வெள்ளி, 30 ஜூன், 2023

பன்னிரண்டாம் வகுப்பு -இயல்1 சிறுதேர்வு

 பன்னிரண்டாம் வகுப்பு

இயல் ஒன்று- சிறு தேர்வு

                                       மதிப்பெண்கள் 20


சிறு வினாக்கள்      5×4=20

சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் விளக்குக

ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் இடஞ்சுட்டிப்பொருள் விளக்குக

செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்து பூக்காடாம் வானமெல்லாம்- தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக

பாண்டியர் சங்கத்தில் கொலுவிருந்தாய் தொடரின் பொருள் யாது?

கலை முழுமை விளக்குக.

பன்னிரண்டாம் வகுப்பு -இயல்1 சிறுதேர்வு

               பன்னிரண்டாம் வகுப்பு 

                இயல் ஒன்று- சிறு தேர்வு 

                                          மதிப்பெண்கள் 20

குறு வினாக்கள்                   10÷2=20

1)நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தை குறிப்பிடுக.

2)கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

3)விடியல் வனப்பு இரு சொற்களையும் ஒருங்கிணைத்து தொடரமைக்க

4)மொழியின் இயல்பு வழக்குகளை கலையியல் வழக்குகளாக மாற்றுபவை எவை?

5)கவிதை மறுதலைத் தொடர் விளக்குக.

6)அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்கள் யாவை?

7)அணி இலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்கள் யாவை?

8)பொருள் வேற்றுமை அணி விளக்குக

9)தண்டியலங்காரம் நூல் குறிப்பு தருக.

10)சிற்பி பாலசுப்பிரமணியம் இயற்றிய கவிதை நூல்கள் யாவை?



பதினோராம் வகுப்பு சிறுதேர்வு -2

 சிறுதேர்வு -2 மதிப்பெண்கள் 20

குறுவினாக்கள் 4×2=8

1)உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துக்கள் அமைந்துள்ளன?

2)மொழி முதல் இறுதி எழுத்துகள் யாவை? ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்காட்டு தருக.

3)உயிரீறு மெய்யீறு விளக்குக.

4)உயிர்முதல் மெய்ம்முதல் எடுத்துக்காட்டுடன் விளக்குக.

சிறுவினாக்கள் 3×4=12

1)நன்னூல் பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் கூறும் கருத்துக்களைத் தொகுத்துரைக்க.

2)குற்றியலுகரப்புணர்ச்சி – சான்றுடன் விளக்குக.

3)நன்னூல் பாயிரம் மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக.


பதினோராம் வகுப்பு சிறுதேர்வு -1

 சிறுதேர்வு-1 மதிப்பெண்கள்:20

குறுவினாக்கள்.          4×2=8

1)பேச்சு மொழி எழுத்து மொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தி மிக்கது ஏன்?

2)இனம் மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக

3)பாயிரம் பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?

4)சு .வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என்று எவற்றைக் குறிப்பிடுகிறார்?

சிறுவினாக்கள்.                3×4=12


1)என்னுயிர் தமிழ் மொழி என்பேன் என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்பற்றினை எழுதுக

2)நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றை குறிப்பிடுகிறது?

3)‘யுகத்தின் பாடல்' மனப்பாடப் பாடலை அடிபிறழாமல் எழுதுக


செவ்வாய், 27 ஜூன், 2023

பதினோராம் வகுப்பு 3.07.23-7.7.23

 


இராம்முருகன்

தமிழாசிரியர்

அரசூர் 


நாள்: 3.7.23-7.7.23

வகுப்பு: பதினோராம் வகுப்பு 

பாடம்: தமிழ் 

தலைப்பு: இயற்கை வேளாண்மை, திருமலை முருகன் பள்ளு, ஐங்குறுநூறு.

கற்றல் நோக்கங்கள்

இயற்கை வேளாண்மை, நீர் மேலாண்மை ஆகியவற்றின் இன்றியமையாமையை உணர்ந்து தம் சமூகப்பங்களிப்பை நல்குதல்.

உரையாடல், பள்ளு வடிவங்களின் வழியாக கருத்துகளைப் படித்து பொருளுணரதல். 

கற்றல் விளைவுகள்

இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெறுகின்றனர்.

செயற்கை உரங்கள், நச்சுக் கொல்லிகள் போன்றவற்றால் ஏற்படும் தீங்குகளை அறிதல்.

சங்ககாலத்தில் மழைப்பருவத்தில் பூத்திருந்த பூக்களையும் இயற்கை சூழலையும் அறிந்து கொள்கின்றனர்.

வேளாண்மை இலக்கியமான பள்ளு பற்றியும் மழைப்பருவத்தில் வடகரை, தென்கரை நாடுகளின் இயற்கை வளம் பற்றியும் அறிந்து கொள்கின்றனர்.

துணைக் கருவிகள்

படங்கள் விளக்கப் படங்கள் காணொளிகள்.

ஆர்வமூட்டுதல்

இயற்கை வேளாண்மை குறித்து நீ அறிந்த கருத்துக்களைக் கூறு.

நம்மாழ்வார் படத்தினைக் காட்டி அவர் குறித்த செய்திகளைக் கூறச் செய்தல்.

முந்தைய வகுப்பில் கற்ற சிற்றிலக்கியங்களின் பெயர்களைக் கூறுக.

மேற்கண்ட செயல்கள் மூலம் மாணவர்களை ஆர்வமூட்டுதல்.

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடு 

இயற்கை வேளாண்மை குறித்து அறிமுகம் செய்தல்.

பனை மரத்தின் சிறப்புகளையும் மதிப்புக் கூட்டுப் பொருள்களையும் விளக்குதல். 

'ஒற்றை வைக்கோல் புரட்சி' நூல் குறித்து அறிதல்

காணொளி மூலம் தொழு உரம் தயாரித்தலை விளக்குதல்.

வேதிக்கலப்பு இல்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்கு சாத்தியமா? என்பது குறித்து கலந்துரையாடல்.

பள்ளு இலக்கியம் குறித்து விளக்குதல்

வடகரை நாடு, தென்கரை நாடு இவற்றின் இயற்கை வளத்தை விளக்குதல்.

திருமலை முருகன் பள்ளு கூறும் மாடு வகைகள், உழவுக் கருவிகள், நெல் வகைகளை மாணவர்களுக்குக் கூறுதல்.

முல்லைத் திணை குறித்து விளக்குதல் ஐங்குறுநூறு நூலமைப்பு கூறுதல் ஐங்குறுநூறு கூறும் மலர் வகைகள் குறித்து விளக்குதல்.

இணையத்தின் மூலம் மலர்களின் படங்களைக் காட்டுதல்.

மாணவர் செயல்பாடு

இயற்கை வேளாண்மை குறித்த கருத்துக்களைப் பகிர்தல்

பனை மரத்திலிருந்து கிடைக்கும் மதிப்புக்கூட்டுப் பொருள்களைப் பட்டியலிடல்

நம்மாழ்வார் குறித்த கருத்துக்களை இணையத்திலிருந்து தொகுத்துக் கூறுதல்

ஒற்றைவைக்கோல் புரட்சி நூல் குறித்து இணையத்தில் தேடி தகவல்களைச் சேகரித்தல்

சிற்றிலக்கியங்களின் வகைகளைப் பட்டியலிடல்

மாணவர்கள் அறிந்த ஆடு மாடு வகைகள் உழவுக்கருவிகள், நெல்வகைகளை கூறச் செய்தல்

எட்டுத்தொகை நூல்களின் பெயர்களைப் பட்டியலிடக் கூறுதல்

மாணவர்கள் அறிந்த மலர்களின் பெயர்களை வகுப்பறையில் பட்டியலிடல்

மதிப்பீடு

மதிப்புக்கூட்டுப்பொருள் என்றால் என்ன?

ஐந்து வேளாண்மை மந்திரங்கள் எவை?

தொழு உரம் எப்படி தயாரிக்கப்படுகிறது?

பள்ளு இலக்கியத்தின் வேறு பெயர்கள் யாவை?

ஐங்குறுநூறு நூலமைப்பை கூறுக.

வலுவூட்டல்

கடினமான பகுதிகளை மீண்டும் துணைக் கருவிகளின் உதவி கொண்டு கற்பித்தல்.

எளிய வினாக்கள் கேட்டல்

பாடப்பகுதி மாணவர்களுக்குப் புரிந்ததை உறுதி செய்தல்

தொடர்பணி

உங்கள் பள்ளி வளாகத்தின் இயற்கைச் சூழலை  மேம்படுத்தவும் பாதுகாக்கவும் ஏற்ற திட்டம் ஒன்றை உருவாக்குக.

மாடித்தோட்டம் அமைக்கும் முறையை இணையதளம் மூலம் அறிந்து வகுப்பில் கலந்துரையாடுக.

பள்ளியில் செயல்படும் தேசிய பசுமைப்படை,சுற்றுச்சூழல் மன்றம், ஆகியவற்றின் வாயிலாக மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதில் உங்கள் செயல்பாடு குறித்து உரை நிகழ்த்துக.

சங்க இலக்கியங்கள் காட்டும் பூக்கள் குறித்த செய்திகளைத் திரட்டி தகவல் பலகையில் காட்சிப்படுத்துக.



வெள்ளி, 23 ஜூன், 2023

பதினோராம் வகுப்பு -பாடக்குறிப்பு மூன்றாவது வாரம்

 நாள்: 26.6.23-30.6.23

வகுப்பு: பதினோராம் வகுப்பு 

பாடம்: தமிழ் 

தலைப்பு: ஏதிலிக்குருவிகள்.

                     காவியம்

கற்றல் நோக்கங்கள்

சூழல் சீர்கேட்டால் அழியும் உயிரின வகைகளை அறிதல்.

நம்மைச் சுற்றியுள்ள உயிரினங்களின் பாதுகாப்பு பற்றி அறிதல்.

இயற்கை சமநிலை வரும்போது ஏற்படக்கூடிய இழப்பு உயிரின அழிவு குறித்து அறிதல்.

கற்றல் விளைவுகள்

சூழலியல் சீர் கேட்டால் சிட்டுக்குருவிகளின் அழிவைப் பற்றியும் இயற்கை மாசுபாடு குறித்தும் அறிதல்.

பிற உயிரினங்களின் துன்பத்தை உணர்ந்து அவற்றைப் பாதுகாத்தல்.

துணைக் கருவிகள்

படங்கள் விளக்கப்படங்கள் மடிக்கணினி

ஆர்வமூட்டுதல்.

உன் வீட்டு அருகே சிட்டுக்குருவிகளை பார்த்ததுண்டா

சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு காரணமாக நீ எதை கருதுகிறாய்

பறவைகளைப் பாதுகாக்க நாம் என்ன செய்யலாம்

கற்றல் கற்பித்தல் பாடப்பொருள்

ஆசிரியர் செயல்பாடு

உயிர்களின் இருப்பு சூழலியல் மாற்றத்தால் மட்டுமே நிகழ்கிறது என்பதை கூறுதல். இயற்கை சமநிலை, சூழல் மாறுபடுவதால் ஏற்படும் உயிரின இழப்பு குறித்து கூறுதல். 

ஒவ்வொரு உயிரும் இயற்கைச் சமநிலையை எவ்வாறு பேணுகிறது என்பதை படங்களைக் காட்டி விளக்குதல்.

 சிட்டுக்குருவிகள் அழிவுக்கு காரணங்களைப்பட்டியலிடல். 

அனைத்து உயிரினங்களின் தோற்றத்துக்கும் வாழ்தலுக்கும் மழையே அடிப்படைக் காரணம் என்பதை விளக்குதல்.

அழகிய பெரியவன் குறித்தும் அவர் 'தகப்பன்கொடி'புதினத்திற்காக பெற்ற பரிசுகள் குறித்தும் அவர் இயற்றிய நூல்கள் குறித்தும் விளக்குதல்.

நவீனக்கவிதைகள் குறித்து விளக்குதல் பிரமிள் பற்றியும் அவர்தம் படைப்புகள் பற்றியும் இணையத்தின் மூலம் வாசிக்கச் செய்து விளக்குதல்.

பறவையின் வாழ்வை இறகு கூறிச்செல்வதை மாணவர்களோடு கலந்துரையாடல்.

மாணவர் செயல்பாடு

சிட்டுக்குருவிகள் குறித்த தகவல்களைக் கலந்துரையாடல்

சிட்டுக்குருவியின் அழிவுக்கான காரணங்களை பட்டியலிடல்.

உயிர்களின் இருப்பு நிலையாக இருப்பதற்கு மழை எவ்விதம் உதவுகிறது என்பது குறித்து கலந்துரையாடல்.

'உலகச்சிட்டுக்குருவிநாள்' எப்போது கொண்டாடப்படுகிறது? ஏன்? என்பது குறித்துக் கலந்துரையாடல்.

பறவைகளின் வாழ்வை கற்பனையாக மாணவர்களை கூறச் செய்தல்.

அழகிய பெரியவன், பிரமிள் படைப்புகளை இணையத்திலிருந்து தொகுத்து வகுப்பறையில் வாசிக்க செய்தல்.

மதிப்பீடு

'ஏதிலிக்குருவிகள் எங்கோ போயின'- இத்தொடரின் பொருள் யாது?

அழகிய பெரியவன் எப்படைப்புக்காக தமிழக அரசின் பரிசினை பெற்றார்?

பிரமிள் எழுதிய பிறநூல்கள் யாவை?

வலுவூட்டல்

மீண்டும் பாடலை பொருளோடு வாசித்து கடினமான பகுதிகளுக்கு விளக்கம் தருதல் .கடினமான சொற்களுக்கு விளக்கம் தருதல். எளிய வினாக்கள் கேட்டல் .துணைக்கருவிகள் கொண்டு பாடப்பகுதியை விளக்குதல். கற்றல் அடைவை சோதித்தறிதல்.

தொடர் பணி

சிட்டுக்குருவிகளின் அழிவுக்கான காரணங்களை ஆராய்ந்து கட்டுரையாக்குக.

'பறவைகளின் இருப்புக்கு மழையே காரணம்' இத்தொடர் குறித்து வகுப்பறையில் கலந்துரையாடுக.


வியாழன், 22 ஜூன், 2023

பன்னிரண்டாம் வகுப்பு பாட குறிப்பு மூன்றாவது வாரம்

 நாள்: 26.6.23-30.6.23

வகுப்பு: பன்னிரண்டாம் வகுப்பு 

பாடம்: தமிழ் 

தலைப்பு: பிறகொருநாள் கோடை, நெடுநல் வாடை

கற்றல் நோக்கங்கள்

இயற்கை நிகழ்வினால் மனிதர் பெறும் உள்ளத்து நெகழ்ச்சியை உணர்ந்து இயற்கையை விரும்புதல்

பழந்தமிழர் திணை வாழ்வை சங்கப் புலவர்கள் கவிதையாக்கிய நயத்தை உணர்தல்

கற்றல் விளைவுகள்

மாறுபட்ட இரண்டு இயற்கை நிகழ்வுகள் இணைகிற போது வெளிப்படும் அழகை சுவைத்தல்.

 புதுக்கவிதைகளைச் சுவைக்கக் கற்றல்.

 நெடுநல்வாடை காட்டும் வாழ்க்கை நிகழ்வையும்,இயற்கையோடு இணைந்த பண்பாட்டையும் அறிந்து கொள்ளுதல்.

ஆர்வமூட்டுதல்

மழை நாளில் உனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கூறவும்

பத்துப்பாட்டு நூல்களின் பெயர்களைத் தொகுத்து கூறவும்

துணைக் கருவிகள்

படங்கள் விளக்கப்படங்கள் மடிக்கணினி

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

 ஆசிரியர் செயல்பாடு

மழை பெய்யும் போது நிகழும் இயற்கை நிகழ்வுகள் குறித்துக் கலந்துரையாடுதல்.

 மழை நின்ற பிறகு ஏற்படும் மாற்றங்கள் குறித்துக் கலந்துரையாடுதல்.

 கவிதையைப் பொருளோடு வாசித்தல்.

 அய்யப்ப மாதவன் பற்றிக் கூறுதல்.

 நெடுநல்வாடை நூல் பற்றிக் கூறுதல் பத்துப்பாட்டு நூல்களை வரிசைப்படுத்தி கூறுதல் .

கார்காலத்தில் பெய்த மழையினால் விலங்குகளும் கோவலர்களும் தங்களை காத்துக் கொண்ட நிகழ்வை காணொளி மூலம் விளக்குதல் .

பாடலைப் பொருளோடு படித்தல்.

 கடினச் சொற்களுக்குப்பொருள் கூறுதல் பொருளைத் தொகுத்துக் கூறுதல்

மாணவர் செயல்பாடு 

மழை பற்றிய நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடுதல்.

 கவிதையை வாசித்தல் .

மழை பற்றிய கவிதைகளைக் கூறுதல்.

 பத்துப்பாட்டு நூல்களைப் பட்டியலிடல்.

 நெடுநல்வாடைப் பாடலை சீர் பிரித்துப் படித்தல்.

 பொருளைத் தொகுத்து கூறுதல்.

 கனமழைக்குப் பிறகான அனுபவங்களை பகிர்தல்.

மதிப்பீடு 

நகரம் பட்டைதீட்டிய வெள்ளை வைரமாகிறது எப்போது?

அய்யப்ப மாதவன் எழுதியுள்ள பிற நூல்கள் யாவை?

வாடைக்காலத்தில் கோவலர்கள் எவ்வாறு தம் பாதுகாப்பை தேடினர்?

வலுவூட்டல்

கடினமான பாடப்பகுதிகளை மீண்டும் கற்பித்தல் .

எளிய வினாக்கள் கேட்டல்.

 புரியாத பகுதிகளை துணைக்கருவிகளின் மூலம் விளக்குதல்.

 அறிதல் திறனை மீண்டும் சோதித்தறிதல்

தொடர் பணி

மழை பற்றிய கவிதைகளைத் தொகுத்து கையேடு தயாரிக்கவும் மழைக் காலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது குறித்து வகுப்பறையில் கலந்துரையாடு.


இராம்முருகன்.

தமிழ் கற்க,கற்பிக்க கீழ்க்கண்ட இணைப்புகளைப் பாருங்கள்.


இலக்கணக்காணொளிகளுக்கு


'தமிழ்நதி' YouTube channel 


https://youtube.com/@Tamilnathi


நறும்பூந்தமிழ் முகநூல் பக்கம்


https://www.facebook.com/profile.php?id=100087289894319&mibextid=ZbWKwL


நறும்பூந்தமிழ் Telegram group


https://t.me/+k479QbSqxo1YjZl

சனி, 17 ஜூன், 2023

பதினோராம் வகுப்பு பாடக்குறிப்பு

 நாள் : 19-06-23   -   23-06-23

வகுப்பு: பதினோராம் வகுப்பு 

பாடம்: தமிழ் 

தலைப்பு: ஆறாம் திணை

மொழிமுதல்,மொழியிறுதிஎழுத்துகள்

கற்பித்தல் நோக்கங்கள் 

புலம்பெயர் வாழ்க்கைச் சூழல்களால் தமிழ்மொழி உலகெங்கும் பரவியுள்ளதைத் தெரிந்து கொள்ளுதல்.

 மொழி முதல் இறுதி எழுத்துகள் எவை என்பதை அறிந்து பிறமொழிக் கலப்பின்றி பேசவும் எழுதவும் செய்தல்.

கற்றல் விளைவுகள்

புலம்பெயர்ந்த மக்கள் மொழி மீதும் வாசிப்பின் மீதும் கொண்டுள்ள பற்றை மாணவன் அறிந்து கொள்கிறான்.

புலம் பெயர்ந்த மக்களின் வாழ்க்கை நிலையை அறிந்து கொள்கிறான்.

மொழியின் முதலில் இடம் பெறவேண்டிய எழுத்தினையும் இறுதியில் இடம்பெற வேண்டிய எழுத்தினையும் அறிந்து கொண்டு மொழியை கையாளும் திறம்பெறுகிறான்.

சொற்களை உணர்த்தும் புணர்ச்சி வகைகள் குறித்த அடிப்படைச் செய்திகளை அறிகிறான்..

துணைக்கருவிகள்

படங்கள் விளக்கப்படங்கள் மடிக்கணினி அ. முத்துலிங்கத்தின் நேர்காணல் காணொலி.

ஆர்வமூட்டுதல்

புலம்பெயர்ந்த மக்கள் குறித்து நீ அறிவன யாவை? 

ஈழத் தமிழர்கள் குறித்து உனக்குத் தெரிந்த செய்திகளைக் கூறவும்.

சொல்லின் இறுதியில் வல்லின மெய் எழுத்துக்கள் இடம்பெற்றிருக்குமா? 

மேற்கண்ட வினாக்கள் மூலம் மாணவனின் ஆர்வத்தைத் தூண்டுதல்.

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடு

ஈழத் தமிழர்கள் அகதிகளாய் பிற நாடுகளில் தஞ்சம் புகுவதைக் காணொளிகள் மூலம் காட்டல்.

பிற நாடுகளில் குடியேறும் ஈழத் தமிழர்களின் நிலையை பாடத்தின் மூலம் விளக்குதல்.

அ முத்துலிங்கம் அவர்களின் அனுபவங்களை கோர்வையாகக் கூறுதல்

தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளை பட்டியலிடல்.

புலம்பெயர்ந்த மக்கள் தமிழ் மொழியை உலக அரங்கில் நிலை நாட்டியதை விளக்குதல்.

மொழி முதல் இறுதி எழுத்துக்களை மாணவன் உணரும்படி சான்றுகள் மூலம் விளக்குதல்.

உயிரீறு,மெய்யீறு, உயிர்முதல் ,மெய்ம் முதல் போன்றவற்றை படங்கள் காட்டி விளக்குதல்.

எழுத்துகளின் அடிப்படையிலான புணர்ச்சியையும் சொற்களின் அடிப்படையிலான புணர்ச்சியையும் உரிய சான்றுகளுடன் விளக்குதல். 

குற்றியலுகரம் பற்றியும் குற்றியலுகரவீற்று புணர்ச்சி குறித்தும் விளக்குதல். 

மாணவர் செயல்பாடு

தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளின் பட்டியலைத் தொகுத்துக் கூறுதல்.

ஈழத்தில் தமிழர்கள் புலம்பெயர்வதற்கான காரணத்தை கலந்துரையாடுதல்.

புலம்பெயர் மக்கள் படைத்த இலக்கியங்களை இணைய மூலம் கண்டறிதல்.

மொழி முதல் எழுத்துக்களில் தொடங்கும் சொற்களைக் கரும்பலகையில் எழுதுதல்.

மொழி இறுதி எழுத்துகள் இடம்பெறக்க்கூடிய சொற்களைக் கூறுதல். 

பூணர்ச்சி வகைக்கேற்ப உரிய சொற்களை அமைத்து புணர்த்திக் காட்டுதல்.

மதிப்பீடு

தமிழர் பாரம்பரிய நாள் அயல்நாடுகளில்  எப்போது கொண்டாடப்படுகிறது?

ஆறாம் திணையென கட்டுரையாசிரியர் சுட்டுவது எதனை? 

மொழி முதல் எழுத்துக்கள் எத்தனை?

மொழி இறுதி எழுத்துக்கள் எத்தனை?

சொற்களின் அடிப்படையில் புணர்ச்சி எவ்விதம் அமையும்?

வலுவூட்டல்

பாடப்பகுதிகளை மீண்டும் ஒருமுறை நினைவூட்டல்.

கடினமான பகுதிகளை மீண்டும் கற்பித்தல்.

எளிய வினாக்கள் கேட்டல்.

பல்வேறு சான்றுகள் கூறிக் கருத்துகளை வலியுறுத்தல். 

தொடர் பணி

நாளிதழ்களில் வெளியாகும் புலம்பெயர் மக்கள் பற்றிய செய்திகளை திரட்டி படத்தொகுப்பாக்குக.

உங்கள் வகுப்பறையில் உள்ள மாணவர்களின் பெயர்களில் மொழி முதல் எழுத்துகளாகவும் மொழி இறுதி எழுத்துகளாகவும் அமைந்த பெயர்களை நீங்கள் கற்ற இலக்கணப் பகுதியுடன் ஒப்பிடுக.

தமிழ் கற்க,கற்பிக்க கீழ்க்கண்ட இணைப்புகளைப் பாருங்கள்.

இலக்கணக்காணொளிகளுக்கு

'தமிழ்நதி' YouTube channel 

https://youtube.com/@Tamilnathi

நறும்பூந்தமிழ் முகநூல் பக்கம்

https://www.facebook.com/profile.php?id=100087289894319&mibextid=ZbWKwL

நறும்பூந்தமிழ் Telegram group

https://t.me/+k479QbS

bqxo1YjZl



இராம்முருகன்

அரசூர் 

வியாழன், 15 ஜூன், 2023

பபன்னிரண்டாம் வகுப்பு பாடக் குறிப்பு

 நாள்:  19.6.23.  -   23-6-23

 வகுப்பு : பன்னிரண்டாம் வகுப்பு 

பாடம் : தமிழ் 

தலைப்பு 

              தன்னேர் இலாத தமிழ் 

              தம்பி நெல்லையப்பருக்கு

              தமிழாய் எழுதுவோம் 

கற்றல் நோக்கம்

மொழியின் பெருமை அறிதல்                கடித இலக்கியம் குறித்து அறிதல் மொழியைப் பிழையின்றிப் பயன்படுத்த அறிதல்.

கற்றல் விளைவுகள்

தண்டியலங்காரம் நூல் குறித்து அறிகிறான்

கடித இலக்கியத்தில் தமிழ்நாட்டையும் தமிழையும் குறித்து பாரதி எழுதிய கருத்துகளை அறிகிறான்

தமிழைப் பிழையின்றி எழுதுவதற்குரிய நுட்பங்களை உணருகிறான் .

துணைக்கருவிகள்

மடிக்கணினி, படங்கள், தண்டியலங்கார நூல், கடிதங்களின் மாதிரிகள்.

ஆர்வமூட்டுதல்

உனக்குத் தெரிந்த இலக்கண நூல்கள் சிலவற்றின் பெயர்களை கூறு 

நீ யாருக்கேனும் கடிதம் எழுதியதுண்டா?

 மயங்கொலி எழுத்துக்கள் எவை? இவற்றை பயன்படுத்தும்போது உனக்குப் பிழைகள்  நேர்கிறதா? 

கற்பித்தல் செயல்பாடுகள் 

ஆசிரியர் செயல்பாடு 

தண்டியலங்காரம் நூல் குறித்துக் கூறுதல் அணியிலக்கணம் கூறும் நூல்களைக்கூறுதல் 

பாடலை இராகத்தோடு பாடிக் காட்டுதல் அருஞ்சொற்களுக்கு விளக்கம் தருதல்.

 பாடலில் பயின்று வரும் அணியை சுட்டல்

 அணி பாடலுக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பதை விளக்குதல். 

கடித இலக்கியம் குறித்து விளக்குதல்.

 பாரதியாரின் கடிதத்தை வாசித்துக்காட்டுதல்

 கடித இலக்கியத்தில் சிறப்பு பெற்ற அறிஞர்கள் சிலரைச் சுட்டிக்காட்டுதல்.

 கடிதத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் தமிழ் மொழியைக் குறித்த செய்திகளை விளக்குதல். 

எழுத்துப் பிழை. சொற்பிழை சொற்பொருட்பிழை போன்றவற்றை உரிய சான்றுகளுடன் விளக்குதல்.

 மயங்கொலி எழுத்துகளால் ஏற்படக்கூடிய பிழைகளை விளக்குதல்

 தொகைச் சொற்களில் ஏற்படக்கூடிய பிழைகளை விளக்குதல்.

 தமிழில் ஏற்படக்கூடிய பொதுவான பிழைகளைச் சுட்டிக் காட்டுதல்.

மாணவர் செயல்பாடு

பாடலை பொருளோடு வாசித்தல் பாடலில் இடம்பெற்றுள்ள அணி விளக்கம் கூறுதல் இலக்கண நூல்களின் பெயர்களைப் பட்டியலிடல்.

கடித வகைகள் குறித்து கூறுதல் கடித இலக்கியத்தில் சிறந்தோரின் பெயர்களைப் பட்டியலிடல் கடிதங்களின் மாதிரிகளை சேகரித்தல்

மயங்கொலி எழுத்துக்களை ஒலித்துக் காட்டுதல் 

பிழைநேருமிடங்களை கண்டறிதல்.

 கொடுக்கப்பட்ட பத்தியில் உள்ள பிழைகளின் வகைகளைச் சுட்டிக்காட்டி அவற்றை சரி செய்யும் விதத்தைக்கூறுதல். 

வலுவூட்டல்

பாடப் பகுதியை மீண்டும் கற்பித்தல

எளிய வினாக்கள் கேட்டல்

கடினமான பகுதியில் மீண்டும் விளக்கம் தருதல் துணைக்கருவிகளின் துணையோடு கற்பித்தல்.

எளிய வினாக்கள் கேட்டு கற்றலை உறுதி செய்தல். 

மதிப்பீடு

வேற்றுமை அணி விளக்குக.

பாரதியாரின் சமூகப்பற்று, மொழிப்பற்று குறித்துக்கூறுக. 

இயக்குனர் -இயக்குநர் இது இரண்டு சொற்களில் எது சரியானது காரணம் கூறு.

மயங்கொலி எழுத்துக்களால் ஏற்படும் பிழைகளை எவ்வாறு தீர்ப்பாய்.

தொடர்பணி

வேற்றுமை அணி பயின்று வரும் ஐந்து திருக்குறள்களைத்தொகுத்து எழுதி வரவும்.

தமிழறிஞர் மு வரதராசனாரின் கடிதத்தைத்தொகுத்தெழுதி வகுப்பறையில் வாசிக்கவும். 

தமிழில் பொதுவான பிழைகள் நேரும் இடங்களை பட்டியலிட்டு அதற்கான தீர்வுகளை மாணவர்களுடன் கலந்துரையாடுக.



செவ்வாய், 6 ஜூன், 2023

அன்றி இன்றி வேறுபாடு

 அன்றி/இன்றி பற்றியறிவோம்

**************************************

அன்றியும்‌ என்பது அல்லாமலும்‌ எனப்‌பொருள்படும்‌. 

இன்றியும்‌ - இல்லாமலும்‌ என்றாகும்‌. 


அவர்‌ நல்லவராக மட்டுமின்றி, வல்லவராகவும்‌ இருக்கிறார்‌ என்பது தவறு. நல்லவராக மட்டுமன்றி வல்லவராகவும்‌ இருப்பதே நல்லது.


இவ்வாறு 'அன்றி' என வரவேண்டிய இடங்களில்‌ *இன்றி' என எழுதும்‌ பழக்கம்‌ தவறு. இது அடிக்கடி நாளிதழ்களில்‌ காணப்படுகிறது.


 சட்டங்களை வகுப்பது மட்டுமின்றி அவற்றை நடைமுறைப்படுத்துவதும்‌ வேண்டும்‌. இங்கு இன்றி என்பது தவறு. தமிழின்‌ பெருமையை உணராமை மட்டுமின்றி, அதை அழுத்தப்பார்ப்பது இந்திய ஒருமைக்குக்‌ கேடு தரும்‌. 


 இவ்வாறு 'இன்றி' போடுவது தவறு. வகுப்பது மட்டுமன்றி -உணராதது மட்டுமன்றி - என இதைத்‌ திருத்த வேண்டும்‌. உப்பின்றிக்‌ குழம்பு வைக்கலாமா? உணவின்றியும்‌ போகலாம்‌; உடையின்றிப்‌போகமுடியுமா? 


மெட்ரிக்குப்‌பள்ளிகளில்‌ தமிழ்மொழிப்‌பாடம்‌ அறவே இன்றிப்‌போனது. இதற்கு ஆள்பவர்‌ உணர்வின்றிப்‌போனதே காரணம்‌. 


அன்றி - அல்லாமல்‌. இன்றி - இல்லாமல்‌. இன்றி - இல்லாது போய்விடுவதை உணர்த்தும்‌.


 கருத்தோடு கவனித்துப்‌படித்தீர்களானால்‌, நாளேடுகளில்‌ இப்பிழை அடிக்கடி காணப்படும்‌. அதை நீக்குவதன்றியும்‌ செவ்விய முறையில்‌ மேன்மேலும்‌ எழுத வழிகாட்டுவதும்‌ நமது கடமையாகும்‌. 


நன்றி 🙏

தமிழண்ணல்

நன்னூல் -புணரியல் பகுதி-2

 நன்னூல்- புணரியல்(பகுதி-2)


வேற்றுமைப்புணர்ச்சி, அல்வழிப்புணர்ச்சி 


முதற்பதிவில் எழுத்துகள், சொற்கள் அடிப்படையில் புணர்ச்சி வடிவத்தை பார்த்தோம்.


இப்பதிவில் புணர்ந்தபின் அப்புணர்ச்சியால் நிகழும் தொடர்மாற்றத்தைக்காண்போம்.


வேற்றுமைப்புணர்ச்சி

இரண்டு சொற்கள் இணையும்போது தொடர்கள் வேற்றுமைப்பொருளை  தருகின்றதா? அல்லது அல்வழிப்புணர்ச்சிப்பொருளை அதாவது வேற்றுமையல்லாத பொருளைத்தருகின்றதா? என்பதைப்பொறுத்து சொற்களின் புணருந்தன்மையில் மாறுபாடு நிகழக்கூடும்.


வேற்றுமை உருபுகள் ஐ ஆல் கு இன் அது கண் என ஆறு வகைப்படும்.

இரண்டு சொற்கள் புணரும் போது இவ்வேற்றுமையுருபுகள் மறைந்தோ வெளிப்பட்டோ நிற்கலாம்.இதனை வேற்றுமைப்புணர்ச்சி என்கிறோம்.


வேற்றுமை உருபுகள் மறைந்து நிற்கும் நிலையை ' வேற்றுமைத்தொகை'என்றும், வேற்றுமை உருபுகள் வெளிப்பட்டு நிற்கும் நிலையை 'வேற்றுமைவிரி' என்றும் குறிப்பிடவேண்டும்.


சான்று

மரம்வளர்த்தான்

கல்லெறிந்தான்

வளவன்மகன்

மலைவீழருவி

குமரன்வீடு

மலைநெல் 


இந்த ஆறுதொடர்களில் வேற்றுமை உருபுகள் மறைந்து தொகைநிலையில் உள்ளன.


மரத்தைவளர்த்தான்(ஐ)

கல்லாலெறிந்தான்(ஆல்)

வளவனுக்குமகன்(கு)

மலையின் வீழருவி(இன்)

குமரனதுவீடு(அது)

மலையின்கண்நெல்(கண்)


இந்த ஆறு தொடர்களில் உருபுகள் வெளிப்பட்டு நிற்கின்றது இதனை வேற்றுமை விரி எனல் வேண்டும்.


இவ்வாறு வேற்றுமை உருபுகள் மறைந்தோ வெளிப்பட்டோ புணரும்நிலையை வேற்றுமைப்புணர்ச்சி என்கிறோம். 


சொற்களைப்புணர்த்தியபின் அந்தத்தொடர் எத்தகைய புணர்ச்சியைப்பெற்றுள்ளது என்பதைக் கண்டறியும் திறன்பெற்றால் மட்டுமே சரியாகப்பிழையின்றிப்புணர்த்தமுடியும்.


தொடரும்

நன்னூல் -புணரியல்

 நன்னூல் -புணரியல்

பகுதி-1

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


மெய்உயிர் முதல்ஈறாம் இருபதங்களும்

தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமை

பொருளில் பொருந்துழி நிலைவரு மொழிகள்

இயல்பொடு விகாரத்து இயைவது புணர்ப்பே.(நன்:151)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்நூற்பாவில் நான்கு செய்திகள் அடங்கியுள்ளன.

     1. எழுத்துகள் அடிப்படையில் புணர்ச்சி

     2. சொற்கள் அடிப்படையில் புணர்ச்சி

     3. அல்வழிப்புணர்ச்சி வேற்றுமைப்புணர்ச்சி

    4. இயல்புப்புணர்ச்சி , விகாரப்புணர்ச்சி

ஒவ்வொன்றையும் விளக்கமாகக்காண்போம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நிலைமொழியீறும் வருமொழிமுதலும் இணைந்து புதியசொல்வடிவத்தைத்தருவதே புணர்ச்சி ஆகும்.


       வாழை+பழம் - வாழைப்பழம்

                      வாழை-நிலைமொழி

                         பழம் -வருமொழி


இரண்டு சொற்கள் இணையும்போது நிலைமொழியின் இறுதியெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.


நிலைமொழி

~~~~~~~~~~

நிலைமொழியின் இறுதியெழுத்து உயிரீறாகவும் மெய்யீறாகவும் அமையும்.


சான்று 


வாழை- உயிரீறு (ழ்+ஐ)

பொன்- மெய்யீறு


வருமொழி

~~~~~~~~~


வருமொழியின் முதலெழுத்து உயிர்முதலாகவும் மெய்ம்முதலாகவும் அமையும்.


வாழை+பழம்

பழம் வருமொழி - மெய்ம்முதலாகவுள்ளது.(ப்+அ)


கடல்+அலை

அலை- வருமொழி இது உயிர்முதலாகவுள்ளது.


எழுத்துகளின் அடிப்படையில் புணர்ச்சி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நிலைமொழி+வருமொழி 


                உயிர்+உயிர்( கலை+அழகு)

                உயிர்+மெய்(வாழை+பழம்)

                மெய்+மெய்(பொன்+குடம்)

                மெய்+உயிர் (கடல்+அலை)


என்னும் நான்கு வகையில் வரும்.


சொற்கள் அடிப்படையில் புணர்ச்சி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பெயர்+பெயர் (நாய்+கால்)

பெயர்+வினை(குமரன்+படித்தார்)

வினை+வினை(படித்து+பார்த்தார்)

வினை+பெயர் (பறந்தன+பறவைகள்)


பெயர்ச்சொல் வினைச்சொல் முதலிய இரண்டின் அடிப்படையில் தம்முன்தாமும்,தம்முன்பிறிதுமாக மேற்கண்ட நான்கு வடிவங்களில் இணையலாம்.


தொடரும்


இரா.முருகன்

முதுகலைத்தமிழாசிரியர்

அரசூர்

திங்கள், 5 ஜூன், 2023

ஜூன் முதல் வாரம் பதினோராம் வகுப்பு பாடக்குறிப்பு

 நாள்:12.6.23-16.6.23

பாடம்: தமிழ்

தலைப்பு:இயல்1

கவிதைப்பேழை-

யுகத்தின் பாடல்

 நன்னூல் பாயிரம்

உரைநடை-                                                  பேச்சு மொழியும் கவிதைமொழியும் 

கற்றல் நோக்கங்கள்

மொழியின் இலக்கண இலக்கிய வளங்களையறிதல்

பேச்சு மொழிக்கும் கவிதை மொழிக்கும் உள்ள தனித்தன்மைகளைப்பல்வேறு படைப்பாளர்களின் கருத்துகளின் வழிப் புரிந்து கொள்ளுதல்.

நூலின் கண் பாயிரம் பெறும் இடத்தையும் அதன் இன்றியமையாமையையும் அறிதல்.

கற்றல் விளைவுகள்

தமிழ்மொழியின் சிறப்பையறிதல்

மொழி கடந்து வந்த பாதையை அறிதல்.

பொதுப்பாயிரம் ,சிறப்புப்பாயிரம் தற்காலநூல்களில் அடைந்த மாற்றங்களை அறிகிறான்

பேச்சுமொழி கவிதைமொழி இரண்டுக்குமான வேறுபாடு அறிகிறான்

பெருங்கவிஞர்களின் கவிதைநடையை அறிகின்றனர். 

துணைக்கருவிகள்

படங்கள், மடிக்கணினி, விளக்க அட்டைகள், பெருங்கவிஞர்களின் கவிதைகள், நன்னூல்

ஆர்வமூட்டுதல்

களப்பிரர் ஆட்சியால்,வடமொழி ஆதிக்கத்தால் தமிழுக்கு ஏற்பட்ட இடர்களை, வரலாற்றைக் கூறுதல்.

யாழ்ப்பாணம் நூலக எரிப்பு குறித்துக்கூறுதல். 

புத்தகக்கட்டமைப்பில் முன்னுரை முகவுரை நுழையுமுன் பகுதிகளைச் சுட்டிக் காட்டுதல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடு

புதுக்கவிதை வடிவத்தை விளக்குதல்

தமிழ்மொழியின் சிறப்பைக்கூறுதல்.

தமிழுக்கு ஏற்பட்ட இடர்களைக்கூறுதல்.

பிறமொழிக்கலப்பை பற்றி உரையாடல்.

மணிப்பிரவாள நடையில் தமிழில் வடமொழி கலந்ததையும் தனித்தமிழ் இயக்கத்தையும் கூறுதல்.

மடிக்கணினியில் யாழ்நூலகம் குறித்த செய்திகளைக்காட்டுதல்.

தமிழ் எழுச்சிபெற செய்யவேண்டியவற்றைப்பட்டியலிடல்.

பேச்சுமொழி எழுத்துமொழி வேறுபாடு கூறுதல்

பேச்சுமொழிக்கும் கவிதைமொழிக்குமான தொடர்பை விளக்குதல் .

புகழ்பெற்ற கவிஞர்களின் கவிதைகளை மடிக்கணினியில் காட்டி அதில் பேச்சுமொழியின்தாக்கம், குறியீடுகள் குறித்துக்கலந்துரையாடுதல்.

தொல்காப்பியம்,நன்னூல் முதலிய நூல்களில் இடம்பெறும் பாயிரம் பற்றி விளக்குதல்.

பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் பற்றி விளக்குதல்.இதன் பகுதிகளை ஒவ்வொன்றாக விளக்குதல்

பாயிரம் தற்காலநூல்களில் இடம்பெறும் வடிவத்தை நூல்களைக் காட்டி விளக்குதல்.

மாணவர் செயல்பாடு

தமிழ் வளர்ச்சிபெற செய்யவேண்டியவற்றைப்பட்டியலிடல்

மொழி வளர்ச்சி பற்றிய புதுக்கவிதை கூறுதல்

வால்ட்விட்மன்,மல்லார்மே கவிதைகளை இணையத்தில் தேடி வாசித்தல்

பாயிரத்தின் கூறுகளைப்பட்டியலிடல்

தற்கால நூல்களில் பாயிரம் இடம்பெறும் நிலைகுறித்து விவாதித்தல்.

பாயிரத்தின் தேவை குறித்து உரையாடல்

வலுவூட்டல்

பாடப்பகுதியில் எளிய வினாக்கள் கேட்டல்

சொற்பொருள் கேட்டல்

புரியாத பகுதிகளை மீண்டும் கற்பித்தல்

எளிய வினாக்கள் கேட்டு கற்றலை உறுதிப்படுத்தல்

மதிப்பீடு

இனம் மொழி குறித்த இரசூல்கம்சதோவ் பார்வையைக்குறிப்பிடுக.

பாயிரம் பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?

பேச்சு மொழி எழுத்து மொழியை காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?

தொடர்பணி

காலத்தை வென்ற மொழி என்னும் தலைப்பில் கவிதை படைக்க.

கவிதை குறித்து தமிழ் கவிஞர்களின் கருத்துக்களைத் திரட்டி ஒப்படைவு எழுதுக.

எல்லா வகை நூல்களுக்கும் அழகு தருவதாக வைக்கப்படுவது அணிந்துரை எடுத்துக்காட்டுகளுடன் வகுப்பறையில் விவாதிக்க.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


இலக்கணக்காணொளிகளுக்கு

https://youtube.com/@Tamilnathi

நறும்பூந்தமிழ் முகநூல் பக்கம்

https://www.facebook.com/profile.php?id=100087289894319&mibextid=ZbWKwL

நறும்பூந்தமிழ் Telegram group

https://t.me/+k479QbSbqxo1YjZl

நன்றி 🙏

இரா.முருகன்

முதுகலையாசிரியர், அரசூர் 






ஞாயிறு, 4 ஜூன், 2023

பன்னிரண்டாம் வகுப்பு -பாடக்குறிப்பு(7.06.23-9.6.23)

 நாள்: (12.6-23-16-6.23)

வகுப்பு : பன்னிரண்டாம் வகுப்பு 

பாடம்: தமிழ்

தலைப்பு: இயல் 1 

                    கவிதைப்பேழை-  இளந்தமிழே

                    உரைநடை: தமிழ்மொழியின் நடைஅழகியல்

கற்றல் நோக்கங்கள்

     1. மொழியின் சிறப்பையறிதல் 

     2. மொழியின் பழஞ்சிறப்பு அறிதல் 

    3. தமிழ்வளர்த்த சான்றோர் பற்றியறிதல்.

    4.தமிழில் புதுமைகளைப்புகுத்த விழைதல் 

    5. இலக்கியநடை பற்றியறிதல்.

     6. சங்க இலக்கிய நடையியலையறிதல்.

      7.கலையும்பொருளும் இரண்டறக்கலந்தது என அறிதல்.

கற்றல்விளைவுகள்

தமிழின் சிறப்பை அறிகின்றனர்

பாரி முதலான வள்ளல்களை அறிகின்றனர்.

சிற்பி பாலசுப்பிரமணியம் பற்றியும் அவர்தம் இலக்கியப்பணி பற்றியுமறிதல்

அழகியல் என்பது மொழிசார்கலை என உணர்கின்றனர்

கலைமுழுமை,நடையியல்,ஒலிக்கோலங்கள் போன்றவற்றை அறிகின்றனர்

தொகைமொழிகள் தொடரியல்போக்குகள் பற்றியறிதல்.

துணைக்கருவிகள் 

படங்கள், மடிக்கணினி விளக்க அட்டைகள் 

முன்னறிவு

தமிழ்வளர்த்த சான்றோர்களின் பெயர்களைப்பட்டியலிடுதல்

கடையேழு வள்ளல்களின் பெயர்களைக்கூறச்செய்தல்.

முச்சங்கம் பற்றி வினவுதல்

ஆர்வமூட்டுதல்

  தாய்மொழிதான் நம் அடையாளம். இக்கருத்து குறித்துக்கலந்துரையாடல்.

கற்பித்தல் செயல்பாடுகள்

ஆசிரியர் செயல்பாடு 

இளந்தமிழே!

 உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த கவிதையாய் வடிக்க செந்தமிழே ஏற்றமொழியாகும்.

முச்சங்கத்தில் வீற்றிருந்து வள்ளல்களால் வளர்க்கப்பட்ட மொழி.

பழமைநலம் புதுக்குதற்கு தமிழாகிய குயிலே கூவு. 

கவிஞர் சிற்பியின் கவிதைநூல்கள் குறித்து விளக்குதல்.

இலக்கணக்குறிப்பு,பகுபத உறுப்பிலக்கணம், புணர்ச்சி விதிகள் முதலிய மொழிப்பயிற்சிகளை விளக்கமாகக் கற்பித்தல்.

தமிழ்மொழியின் நடை அழகியல்

நடையியல் விளக்கம் கூறுதல்

கவிதைநடையை விளக்குதல்

நடையியல் குறித்த தொல்காப்பியச்செய்திகளைக்கூறுதல்.

ஒலிக்கோலங்கள் பற்றி சான்றுகளுடன் விளக்குதல்.

சொற்புலம் ,தொடரியல்போக்குகள் போன்றவற்றை சங்க இலக்கியப்பாடல்களின் மூலம் விளக்குதல்.

மாணவர் செயல்பாடு

தமிழைவளர்த்த வள்ளல்களின் பெயரைப்பட்டியலிடல்

முச்சங்கங்கள் குறித்து உரையாடுதல்.

தமிழ்மொழியின் பழமைநலத்தைப்- புதுக்குவதற்கான கருத்துகள் கூறுதல்

மொழிவளர்ச்சியில் மாணவர்களின் பங்கு குறித்து உரையாடுதல்.

கவிதையின் நடை அழகியலை அறிதல்.

ஒலிக்கோலங்கள் நிறைந்த புதுக்கவிதைகள் கூறுதல்

மறுதலைத்தொடர்கள் அமைந்த சங்கப்பாடல்களைத்தொகுத்தல்.

உவமை, உருவகம், உள்ளுறை, இறைச்சி போன்றவற்றைச்சுட்டிக்காட்டல்.

வலுவூட்டல்

பாடலின் பொருளை மீண்டும் கூறுதல்.

கடினச்சொற்களுக்குப்பொருள் கூறுதல்

எளிய வினாக்கள் கேட்டல்.

ஒலிக்கோலங்கள், சொற்புலம், தொடரியல்போக்குகள் குறித்து உரையாடுதல்.வினாக்கள் கேட்டல்.

மதிப்பீடு

1. உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்த தமிழே ஏற்றமொழி விளக்குக.

2. கவிஞர் எவற்றை வியந்துபாட வேண்டும் என குறிப்பிடுகிறார்?

3. 'பழமைநலம் புதுக்குதற்கு' - தொடரின் பொருள் தருக.

4.  மொழியியல் வழக்குகளைக்  கலையியல் வழக்குகளாக மாற்றுபவை எவை?

5. கவிதை மறுதலைத்தொடர்கள் -விளக்குக.

6. ஒலிக்கோலங்கள் விளக்குக

தொடர்பணி

'மொழிவளர்ச்சியில் எனது பங்கு' ஒருபக்க அளவில் கட்டுரை எழுதுக.

'தாய்மொழிக்கல்வி' குறித்த மேடைப் பேச்சுக்கான உரையை உருவாக்குக.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இலக்கணக்காணொளிகளுக்கு

https://youtube.com/@Tamilnathi

நறும்பூந்தமிழ் முகநூல் பக்கம்

https://www.facebook.com/profile.php?id=100087289894319&mibextid=ZbWKwL

நறும்பூந்தமிழ் Telegram group

https://t.me/+k479QbSbqxo1YjZl



நன்றி 🙏

இரா.முருகன்

முதுகலையாசிரியர், அரசூர் 



மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...