துகளாக இருக்கமுடியாது. சான்றாக பெற்றோர் மக்களிடையே இருப்பது உறவுதானேதவிர, சொத்துடைமை அன்று.


"கு" உருபைப்பயன்படுத்த விரும்பாவிட்டால், எந்த உருபையும் பயன்படுத்தாமல் 6-ஆம் வேற்றுமைத்தொகையாகவே குறிப்பிட்டுவிடலாம்.

* என்மனைவி. ✓ சரி.

* என்கணவன். ✓ சரி.

* என்மக்கள். ✓ சரி.


" தசரதரின் மகன் இராமன்", என்றெழுதுவதைக்காண்கிறோம். இலக்கணப்புலவோர் "இன்" என்பதை "சாரியை" என்பர். அப்படிச்சொல்ல வேண்டுவதில்லை. "இன்" என்பதை 6-ஆம் வேற்றுமையுருபாகவே கொள்ளலாம்", என்கிறார் அ.கி. பரந்தாமனார். இவர் கூறுவதையேற்றுக்கொண்டால் ஆறாம் வேற்றுமையுருபு என்னவென வரையறுக்கவேண்டும்.  ஒரு வேற்றுமைக்கானயுருபை இன்னோரு வேற்றுமைக்குரிய பொருளில் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கோடல்பொருளுக்கான 4-ஆம் வேற்றுமையுருபு 'கு'வை, 6-ஆம் வேற்றுமை உயர்திணைகளில் கிழமைப்பொருளில் பயன்படுத்துவதை தொல்காப்பியம் சுட்டுகிறது. எனவே, அ.கி. பரந்தாமனார் பரிந்துரையை உடனடியாக கடைப்பிடிப்பதற்கில்லை. "தசரதனுக்கு மகன் இராமன்" என்பதே சரி. அல்லது "தசரதன்மகன் இராமன்" என்பதும் சரி.


"கிழமை", தற்கிழமை, பிறிதின்கிழமையென இருவகைப்படும். ஒன்றின் பிரிக்கமுடியாத பாகமாக இருப்பது தற்கிழமை. சான்று: என்கை.

ஒன்றிலிருந்து பிரிந்து தனித்தும், உடைமையாகவும் இருப்பது பிறிதின்கிழமை. சான்று: என்புத்தகம்.


'புலியினதுகுட்டி அல்லது புலியினுடைய குட்டி' என்னும் தொடர், 6-ஆம் வேற்றுமை விரிநிலைத்தொடர். இதில் வல்லினம் மிகவில்லை என்பதைக்காண்க.  இந்த விரிநிலைத்தொடரின், தொகைநிலைத்தொடர்  'புலிக்குட்டி' என்பதாம். இதில் ககரவொற்று(க்) மிக்கு வந்துள்ளது. எனவே, 6-ஆம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும். இங்கு நிலைமொழி அஃறிணையாக இருந்தால்மட்டுமே வல்லினம் மிகும் என்பதையும் கருத்தில்கொள்க. 'தேர்ச்சக்கரம்', 'வாழைத்தண்டு', 'நரிப்பல்' என்பன சில எடுத்துக்காட்டுகள்.


'ஐயனார்கோவில்', 'கண்ணகிசிலம்பு',

'எண்குணத்தான்தாள்', 'சமணர்பள்ளி'  என்பன, "உடைய" என்ற சொல்லுருபு அல்லது  "கு"  என்னும் உடைமைப்பொருள்கொண்ட 6-ஆம் வேற்றுமை  மறைந்துவந்த தொகைநிலைத்தொடர்களாகும். இவற்றின் நிலைமொழிகள் உயர்திணையாக இருப்பதைக்காண்க. எனவே, உயர்திணையை நிலைமொழியாகக்கொண்ட 6-ஆம் வேற்றுமைத்தொகைகளில் வல்லினம் மிகாது.


6-ஆம் வேற்றுமையில் உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை இல்லை.


6-ஆம் வேற்றுமை பெயர்ச்சொற்களைமட்டுமே ஏற்கும். வினைச்சொற்களை ஏற்காது.



ஏழாம் வேற்றுமை

 வேற்றுமையில் வல்லினம் மிகுதலும் மிகாமையும்.


36. ஏழாம் வேற்றுமையின் பொருள் "இடப்பொருள்". பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகிய ஆறும் இடமாகும். இதில் தற்கிழமை, பிறிதின்கிழமை என்ற பிரிவுகள் உண்டு.

1. பொருள் தற்கிழமை: மணியின்கண் ஓசை.

பொருள் பிறிதின்கிழமை: மரத்தின்கண் கிளி.

2. இடத்தற்கிழமை: வீட்டின்கண் அறை.

இடப்பிறிதின்கிழமை: வீட்டின்கண் காளை.

3. காலத்தற்கிழமை: நாளின்கண் நாழிகை.

காலப்பிறிதின்கிழமை: காரின்கண் நெல். (கார் = கார்காலம்).

4. சினைத்தற்கிழமை: கையின்கண் விரல்.

சினைப்பிறிதின்கிழமை: விரலின்கண் மோதிரம்.

5. பண்புத்தற்கிழமை: நிறத்தின்கண் அழகு.

பண்புப்பிறிதின்கிழமை: முதுமைகண் வறுமை.

6.தொழிற்தற்கிழமை: ஆட்டத்தின்கண் சிமிட்டல்.

தொழிற்பிறிதின்கிழமை: ஆட்டத்தின்கண் பாட்டு.


பொதுவாக, இடத்தில், இல், கண், கீழ், மேல் முதலான 7-ஆம் வேற்றுமை உருபுகள்  எனச்சொல்லப்பட்டாலும், இடத்தைச்சுட்டும் பலவும் 7-ஆம் வேற்றுமை உருபுகள் ஆகும். அகம், புறம், உள்; இடை, கடை; தலை, முகம், வாய்; முன், பின்; கீழ், மேல்; திசை, வழி; பால், உழி ( இடம், பக்கம், அளவு), முதலானவும் 7-ஆம் வேற்றுமை உருபுகள்.


"இல்" என்ற வேற்றுமையுருபு ஐந்திலும் ஏழில் வந்தாலும் வேறுவேறு பொருளில் வருவதை நாம் நினைவில் பதித்தல்வேண்டும்.


7-ஆம் வேற்றுமை, பெயர்ச்சொற்கள் வினைச்சொற்கள் இரண்டினையும் ஏற்குமென்பதை நினைவிற்கொள்க.


'பாண்டியர்குடிப்பிறந்தார்'   என்னுந்தொடர், 'பாண்டியர்குடியின்கண் பிறந்தார்' எனவிரியும்.  இந்த விரிநிலைத்தொடரில் "இன்" என்பது சாரியை; "கண்" என்பது 7-ஆம் வேற்றுமையுருபு. இதில் பகரவொற்று(ப்) மிகுந்ததைக்காண்க. எனவே, 7-ஆம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும். வேற்றுமைவிரியில் ஓற்று தோன்றவில்லை என்பதையும் காண்க. எனவே, 7-அம் வேற்றுமைவிரியில் வல்லினம் மிகாது. 


"கூண்டுக்கிளி" என்னுந்தொடர், "கூண்டின்கண் வாழும் கிளி" எனவிரியும். இதில் "இன்" என்பது சாரியை; "கண்" ஏழன் உருபு; வாழும் என்பது பயன்சொல். ஆக இத்தொடர்,  7-ஆம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகை எனப்படும். "பூந்தேன்", *மலைப்பாம்பு", "நீர்ப்பாம்பு" என்பன மேலுஞ்சில எடுத்துக்காட்டுகள். எனவே, 7- ஆம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகையில் வல்லினம் மிகும்.


7-ஆம் வேற்றுமையுருபுகள் வாக்கியங்களில் அமையும்வகைக்கான எடுத்துக்காட்டுகள் வருமாறு:-

* கண் - "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற".

* முன் - "கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று இரப்பும்ஓர் ஏஎர் உடைத்து ".  

* மேல் - " மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்".

* கீழ் - "பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்".

* முகம் - "ஈன்றாள் முகத்தேயும் இன்னாதல் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி  ".

* இல் -"சாப்பிடுகையில் விக்கல் வந்தது. தலையில் தட்டி  அருந்த நீர்தந்தாள் அன்னை".

* உள் - "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்"

* வழி - கோன் எவ்வழி, குடி அவ்வழி.

* பால் - ஏதிலிபால் இரக்கங்கொள்.

* பின் - "ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்".

* புறம் - ஊரின்புறம் உள்ளது புறம்போக்குநிலம் எனப்பட்டது.

* தலை- "இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை".

* வாய் - "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்".

* கடை - "அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையர் இல்".

* உழி - "அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி".

* கால் - "நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்".

* இடை - "உடம்பொடு  உயிரிடை என்னமற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு"..

* இடத்தில், பால் - "சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு".

* அகம் - "ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல்".

* திசை - " தென்திசை நோக்கியிருப்பன் எங்கள் தென்முகநம்பி".



மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...