சனி, 13 ஜனவரி, 2024

அசைபிரித்தலில் குற்றியலிகரம் அலகு பெறுமா?

 அசைபிரித்தலில் குற்றியலிகரம் அலகு பெறுமா?


குற்றியலிகரம் என்றால் என்ன? 


குற்றியலுகரம் நிலைமொழியாய் நிற்க வருமொழியில் யகரம் வரின் நிலைமொழியீற்றுகரம் இகரமாய்த்திரியும் இதனையே குற்றியலிகரம் என்போம். 


அலகிடுதலில் பலரும் இதனை குறிலெழுத்தாகக்கொண்டு அலகிடுகின்றனர் இதனால் பிழை நேர்கிறது. 


வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமையிலாத சொலல் என்னும் குறட்பாவை அலகிடும்போது தடுமாறுகின்றனர்.


இக்குறளில் இரண்டாவது சீர் மூன்றாவது சீர் அசைபிரிப்பில் குழப்பம் வருகிறது.


வாய்/மை - தேமா

எனப்/படு/வது- நிரை நிரை நிரை -கருவிளங்கனி 

யா/தெனின்/- கூவிளம்


இப்படிப்பிரிக்கின்றனர். இதிலுள்ள பிழைகள்

    • கனிச்சீர் வெண்பாவிற்குரிய சீரன்று. 

    • குறள் எழுதப்பட்ட வடிவம் தவறு.


எனப்படுவது-குற்றியலுகரம் 

யாதெனின் - வருமொழி முதலில் யகரம்


எனவே, குறளைச் சரியான வடிவில் முதலில் எழுதுக.


வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும் தீமையிலாத சொலல்.


வாய்/மை- தேமா

எனப்/படு/வ- நிரை நிரை நேர் - கருவிளங்காய்

தியாதெனின் - நிரை நிரை - கருவிளம் 


இப்போதும் அசைபிரித்தலில் குழப்பமே 


இரண்டாம் சீர் - காய்

மூன்றாம் சீர்- நிரையில் தொடங்குகிறது.


காய்முன்நேர் மட்டுமே வெண்பாவில் வரும். 


இதனை எவ்வாறு சரிசெய்வது? 


தொல்காப்பியரை நாடுவோம். 


தொல்காப்பியச்செய்யுளியலில் எட்டாவது நூற்பா இதற்கான தெளிவைத்தருகிறது. 


'ஒற்றெழுத் தியற்றே குற்றியலிகரம் ' 


குற்றியலிகரமானது ஒற்றைப்போன்றும் எழுத்தைப்போன்றும் ஈரியல்பு கொண்டது. 

(எழுத்து - குறிலெழுத்து)


அசைபிரித்தலில் குற்றியலிகரமானது ஓரிடத்தில் ஒற்றைப்போன்று அலகுபெறாமலும் மற்றோரிடத்தில் குறிலெழுத்தைப்போன்று அலகுபெற்றும் வரக்கூடிய ஈரியல்பு கொண்டது.


வாய்/மை- தேமா

எனப்/படு/வ- நிரை நிரை நேர் - கருவிளங்காய்

(தி)யாதெனின் - நேர் நிரை - கூவிளம் 


இதில் குற்றியலிகர எழுத்தான (தி) ஒற்றைப்போன்று அலகுபெறாமல் வரும்.


இப்போது சரியாக அசைபிரிப்பு அமைந்துள்ளது.



அலகுபெற்று வருமிடம்


கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம்

நீடின்றி யாங்கே கெடும்.   


இக்குறளில்


நீடின்று-குற்றியலுகரம் 

யாங்கே - வருமொழி முதலில் யகரம்


குற்றியலிகரமாகி 'நீடின்றி'என்றானது.


நீ/டின்/றி-தேமாங்காய்


யாங்/கே -தேமா


தளை - காய் முன் நேர்


இவ்விடத்து குற்றியலிகரம் குறிலைப்போன்று அலகு பெறுகிறது. 


இந்த நுட்பத்தையறிந்து மாணவர்களுக்குக்கற்பிக்கவேண்டும்.


என்றும் அன்புடன்

இரா.முருகன்

தமிழாசிரியர்

அரசூர்

8012906557

கருத்துகள் இல்லை:

மனோன்மணியம்

  4.1  மனோன்மணீயம் மொத்தம் ஐந்து அங்கங்களில் மனோன்மணீயம் அமைந்து இருக்கிறது. அங்கம் என்பதை ஆங்கிலத்தில்  Act  என்று குறிப்பிடலாம். களம் என்ப...