சனி, 5 ஜூலை, 2025

உயிரீறு மெய்யீறு

 உயிரீறு மெய்யீறு பற்றி தொல்காப்பியர் கூறுவன.


எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும் மெய்யே உயிரென்று ஆயீரியல. (தொல் 103)


எல்லா சொற்களுக்கும் ஈற்றெழுத்தானது உயிராகவோ மெய்யாகவோ நின்று உயிரீறு மெய்யீறாக நிற்கும்.


சிலை-(ல்+ஐ) உயிரீறு 


'அவற்றுள் மெய்யீறெல்லாம் புள்ளியோடு நிலையல்' (தொல் 104)


மெய்யீறு என்பது புள்ளி பெற்று நிற்கும் எழுத்துகள் ஆகும்.


மண், பறவைகள், நிலம் முதலியன.


'குற்றியலுகரமும் அற்றென மொழிப'(தொல்.105) 


நிலைமொழியின் இறுதியில் குற்றியலுகர எழுத்துகளான கு சு டு து பு று இவை இடம்பெற்று  அரை மாத்திரை அளவே பெறுவதால் அதனை நாம் மெய்யீறாகவே கருத வேண்டும். அல்லது குற்றியலுகர ஈறு எனக்குறிப்பிடலாம். மாறாக, உயிரீறு எனல் பிழையாகும் 


உயிர்மெய் ஈறும் உயிரீற்று இயற்றே (தொல் 106)


நிலைமொழியின் ஈற்றில்  உயிர் மெய் எழுத்துக்கள் இடம்பெற்றால் அவற்றை உயிரீறாகக் கொள்ள வேண்டும்.


தொல்காப்பியரின் கருத்துப்படி, 


பன்னிரண்டு - பத்து+இரண்டு (து) குற்றியலுகர ஈறு. 


நாலடியார் - நான்கு+அடியார் (கு) குற்றியலுகர ஈறு.


இவற்றை உயீரீறு எனல் பிழையென்பதால் ஆசிரியர்கள் நன்கறிந்து மாணவர்களுக்குக் கற்பிக்கவும் 


நன்றி 🙏 

இராம்.முருகன்

ஆனையூர்

செவ்வாய், 27 மே, 2025

பட்டு உடுத்தி வந்தாள் இதுஎவ்வகை ஆகுபெயர்?

 பட்டு உடுத்தி வந்தாள் 

கருவி - மூலம், காரணம் எனப்பொருள்படும்

காரியம் - மூலத்தால் உருவாகும் பொருள் 

பட்டு நூல் - மூலம் 

பட்டாடை - மூலத்தால் உருவாகும் பொருள் 

காரணத்தின் பெயர் (மூலம்) காரியத்திற்கு (மூலத்தாலானபொருள்) ஆகி வருவது கருவியாகுபெயர். 

பட்டு நூல் என்னும் மூலத்தின் பெயர் மூலத்தாலான பொருளான ஆடைக்கு ஆகி வந்துள்ளதால் இது கருவியாகு பெயராகும்.


சனி, 26 ஏப்ரல், 2025

கிறு கின்று ஆநின்று விளக்கம்

கிறு கின்று என்ற இரண்டும் நிகழ்காலத்தைக் குறித்தாலும் இரண்டையும் ஐம்பால்களிலும் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக, 'கிறு' என்ற நிகழ்கால இடைநிலை, பலவின்பாலில் பயன்படுத்தப்படுவதில்லை..

கிறு 

கிறு இடைநிலை ஐம்பால்களில் பலவின்பால் தவிர்த்து எஞ்சிய நான்கு பால்களில் பயன்படுத்தப்படுகின்றன.

நிகழ்காலத்தில் செயல்நடைபெறுவதைப் பொதுவாகக் கூறுகிறது.

செய்கிறான்- ஆண்பால் 

செய்கிறாள் - பெண்பால்

செய்கிறார் - பலர்பால் 

செய்கிறது - ஒன்றன் பால்.

கின்று 

கின்று என்னும் இடைநிலை . ஐம்பால்களிலும்  நிகழ்காலத்தைக்குறிக்கப் பயன்படும்.

நிகழ்காலத்தில் செயலின் உறுதித்தன்மையை அழுத்தமாக உணர்த்தப்பயன்படுகிறது 

செய்கின்றான்- ஆண்பால் 

செய்கின்றாள் - பெண்பால்

செய்கின்றார் - பலர்பால் 

செய்கின்றது - ஒன்றன் பால்.

செய்கின்றன - பலவின்பால் 

ஆநின்று

'ஆநின்று ' என்னும் நிகழ்கால இடைநிலை தற்காலத்தில் பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும் இது 'present continuous tense' என்ற தொடர் நிகழ்கால நிலையிலேயே பயன்படுகிறது . 

ஒரு செயல் நிகழ்காலத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் குறிக்க ஆநின்று இடைநிலை பயன்படுகிறது. இது எதிர்மறைப்பொருளைத்தராது ஐம்பால்மூவிடங்களிலும் பயன்படுத்துவர் 

வாராநின்றான் - ஆண்பால் 

வாராநின்றாள் - பெண்பால்

வாராநின்றார் - பலர்பால் 

வாராநின்றது - ஒன்றன் பால் 

வாராநின்றன - பலவின் பால்

நன்றி 🙏 

இரா.முருகன் தமிழாசிரியர் 



ஆகியவை ஆகியன வேறுபாடு

 ஆகியவை பயன்படுத்தும் இடம் 


பெயர்ச்சொற்களின் தொகுப்பு நிறைவுற்றதாக இருப்பின் "ஆகியவை ' பயன்படுத்துக.


சான்று 


விலங்குகள், பறவைகள், உயிரற்ற பொருள்கள் ஆகியவை அஃறிணையாகும். 


ஆகியன பயன்படுத்தும் இடம் 


வினைச்சொல்(செயல் ) தொகுப்பு நிறைவுற்றதாக இருப்பின் ஆகியன பயன்படுத்துக. 


சான்று 


படமெடுத்தல், ஒட்டுதல், வெட்டுதல், இசையைச்சேர்த்தல் ஆகியன திரைப்பட உருவாக்கப்பணிகளின் உட்பிரிவுகளாகும்.


நன்றி 🙏 

இராம் முருகன்

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

தன்வினை செய்வினை உடன்பாட்டுவினை மூன்றுக்கும் என்ன வேறுபாடு?

 தன்வினை செய்வினை உடன்பாட்டுவினை மூன்றுக்கும் என்ன வேறுபாடு?


தன்வினை: ஒருதொடரில் எழுவாய் தானே ஒருசெயலைச்செய்வது தன்வினை. செயலின் பயன் செய்பவனுக்குக்கிடைக்கும்.


பிறவினை: செயலை எழுவாய் செய்தாலும் பயன் வேறொருவருக்குக் கிடைப்பது பிறவினை.


குமரன் பாடம் படித்தான் 


இத்தொடரில் எழுவாயான குமரன் படித்தல் என்னும் செயலைத்தானே செய்கிறான். படித்தலினால் கிடைக்கும் பயன் குமரனுக்கே கிடைக்கிறது. 


செயல் புரிவது- குமரன் 

பயன்பெறுவது - குமரன் 


ஆசிரியர் பாடத்தைக் கற்பித்தார். 


இதில் எழுவாய் செயலைச் செய்தாலும் பயன் வேறொருவருக்குக் ( மாணவருக்கு) கிடைக்கிறது. 


செயல்புரிவது - ஆசிரியர் 

பயன்பெறுவது - மாணவன் . 


செய்வினை: தொடரில் எழுவாய் ஒரு செயலைச் செய்வது செய்வினை. இங்கு எழுவாயே முதன்மை பெறும்.


குமரன் மரம் நட்டான் 


செயலைச் செய்வது, முதன்மை பெறுவது - எழுவாய் ( குமரன்) 


செயப்பாட்டுவினை 

எழுவாய் செயலைச் செய்தாலும் முதன்மை பெறுவது செயப்படுபொருள்.


மரம் குமரனால் நடப்பட்டது. 


செயல்புரிவது - குமரன் 


முதன்மை பெறுவது - செயப்படுபொருள் ( மரம்)


உடன்பாட்டு வினை: ஒரு தொடரில் செயல் நடைபெற்றிருந்தால் உடன்பாடு 


குமரன் பாடம் படித்தான் 


இதில் படித்தல் என்னும் நடைபெறுகின்றது. 


எதிர்மறை: தொடரில் செயல் நடைபெறவில்லையெனில் எதிர்மறை 


குமரன் பாடம் படிக்கவில்லை. 


இதில் செயல் நடைபெறவில்லை.


இப்போது வினாவுக்கு வருவோம் .

தன்வினை செய்வினை உடன்பாட்டுவினை மூன்றுக்கும் என்ன வேறுபாடு? 


குமரன் பாடம் படித்தான் 


செயலின் பயன் எழுவாய்க்குக் கிடைக்கிறது.  


செயலை எழுவாய் செய்கிறது. எழுவாயே முதன்மை பெறுகிறது 


தொடரில் ஒரு செயல் ( படித்தல்) நடைபெறுகிறது.


அப்படியென்றால் 


குமரன் பாடம் படித்தான் என்பது மூன்று தொடர்களுக்கும் உரியது. 


உங்களுக்குப் புரிவதற்காக சிறு சான்று


இராமசாமி ,சீதா - தாத்தா பாட்டி 

இராம்,திலகா (அம்மா,அப்பா)

 முருகன் , மகேஸ்வரி- (மகன், மகனின் மனைவி)


இப்போது வினா.


மனைவி உறவுமுறையில் உள்ளவர் யார்? 


அ.சீதா

ஆ.திலகா

இ.மகேஸ்வரி. 




இக்கேள்வி எத்துணை குழப்பமும் மடத்தனமுமானதோ அவ்வாறானதே .


மாலதி மாலையைத் தொடுத்தாள் 


அ.தன்வினை

ஆ.செய்வினை

இ.உடன்பாடு


என்னும் வினாவும்.


தன்வினை செய்வினை உடன்பாட்டுவினை மூன்றுக்கும் என்ன வேறுபாடு? என்னும் வினாவும்.


இலக்கணம் அறியாத சிலர் இதுபோன்ற வினாக்களை எழுப்பி மாணவர்களைக் குழப்புகின்றனர்.


நன்றி 🙏 

இராம் முருகன்

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...