ஞாயிறு, 30 ஜூலை, 2023

தொல்காப்பியம் உரைவிளக்கம்

 தொல்காப்பியம் -நூன்மரபு- எழுத்ததிகாரம் 

எழுத்துகளின் வகைகள், பெயர்கள்

முதலெழுத்துகள் விளக்கம் 

1. எழுத்தெனப் படுப

    அகரமுதல் னகர இறுவாய்

    முப்பஃ தென்ப; 

   சார்ந்துவரல் மரபின் மூன்றலங்கடையே

சொற்பொருள் 

எழுத்தெனப்படுப- எழுத்து எனப்படுவது

அகரமுதல் - அகரமுதல்

னகர இறுவாய் - னகரம்வரை

முப்பஃதென்ப - முப்பது ஆகும்

சார்ந்துவரல் - முதலெழுத்துகளைச்சார்ந்துவரும் 

மூன்று- சார்பெழுத்துகள்(குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம்) 

அலங்கடையே- இம்மூன்றைத்தவிர்த்து 

விளக்கம் 

   முதலெழுத்துகளைச்சார்ந்துவரும் மூன்று சார்பெழுத்துகளை நீக்கி,அகரமுதல் னகரவீறாக ( உயிர்-12 ,மெய்-18 ) முப்பது எழுத்துகள் முதலெழுத்துகள் எனப்படும். 

------------------------------------------------------------------

நூற்பா எண் -2

சார்பெழுத்துகள் விளக்கம் 

அவைதாம்,

குற்றிய லுகரம் குற்றிய லிகரம்

ஆய்தம் என்ற

முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன.

சொற்பொருள்

அவைதாம் - சார்ந்துவருமெனச்சொல்லப்பட்ட மூன்றும்

முப்பாற்புள்ளி- ஆய்தம்

எழுத்தோரன்ன- எழுத்து வகையுள் அடங்கும்.

விளக்கம்

'சார்ந்துவரல்' என முதனூற்பாவில் கூறப்பட்டனவற்றுக்கு விளக்கங்கூறுவது. 

குற்றியலுகரம் குற்றியலிகரம் மூன்றுபுள்ளி வடிவமாகிய ஆய்தமும் சார்பெழுத்துகளாம். 

இவையும்  எழுத்துவகையுள் அடங்கும்.

முதலெழுத்து -30

சார்பெழுத்து-3 

---------------------------------------------------------------------

நூற்பா எண் 3

எழுத்துகளின் ஒலியளவு


அவற்றுள்,

 அ இ உ எ ஒ என்னும் 

அப்பால் ஐந்தும் 

ஓரள பிசைக்கும் குற்றெழுத் தென்ப.

சொற்பொருள்

அவற்றுள் - முன்னர் கூறிய முதலெழுத்துகளுள் 

அ இ உ எ ஒ என்னும் - அ இ உ எ ஒ 

அப்பால் ஐந்தும் - அப்பகுதிகள் ஐந்தும்

ஓரளபிசைக்கும் - ஒருமாத்திரையளவில் ஒலிக்கும்

குற்றெழுத்தென்ப - குறிலெழுத்து என்பர்

விளக்கம்

முன்புகூறிய முதலெழுத்துக்களுள்    அ இ உ எ ஒ என்னும் ஐந்தெழுத்துகளும் ஒருமாத்திரையளவில் ஒலிக்கும் குறில் எழுத்துகளாகும். 

முதல் நூற்பாவில் முதலெழுத்துக்களையும், இரண்டாம் நூற்பாவில் சார்பெழுத்துகளையும் விளக்கிய தொல்காப்பியர், இந்நூற்பாவில் எழுத்துகள் ஒலிக்கக்கூடிய கால அளவைக் குறிப்பிடுகிறார்.

நூற்பா எண் 4

ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும்

அப்பால் ஏழும்

ஈரள பிசைக்கும் நெட்டெழுத் தென்ப.

விளக்கம்

ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் ஏழு நெடில்களும் முறையே, இரண்டுமாத்திரையளவாக ஒலிக்கும்.

(ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ- ஒலிக்குங்கால அளவு-இரண்டுமாத்திரைகள்) 

ஈரளபு-இரண்டுமாத்திரையளவு.

நூற்பா எண் 5

மூவள பிசைத்தல் ஓரெழுத் நின்றே.

விளக்கம்

ஓரெழுத்து தனித்துநின்று மூன்றுமாத்திரையளவாக ஒலிக்காது. அதாவது எழுத்துக்கு இரண்டுமாத்திரையளவே உச்ச அளவாகும்.

நூற்பா எண் 6 

நீட்டம் வேண்டின் அவ்வளபுடைய

கூட்டியெழூதல் என்மனார் புலவர்

சொற்பொருள்

நீட்டம் வேண்டின் - எழுத்துகளின் ஒலியளவை அதிகரிக்க வேண்டுமெனில்

அவ்வளபுடைய - நீட்டிக்க வேண்டிய அளவுடைய

கூட்டியெழூதல் - எழுத்துகளை இணைத்து எழுதவேண்டும்.

என்மனார் புலவர் -என்பர் புலவர்.

விளக்கம்

செய்யுளில் ஓசை,இசைக்காக எழுத்துகளின் ஒலியளவை அதிகரிக்க வேண்டுமெனில் நீட்டிக்க வேண்டிய அளவுடைய எழுத்துகளை இணைத்து எழுதவேண்டுமென்பர் இலக்கணமறிந்த புலவர்.

இதனை அளபெடை என்பர்

இரண்டு மாத்திரை உயரளவான நெடிலை மூன்று மாத்திரையாக ஒலிப்பதற்கு அதற்கு இனமான குறிலை இணைத்து எழுதவேண்டும்.

ஆஅ.    ஓஒ    சேஎ

ஓஒதல் வேண்டும்....(குறள் எண்: 

ஆஅதும் 


நூற்பா எண் :7


கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே


சொற்பொருள்


கண்ணிமை-கண்களை இமைக்கும் நேரம்

நொடி- விரல்நொடித்தல் (சொடுக்குதல்)

அவ்வே - அவையே

மாத்திரை - மாத்திரை அளவாகும்


நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே- இலக்கணத்தை நுண்மையாக அறிந்த சான்றோர்கள் கூறியபடி


விளக்கம்

ஒவ்வொருவகை எழுத்துக்கும் மாத்திரையளவைக்கூறிய தொல்காப்பியர்,இந்நூற்பாவில் மாத்திரையின் காலஅளவை விளக்குகிறார்.


கண்ணிமைத்தல் அல்லது கைசொடுக்குதல் இவற்றுக்குரிய கால அளவே மாத்திரையென்பது இலக்கணத்தையறிந்த சான்றோர்க்கண்டவழியாகும்.


கண்ணிமைத்தலும் ,கை சொடுக்குதலும் ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும் என்பதால், இயற்கையாக நல்ல உடல்நலத்துடன் கூடிய மனிதவுடலுறுப்புகளின் செயற்பாட்டையே இங்கே அளவாகக்குறிப்பிடுகிறார்.

நூற்பா எண் 8

ஔகார இறுவாய்ப்

பன்னீ ரெழுத்தும் உயிரென மொழிப.

ஔகார இறுவாய்- அகரம் முதலாகவும் ஔகாரம் ஈறாகவும்

பன்னீரெழுத்தும் - பன்னிரண்டு எழுத்தும்

உயிரென மொழிப - உயிரெழுத்து என்று கூறுவர். 

விளக்கம்

உயிரெழுத்துகளின் எண்ணிக்கை இத்தனையென இந்நூற்பாவில் விளக்குகிறார்.

அகரம் முதலாகவும் ஔகாரம் ஈறாகவுமுள்ள பன்னிரண்டு எழுத்துகளும் உயிரெழுத்துகளென புலவர் கூறுவர்.

அகரமுதலென முற்பகுதியில் கூறினார்.இங்கு ஔகார இறுவாய் என ஈற்றுப்பகுதியைக்கூறி விளக்குகிறார்.

உயிர் என்பதன் பொருள்

உயிர் கண்ணுக்குத்தெரியாத அருவம்.

மெய் தன்னளவில் இயக்கமின்றியும் கண்ணுக்குப்புலனாகும் வகையிலும் அமைந்தது. 

மெய்யெழுத்தினை தனித்து ஒலிக்கவியலாது. உயிருடன் இணைந்தே மெய்யானது ஒலிப்பினைப்பெறும்.அங்ஙனம் மெய்யோடு கூடி, உருவமிழந்து இயக்குஞ்சக்தியாக திகழ்வதால் இதனை உயிரென்பர்.

நூற்பா எண் 9

னகார இறுவாய்ப்

பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப.


னகார இறுவாய்- னகாரமீறாக

பதினெண் எழுத்தும் - பதினெட்டு எழுத்துகளும்

மெய்யென மொழிப - மெய்யெழுத்தென புலவர் கூறுவர்.

விளக்கம்

'ககரம்' முதலாக 'னகரம்' ஈறாகவுள்ள பதினெட்டு எழுத்துகளையும் மெய்யெழுத்துகளென்று புலவர் கூறுவர்.





கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...