வேற்றுமையில் வல்லினம் மிகுதலும் மிகாமையும்.
35. ஆறாம் வேற்றுமையின் பொருள் "கிழமை" என்பதாம். கிழமை = உரிமை, உடைமை.
இதன் உருபுகள் "அது", "ஆது", "அ" என்பன. இதில் "அது", "ஆது" ஆகியன ஒருமைக்கும், "அ" என்பது பன்மைக்கும் வரும். இம்மூன்றும் அஃறிணைக்கு உரியன. இதில் "ஆது", "அ" என்பன தற்போது பயன்பாட்டில் இல்லை. "உடைய" என்பது சொல்லுருபு.
மனித உறுப்புகளை தனித்தனியாகச்சுட்டும்போது, அவ்வுருப்புகள் அஃறிணையாகவே கருதப்படும். எடுத்துக்காட்டுகள்:
* எனது கை. ✓ சரி.
* எனாது கை. ✓ சரி.(தற்கால பயன்பாட்டில் இல்லை)
* என கைகள். ✓ சரி. என்+அ= என.
* 'பாம்பறியும் பாம்பின கால்'. பாம்பின என்பதில் "அ" விகுதி பன்மைக்கான, 6-ஆம் வேற்றுமையுருபு . கால்கள் எனப்பொருள்தரும். (தற்கால பயன்பாட்டில் இல்லை).
"உடைய" என்னுஞ்சொல்லுருபு இருதிணைக்கும் (உயர்திணை, அஃறிணை), இருமைக்கும் (ஒருமை, பன்மை) வரும்.
* என்கை. ✓சரி.
* என்கைகள். ✓சரி.
* என்மக்கள். ✓ சரி. இவைகள் "உடைய" என்னுஞ்சொல்லுருபு மறைந்துவரும் 6-ஆம் வேற்றுமைத்தொகைகள்.
* என்னுடைய புத்தகம். ✓சரி.
* என்னுடைய புத்தகங்கள். ✓சரி.
* என்னுடைய பெற்றோர். ✓சரி.
* என்னுடைய மக்கள். ✓ சரி. இவைகள் "உடைய" என்னுஞ்சொல்லுருபு வெளிப்பட்டுவரும் 6-ஆம் வேற்றுமைவிரிகள்.
"உடைய" என்ற சொல்லுருபு அஃறிணை இருமைக்குமட்டுமே உரியது என்றும்; உயர்திணைக்கானது அல்ல என்பதும் ஒருகொள்கை. இக்கருத்துக்கான தொல்காப்பியநூற்பா வருமாறு:-
"அது வென் வேற்றுமை
உயர்திணைத் தொகைவயின்
அதுவென் உருபுகெடக் குகரம் வேண்டும்". இதன்படி "அது" என்னும் உருபு வரக்கூடிய உயர்திணைத்தொகைநிலைத்-
தொடர்களுக்கெல்லாம் "கு" என்னும் உருபுதான் வரவேண்டும்.
* எனக்கு மனைவி. ✓ சரி.
* எனக்குக்கணவன். ✓ சரி.
* எனக்கு மக்கள். ✓ சரி.
இந்த கொள்கைக்கானக்காரணம் என்ன? " தமிழ்ப்பண்பாட்டில் மக்களுக்கு அஃறிணைப்பொருள்கள்தாம் உரிமையுடைய சொத்துக்களாக இருக்கமுடியுமே தவிர, உயர்திணை தேவர், மக்கள், நரகர் சொத்துகளாக இருக்கமுடியாது. சான்றாக பெற்றோர் மக்களிடையே இருப்பது உறவுதானேதவிர, சொத்துடைமை அன்று.
"கு" உருபைப்பயன்படுத்த விரும்பாவிட்டால், எந்த உருபையும் பயன்படுத்தாமல் 6-ஆம் வேற்றுமைத்தொகையாகவே குறிப்பிட்டுவிடலாம்.
* என்மனைவி. ✓ சரி.
* என்கணவன். ✓ சரி.
* என்மக்கள். ✓ சரி.
" தசரதரின் மகன் இராமன்", என்றெழுதுவதைக்காண்கிறோம். இலக்கணப்புலவோர் "இன்" என்பதை "சாரியை" என்பர். அப்படிச்சொல்ல வேண்டுவதில்லை. "இன்" என்பதை 6-ஆம் வேற்றுமையுருபாகவே கொள்ளலாம்", என்கிறார் அ.கி. பரந்தாமனார். இவர் கூறுவதையேற்றுக்கொண்டால் ஆறாம் வேற்றுமையுருபு என்னவென வரையறுக்கவேண்டும். ஒரு வேற்றுமைக்கானயுருபை இன்னோரு வேற்றுமைக்குரிய பொருளில் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கோடல்பொருளுக்கான 4-ஆம் வேற்றுமையுருபு 'கு'வை, 6-ஆம் வேற்றுமை உயர்திணைகளில் கிழமைப்பொருளில் பயன்படுத்துவதை தொல்காப்பியம் சுட்டுகிறது. எனவே, அ.கி. பரந்தாமனார் பரிந்துரையை உடனடியாக கடைப்பிடிப்பதற்கில்லை. "தசரதனுக்கு மகன் இராமன்" என்பதே சரி. அல்லது "தசரதன்மகன் இராமன்" என்பதும் சரி.
"கிழமை", தற்கிழமை, பிறிதின்கிழமையென இருவகைப்படும். ஒன்றின் பிரிக்கமுடியாத பாகமாக இருப்பது தற்கிழமை. சான்று: என்கை.
ஒன்றிலிருந்து பிரிந்து தனித்தும், உடைமையாகவும் இருப்பது பிறிதின்கிழமை. சான்று: என்புத்தகம்.
'புலியினதுகுட்டி அல்லது புலியினுடைய குட்டி' என்னும் தொடர், 6-ஆம் வேற்றுமை விரிநிலைத்தொடர். இதில் வல்லினம் மிகவில்லை என்பதைக்காண்க. இந்த விரிநிலைத்தொடரின், தொகைநிலைத்தொடர் 'புலிக்குட்டி' என்பதாம். இதில் ககரவொற்று(க்) மிக்கு வந்துள்ளது. எனவே, 6-ஆம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும். இங்கு நிலைமொழி அஃறிணையாக இருந்தால்மட்டுமே வல்லினம் மிகும் என்பதையும் கருத்தில்கொள்க. 'தேர்ச்சக்கரம்', 'வாழைத்தண்டு', 'நரிப்பல்' என்பன சில எடுத்துக்காட்டுகள்.
'ஐயனார்கோவில்', 'கண்ணகிசிலம்பு',
'எண்குணத்தான்தாள்', 'சமணர்பள்ளி' என்பன, "உடைய" என்ற சொல்லுருபு அல்லது "கு" என்னும் உடைமைப்பொருள்கொண்ட 6-ஆம் வேற்றுமை மறைந்துவந்த தொகைநிலைத்தொடர்களாகும். இவற்றின் நிலைமொழிகள் உயர்திணையாக இருப்பதைக்காண்க. எனவே, உயர்திணையை நிலைமொழியாகக்கொண்ட 6-ஆம் வேற்றுமைத்தொகைகளில் வல்லினம் மிகாது.
6-ஆம் வேற்றுமையில் உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை இல்லை.
6-ஆம் வேற்றுமை பெயர்ச்சொற்களைமட்டுமே ஏற்கும். வினைச்சொற்களை ஏற்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக