நன்னூல்- புணரியல்(பகுதி-2)
வேற்றுமைப்புணர்ச்சி, அல்வழிப்புணர்ச்சி
முதற்பதிவில் எழுத்துகள், சொற்கள் அடிப்படையில் புணர்ச்சி வடிவத்தை பார்த்தோம்.
இப்பதிவில் புணர்ந்தபின் அப்புணர்ச்சியால் நிகழும் தொடர்மாற்றத்தைக்காண்போம்.
வேற்றுமைப்புணர்ச்சி:
இரண்டு சொற்கள் இணையும்போது தொடர்கள் வேற்றுமைப்பொருளை தருகின்றதா? அல்லது அல்வழிப்புணர்ச்சிப்பொருளை அதாவது வேற்றுமையல்லாத பொருளைத்தருகின்றதா? என்பதைப்பொறுத்து சொற்களின் புணருந்தன்மையில் மாறுபாடு நிகழக்கூடும்.
வேற்றுமை உருபுகள் ஐ ஆல் கு இன் அது கண் என ஆறு வகைப்படும்.
இரண்டு சொற்கள் புணரும் போது இவ்வேற்றுமையுருபுகள் மறைந்தோ வெளிப்பட்டோ நிற்கலாம்.இதனை வேற்றுமைப்புணர்ச்சி என்கிறோம்.
வேற்றுமை உருபுகள் மறைந்து நிற்கும் நிலையை ' வேற்றுமைத்தொகை'என்றும், வேற்றுமை உருபுகள் வெளிப்பட்டு நிற்கும் நிலையை 'வேற்றுமைவிரி' என்றும் குறிப்பிடவேண்டும்.
சான்று
மரம்வளர்த்தான்
கல்லெறிந்தான்
வளவன்மகன்
மலைவீழருவி
குமரன்வீடு
மலைநெல்
இந்த ஆறுதொடர்களில் வேற்றுமை உருபுகள் மறைந்து தொகைநிலையில் உள்ளன.
மரத்தைவளர்த்தான்(ஐ)
கல்லாலெறிந்தான்(ஆல்)
வளவனுக்குமகன்(கு)
மலையின் வீழருவி(இன்)
குமரனதுவீடு(அது)
மலையின்கண்நெல்(கண்)
இந்த ஆறு தொடர்களில் உருபுகள் வெளிப்பட்டு நிற்கின்றது இதனை வேற்றுமை விரி எனல் வேண்டும்.
இவ்வாறு வேற்றுமை உருபுகள் மறைந்தோ வெளிப்பட்டோ புணரும்நிலையை வேற்றுமைப்புணர்ச்சி என்கிறோம்.
சொற்களைப்புணர்த்தியபின் அந்தத்தொடர் எத்தகைய புணர்ச்சியைப்பெற்றுள்ளது என்பதைக் கண்டறியும் திறன்பெற்றால் மட்டுமே சரியாகப்பிழையின்றிப்புணர்த்தமுடியும்.
தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக