வேற்றுமையில் வல்லினம் மிகுதலும் மிகாமையும்.
36. ஏழாம் வேற்றுமையின் பொருள் "இடப்பொருள்". பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் ஆகிய ஆறும் இடமாகும். இதில் தற்கிழமை, பிறிதின்கிழமை என்ற பிரிவுகள் உண்டு.
1. பொருள் தற்கிழமை: மணியின்கண் ஓசை.
பொருள் பிறிதின்கிழமை: மரத்தின்கண் கிளி.
2. இடத்தற்கிழமை: வீட்டின்கண் அறை.
இடப்பிறிதின்கிழமை: வீட்டின்கண் காளை.
3. காலத்தற்கிழமை: நாளின்கண் நாழிகை.
காலப்பிறிதின்கிழமை: காரின்கண் நெல். (கார் = கார்காலம்).
4. சினைத்தற்கிழமை: கையின்கண் விரல்.
சினைப்பிறிதின்கிழமை: விரலின்கண் மோதிரம்.
5. பண்புத்தற்கிழமை: நிறத்தின்கண் அழகு.
பண்புப்பிறிதின்கிழமை: முதுமைகண் வறுமை.
6.தொழிற்தற்கிழமை: ஆட்டத்தின்கண் சிமிட்டல்.
தொழிற்பிறிதின்கிழமை: ஆட்டத்தின்கண் பாட்டு.
பொதுவாக, இடத்தில், இல், கண், கீழ், மேல் முதலான 7-ஆம் வேற்றுமை உருபுகள் எனச்சொல்லப்பட்டாலும், இடத்தைச்சுட்டும் பலவும் 7-ஆம் வேற்றுமை உருபுகள் ஆகும். அகம், புறம், உள்; இடை, கடை; தலை, முகம், வாய்; முன், பின்; கீழ், மேல்; திசை, வழி; பால், உழி ( இடம், பக்கம், அளவு), முதலானவும் 7-ஆம் வேற்றுமை உருபுகள்.
"இல்" என்ற வேற்றுமையுருபு ஐந்திலும் ஏழில் வந்தாலும் வேறுவேறு பொருளில் வருவதை நாம் நினைவில் பதித்தல்வேண்டும்.
7-ஆம் வேற்றுமை, பெயர்ச்சொற்கள் வினைச்சொற்கள் இரண்டினையும் ஏற்குமென்பதை நினைவிற்கொள்க.
'பாண்டியர்குடிப்பிறந்தார்' என்னுந்தொடர், 'பாண்டியர்குடியின்கண் பிறந்தார்' எனவிரியும். இந்த விரிநிலைத்தொடரில் "இன்" என்பது சாரியை; "கண்" என்பது 7-ஆம் வேற்றுமையுருபு. இதில் பகரவொற்று(ப்) மிகுந்ததைக்காண்க. எனவே, 7-ஆம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும். வேற்றுமைவிரியில் ஓற்று தோன்றவில்லை என்பதையும் காண்க. எனவே, 7-அம் வேற்றுமைவிரியில் வல்லினம் மிகாது.
"கூண்டுக்கிளி" என்னுந்தொடர், "கூண்டின்கண் வாழும் கிளி" எனவிரியும். இதில் "இன்" என்பது சாரியை; "கண்" ஏழன் உருபு; வாழும் என்பது பயன்சொல். ஆக இத்தொடர், 7-ஆம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகை எனப்படும். "பூந்தேன்", *மலைப்பாம்பு", "நீர்ப்பாம்பு" என்பன மேலுஞ்சில எடுத்துக்காட்டுகள். எனவே, 7- ஆம் வேற்றுமையுருபும் பயனும் உடன்தொக்கத்தொகையில் வல்லினம் மிகும்.
7-ஆம் வேற்றுமையுருபுகள் வாக்கியங்களில் அமையும்வகைக்கான எடுத்துக்காட்டுகள் வருமாறு:-
* கண் - "மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற".
* முன் - "கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று இரப்பும்ஓர் ஏஎர் உடைத்து ".
* மேல் - " மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்".
* கீழ் - "பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்".
* முகம் - "ஈன்றாள் முகத்தேயும் இன்னாதல் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி ".
* இல் -"சாப்பிடுகையில் விக்கல் வந்தது. தலையில் தட்டி அருந்த நீர்தந்தாள் அன்னை".
* உள் - "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்"
* வழி - கோன் எவ்வழி, குடி அவ்வழி.
* பால் - ஏதிலிபால் இரக்கங்கொள்.
* பின் - "ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்".
* புறம் - ஊரின்புறம் உள்ளது புறம்போக்குநிலம் எனப்பட்டது.
* தலை- "இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை".
* வாய் - "நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்".
* கடை - "அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையர் இல்".
* உழி - "அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி".
* கால் - "நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்".
* இடை - "உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு"..
* இடத்தில், பால் - "சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு".
* அகம் - "ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல்".
* திசை - " தென்திசை நோக்கியிருப்பன் எங்கள் தென்முகநம்பி".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக